

பள்ளி, கல்லூரி முடித்த இளைஞர்கள் வேலையில் சேர்ந்த பின்னர் தாங்கள் படித்த பள்ளியையும் கல்லூரியையும் நினைத்துப் பார்ப்பதும் வாய்ப்புக் கிடைத்தால் அங்கு செல்வதும் வழக்கமே. பெரும்பாலும் இப்படியான சந்திப்புகள் மேல்நிலைப் பள்ளி அளவிலும் கல்லூரி அளவிலுமே நடைபெறும்.
ஆனால் இதற்கு மாறாக, புளியங்குடி பரமானந்தா நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அந்தப் பள்ளியிலிருந்து சென்று சுமார் பத்து வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் அங்கு சந்தித்தார்கள்.
பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை ஆசிரியர், மாணவர் என்ற வேறுபாடுகளை மறந்து அனைவரும் நினைவுகூர்ந்தார்கள். பரமானந்தா நடுநிலைப் பள்ளியின் 96 ஆண்டு கால வரலாற்றில் இது மிகவும் புதுமையான அனுபவம் என்றார் இப்பள்ளியின் செயலர் ஞானப்பிரகாசம்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி எபநேசர் கமலம், தலைமை ஆசிரியர் செல்வசுகுணா, முன்னாள், ஆசிரியர்கள், மாணவர்கள் மணிகண்டன், இந்திரா, காளி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். உற்சாகமான இந்த நாளை நினைவுகூரும்படி அனைவரும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்கள், நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.