Published : 13 Oct 2020 09:51 AM
Last Updated : 13 Oct 2020 09:51 AM

இந்திய ஜோடியின் முதல் டிரைவ்-இன் திருமணம்!

கரோனா காரணமாக நடத்த முடியாமல் போன திருமணங்களை எல்லாம் இந்த ஊரடங்குத் தளர்வுகளில்தான் பலரும் இங்கே நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கிலாந்திலோ திருமணங்களில் விருந்தினர்களை அழைக்க இப்போதும் ஏகக் கெடுபிடிகள். இதனால், இங்கிலாந்தில் டிரைவ்-இன் திருமணங்களுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. அதன் முதல் திருமணத்தை இந்திய வம்சாவளி ஜோடி இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியில் நடத்திக் காட்டியுள்ளது.

டிரைவ்-இன் திரையரங்குகள் எப்படிச் செயல்படுகின்றனவோ, அதுபோலவேதான் இந்தத் திருமணமும் நடந்தேறியிருக்கிறது. இதற்காக 500 ஏக்கர் பரப்பில் உள்ள கால்ஃப் மைதானம் பதிவுசெய்யப்பட்டது. 250 விருந்தினர்கள் திருமணத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விருந்தினர்கள் எல்லோரும் விதம்விதமான கார்களில் கால்ஃப் மைதானத்துக்கு வந்து காத்திருந்தார்கள். மைதானத்தின் மத்தியில் பெரிய டிஜிட்டல் திரை வைக்கப்பட்டிருந்தது.

கரோனா விதிமுறைகள் காரணமாகச் சமூக இடைவெளியுடன் மணமகன் வினல் பட்டேல், மணமகள் ரோமா போபட் இருவரும் மணந்துகொண்டனர். இந்தத் திருமணத்தை காரில் அமர்ந்தபடியே விருந்தினர்கள் பெரிய திரையில் கண்டுகளித்தனர். திருமணம் முடிந்த பிறகு திருமண ஜோடி, பேட்டரி காரில் அமர்ந்தபடி கார்களைச் சுற்றிச்சுற்றி வந்தது. அப்போது விருந்தினர்கள் ஹாரன் மூலம் ஒலி எழுப்பி திருமண வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்கள் கழிவறைக்குச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். மற்றபடி காரைவிட்டுக் கீழே இறங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணம் முடிந்த பிறகு கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாக்கெட்டுகளில் தயாராக இருந்த திருமண விருந்து விருந்தினர்களின் காருக்கே எடுத்துச்சென்று வழங்கப்பட்டது. நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்தத் திருமண நேரடிக் காட்சிகளை மற்ற பகுதிகளில் உள்ள நண்பர்கள் ஆன்லைன் மூலம் கண்டுகளித்தனர்.

இனி கரோனா காலம் முடியும்வரை இதுபோன்ற புதுமையான மேலும் பல டிரைவ்-இன் திருமணங்களை உலகம் பார்க்கக்கூடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x