‘உயர்ந்த' சாதனை!

மசி குரின்
மசி குரின்
Updated on
2 min read

கின்னஸ் சாதனைக்கென எந்த வரையறையும் கிடையாது. புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் எதுவும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துவிடலாம். அப்படித்தான் அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயதுப் பெண் கின்னஸில் இடம்பிடித்துள்ளார். இந்தப் பெண்ணின் கால்கள்தான் உலகிலேயே மிகவும் நீளமான கால்கள் என்ற சாதனையுடன் கின்னஸில் இடம் பிடித்துள்ளார்.

பொதுவாக 6 அடி உயரம் இருந்தாலே, தென்னைமரம் என்று கிண்டலாக அழைப்பார்கள். ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த மசி குரின் என்ற இளம் பெண்ணின் உயரம் 6 அடி 10 அங்குலம். தெருவில் நடந்துவந்தால், ஓர் ஏணி நடந்துவருவதுபோல இருக்கிறார் மசி குரின். இவருடைய மொத்த உயரத்தில் கால்கள் மட்டுமே 4 அடி. அதாவது மொத்த உயரத்தில் 60 சதவீதம் கால்களின் உயரம். இதனால், உலகின் நீளமான கால்களைக் கொண்ட மனிதர் என்ற கின்னஸ் சாதனையை மசி குரின் படைத்துள்ளார். அண்மையில் இதற்கான சான்றிதழையும் கின்னஸ் நிறுவனம் அவருக்கு வழங்கியது.

சாதனை விருப்பம்

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இவருடைய கால்களின் அளவைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். நம்மூர்வாசிகளின் சராசரி உயரத்தில் 75 சதவீதத்தைக் கால்களின் நீளம் மூலமே இவர் தொட்டுவிட்டார். மசி குரினின் இடது கால் 135.267 செ.மீ. நீளமும் வலது கால் 134.3 செ.மீ நீளமும் கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, உலகின் நீளமான கால்கள் கொண்ட பெண் என்ற சாதனையைப் பெற்றிருந்த ரஷ்யாவின் எகடெரினா லிசினா என்ற பெண்ணின் சாதனையை முறியடித்து மசி குரின் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

கால்களின் நீளம் பற்றி மசி குரினிடம் கேட்டால், அவருக்கு வருத்தம் எதுவும் இல்லை. “கால்களின் உயரத்தை வைத்து இதுவரை யாரும் என்னைக் கேலி செய்தது கிடையாது. நான் ரொம்ப உயரமாக இருக்கிறேன் என்றுதான், நண்பர்கள் சிலர் கிண்டல் செய்வார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கால்கள் சராசரி உயரத்தைவிட அதிக வளர்ச்சி அடைந்துள்ளதை உணர்ந்தேன். இந்த உயரத்தின் காரணமாக எந்த உடையும் எனக்குப் பொருந்துவதில்லை. பிரத்யேகமாக அளவு எடுத்து, தைத்துத்தான் உடைகளை அணிந்துவருகிறேன்” என்று சொல்லும் மசி குரின், மாடலிங் துறையில் களமிறங்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் உள்ளார்.

கின்னஸ் சாதனையைத் தாண்டி, உலகின் உயரமான மாடல் என்ற சாதனையை நிகழ்த்த வேண்டும் என்பதே இவருடைய விருப்பமாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in