Published : 30 Oct 2015 10:48 am

Updated : 30 Oct 2015 10:49 am

 

Published : 30 Oct 2015 10:48 AM
Last Updated : 30 Oct 2015 10:49 AM

வருகிறார்கள் ஆனைகட்டி ‘மாரி ’கள்...

அவர்களிடம் இருப்பது ஒரே ஒரு கைப்பந்து. அதுவும் பத்து, பன்னி ரெண்டு தையல்களைக் கண்டிருக்கிறது. எனினும், அந்த ஒரே ஒரு கைப்பந்தை மட்டும் வைத்துக் கொண்டு தங்களின் கனவுகளை நெய்துவருகிறார்கள் அவர்கள்.

அவர்கள்...?


"டேய்... மாப்ள.. ஆனை கட்டிக்காரங்கடா... சுதாரிச்சுக்க!" என்று எதிர் அணியினர் எச்சரிக்கை கொள்ளும் அளவுக்கு, அந்த வீரர்களின் விளையாட்டில் அப்படி ஒரு தீப்பொறி!

நீலகிரி மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ளது ஆனைகட்டி எனும் இருளர் கிராமம். மாவட்டத்தில் எங்கு வாலிபால் போட்டிகள் நடைபெற்றாலும், அங்கு இந்த கிராமத்தின் அணியினரைக் காணலாம்.

வறுமையில் உழன்றாலும் அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு சர்வீஸும் அப்படி ஒரு விசையுடன் அமைந்திருக்கின்றன.

மைதானத்தில் ஒரு ஐந்தாறு பேர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ‘துருதுரு' வென ஓர் இளைஞர் ஓடி வருகிறார். அவரைப் பார்த்ததும் அனைவரும் 'ஹே..மாரி!' என்று குரல் கொடுத்து குதூகலமடைகிறார்கள்.

அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி இளைஞர். பல்கலைக்கழக அளவில் வாலிபால் போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்துக்கே பெருமை சேர்த்த வீரர். உள்ளூர் எஃப்.எம்.மில் பகுதி நேர நிருபர். தன்னைப் போன்ற வளரும் வீரர்களுக்குப் பயிற்சியாளர். சுருக்கமாகச் சொன்னால் ‘ஊருக்கொரு இளைய தலைவன்' என்று மாரியைச் சொல்லலாம்.

இப்போது அந்த கிராமத்தின் இளைஞர்களுக்கு மாரிதான் முன்மாதிரி!

"அய்யோ அந்த அளவுக்கெல்லாம் நான் இன்னும் வளரலைங்க..." என்று வருகிற சிரிப்பை அடக்க முடியாமல் சொல்கிறார். பேச்சிலும் விளையாட்டிலும் அவ்வளவு ஒரு நேர்த்தி.

"பொறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த கிராமம்தான் சார். பழங்குடிகளுக்கு இருக்குற எல்லாப் பிரச்சினைகளும் இங்க இருக்கு. அதனால் இங்க எல்லா வீட்டுலயும் வறுமையும் இருக்கு. இங்க 18 வகையான கீரை விளையுதுன்னு சொல்றாங்க. அந்தந்த சீஸன்ல கிடைக்கிற கீரை, இங்க விளையுற கிழங்கு வகைகள், பழைய கஞ்சி - இதுதான் எங்க டயட்.

இங்க டீ இலை பறிக்கிறதும், விவசாயமும்தான் முக்கியமான தொழில். அதனால இங்க வளர்ற பிள்ளைகள் எல்லாம் சின்ன வயசுல இருந்தே இஸ்கூல் நேரம் போக, மத்த நேரமெல்லாம் காட்டுலதான் வேலை செய்வாங்க.

அதனாலேயே எங்க உடம்புலயும் மனசுலயும் இயல்பாவே வலு இருக்கு. அப்புறம் முக்கியமா நீலகிரி மாவட்டத்துல முக்கியமான விளையாட்டுன்னு பார்த்தா வாலிபால்தான். தோட்ட வேலை செஞ்சு செஞ்சு எங்க கையெல்லாம் காய்ச்சுப் போயிருக்கும். அதனால நாங்க கேம்ல பண்ற ஒவ்வொரு சர்வீஸும் அவ்வளவு அசால்ட்டா, ஆனா செம ஃபோர்ஸா இருக்கும் சார். பாக்குறீங்களா" என்று சொல்லிவிட்டு, அங்கு உள்ள ஒரு சிறுவனுக்கு பந்தை பாஸ் செய்கிறார். அந்தச் சிறுவன் அடிக்கும் சர்வீஸ் எதிர் அணியினரின் கோர்ட்டில் ‘கெத்'தாக விழுகிறது!

"இஸ்கூல்ல டிஸ்ட்ரிக்ட் அளவுல விளையாண்டு நிறைய சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன். அது அப்படியே என்னை கோயமுத்தூர்ல இருக்குற ஒரு காலேஜ்ல கொண்டுபோய் விட்டுச்சு. அங்க சேர்ந்ததுல பாரதியார் யுனிவர்சிட்டி அளவுல விளையாட முடிஞ்சுது.

காலேஜ் முடிச்சதுக்கப்புறம் ஊருக்குத் திரும்பிட்டேன். இங்க பார்க்கிறதுக்கு நிறைய வேலை இருக்கே. நம்ம பசங்களை எல்லாம் வளர்த்துவிடணும். கொஞ்சம் கொஞ்சமா இங்க இருக்குற இளைஞர்கள் எல்லாம் காலேஜ் படிக்கிறதுக்காக சமீபகாலமாத்தான் கோயம்புத்தூர், ஈரோடுன்னு கிராமத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்குப் போக ஆரம்பிச்சிருக்காங்க. அவங்கள்ல பாதிப்பேர் வாலிபால் ப்ளேயர்ஸ்தான். இன்னும் கொஞ்ச வருஷத்துல இந்த ஊர்ல இருந்து டிஸ்ட்ரிக்ட், யுனிவர்சிட்டி அளவுல விளையாடக்கூடிய பசங்க வருவாங்க பாருங்க. எங்களுக்கெல்லாம் எங்க ஊர்க்காரங்கதான் ஆதரவு.

இப்பத்திக்கு எங்களுக்கு இருக்குற ஒரே பிரச்சினை... அய்யன் இளைஞர் நலச்சங்கத்தோட பதிவை இன்னும் புதுப்பிக்க முடியாத நிலையில இருக்கோம். இந்தச் சங்கம் மூலமா வருஷா வருஷம் தீபாவளி சமயத்துல எங்க ஊர்ல எங்களால முடிஞ்ச அளவுக்கு பக்கத்து ஊர்ல வாலிபால் விளையாடறவங்க எல்லாத்தையும் கூட்டிட்டு வந்து டோர்னமென்ட் நடத்துவோம்.

எங்க சங்கத்தோட பதிவைப் புதுப்பிக்கணும்னா சில டாக்குமென்ட்ஸ் வேணும்னு சொல்றாங்க. ஆனா நாங்க இருளர்ங்கிறதால எங்களால அந்த டாக்குமென்ட்ஸை வாங்குறதுல நிறைய சிக்கல் இருக்கு. இந்த வருஷம் தீபாவளிக்கு டோர்னமென்ட் நடத்த முடியுமாங்கிறது தெரியலை..!" என்று மாரி சொல்லும்போது, அவர் குரல் உடைகிறது.

விடு மாரி... அதையும் பார்த்துக்குவோம்!

படங்கள்: ந. வினோத்குமார்


ஆனைகட்டிஇருளர் கிராமம்வாலிபால் போட்டிகள்இளைஞர்கள் முன்மாதிரி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x