

ஒளிப்படத்துக்கு வித்தியாசமாக போஸ் கொடுக்கும் காலம், காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. மாறாக, கண்ணாடி அட்டைப் பலகைகள் மூலம் வேடிக்கையாகத் தோற்றமளித்து ஒளிப்படம் எடுக்கும் பழக்கம் பரவிவருகிறது. இதற்கென பிரத்யேக போட்டோ பூத் முறை உலகெங்கும் அதிகரித்துவருகிறது.
அந்த வகையில் ஆசியாவின் முதல் ‘வட்டக் கண்ணாடி போட்டோ பூத்’ (Round mirror Photo booth) சென்னை கோட்டூர்புரத்தில் இயங்கிவருகிறது.
கண்ணாடி வழியே ஒளிப்படம் எடுப்பதுதான், இதன் தனிச்சிறப்பு. அதாவது, போட்டோ எடுக்க வருவோர் இந்த போட்டோ பூத்தில் நின்றபடி ஒளிப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். இங்கே வருபவர்கள் எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்பதற்கு போட்டோ பூத் உரிமையாளர்களே வழிகாட்டுவார்கள். விருந்தினர்களைப் பார்த்தவாறு கண்ணாடி அமைக்கப்பட்டிருக்கும். ஒளிப்படம் எடுக்க விரும்புவோர் கண்ணாடி முன் நிற்க வேண்டும், சிரிக்க வேண்டும், அவ்வளவுதான். கண்ணாடியில் தெரிந்த பிம்பம் கைக்கு வந்துவிடுகிறது.
சென்னையில் இந்த முறையில் ஒளிப்படங்களை போட்டோ பூத் அமைத்து எடுத்துவருகின்றனர் ஆனி டோரா, அவினாஷ் ஆகிய இருவரும். இவர்கள் காட்சிச் தொடர்பியல் பட்டதாரிகள். படிக்கும்போதே ஒளிப்படம் எடுப்பதில் ஆர்வம்கொண்டிருந்தவர்கள்.
இந்த யோசனை எப்படி வந்தது?
“வன விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைத்தான் ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோதுதான் இந்த யோசனை வந்தது. போட்டோ பூத்தில் எல்லோரும் வழக்கம்போல் ஒளிப்படங்களை எடுத்துக்கொள்கிறார்கள். ஒளிப்படத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஒளிப்படம் வந்த பிறகுதான், பார்த்துத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒளிப்படம் எடுப்பதற்கு முன்பு அவர்களே தங்கள் விருப்பப்படி நின்றுகொண்டு ஒளிப்படம் எடுப்பது திருப்தியைத் தரும் என்று நினைத்தேன். அதனாலேயே இந்த முறையில் போட்டோ பூத்தைத் தொடங்கினேன்” என்கிறார் ஆனி டோரா.
பழைய ஒளிப்படம் எடுக்கும் முறையை செல்ஃபி விழுங்கியது. பழைய முறையை மீட்டு, அதில் நவீனத்தைப் புகுத்தும் இந்தப் புதிய முயற்சிக்குப் பலன் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.