கண்களில் மிளிரும் ஒலிம்பிக் கனவு
எத்தனை பதக்கங்களை, வெற்றிக் கோப்பைகளை அவர் வைத்திருக்கிறார் என்று உடனே சொல்லிவிட முடியாது. தங்கம், வெள்ளி என அத்தனை பதக்கங்களை வென்றிருக்கிறார். தங்கப் பதக்கங்கள் மட்டும் 200-க்கும் குறையாது. யார் அவர்? கோவை, ஒண்டிப் புதூர், சிஆர்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் நந்தினி. சமீபத்தில் அகில உலக பள்ளிகளுக்கிடையேயான தடகளப் போட்டியில் பங்கேற்கத் தேர்வுசெய்யப்பட்டார். சீனா, யுஹான் நகரில் கடந்த ஜூன் மாதம் நடந்த அந்தப் போட்டியில் பங்கேற்று மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
நந்தினியின் அப்பா ஆர்.சத்தியநாராயணன், டெம்போ டிரைவர்; தாய் தனலஷ்மி. சத்தியநாராயணனின் கனவு விளையாட்டு வீரராக வேண்டும் என்பது. ஆனால் அது நிறைவேறவில்லை. ஆகவே அதை நிறைவேற்றும் வகையில் மகளை வளர்க்கிறார். பள்ளியில் பயிற்சியாளரும் கிடைக்க, எல்கேஜி படிக்கும் போதிருந்தே தடகள விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்தார்.
8 வயது முதலே 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் என மூன்று பிரிவுகளிலும் அசத்தியிருக்கிறார். 17 வயதுக்குள்ளானவர் பிரிவுகளில் 2011-ல் மாநில அளவில் சென்னையில் நடந்த குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டத்தை 63 விநாடிகளில் முடித்து அந்த ஆண்டு சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், மூன்று முறை உயரம் தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்), 100 மீட்டர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் தொடர்ந்து 4 வருடமாக மாநில அளவில் முதலிடம் பெற்றுவருகிறார். கடந்த 4 வருடத்தில் ஐந்து முறை தேசிய அளவில் இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார்.
2011-ல் லக்னோவில் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம், 2014-ல் ஹைதராபாதில் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளி, விஜயவாடாவில் தடைதாண்டுதலில் வெள்ளி, 2015-ல் ராஞ்சி டிராபிக்கில் ட்ரிபிள் ஜம்ப்பில் வெள்ளி என அவர் சென்ற இடங்களிலிருந்து பதக்கம் பெறாமல் திரும்பியதில்லை. அவரது சாதனைகளைப் பயிற்சியாளர் டி.நந்தகுமாரும் பள்ளி நிர்வாகி ஜெகதீசனும் தாளாளர் வெங்கடேசனும் பட்டியலிடும்போது தலைசுற்றுகிறது.
நினைவு தெரிந்த நாள் முதலே எனக்கு விளையாட்டில் ஈடுபாடு அதிகம் என்று சொல்லும் நந்தினி, ‘‘ஆரம்பத்தில் அம்மா ரொம்பவும் பயந்தார் என்றும் ஆசிரியர்கள்தான் தைரியம் சொன்னார்கள்’’ என்றும் கூறுகிறார்.
சீனா, யுஹான் நகரில் அவர் பங்கேற்ற மும்முறை தடைதாண்டும் போட்டியில் மூன்றாமிடமும் தடை ஓட்டத்தில் ஐந்தாமிடமும் பெற்றிருக்கிறார். “இரண்டு போட்டிகளிலுமே தங்கம் வென்றிருக்க வேண்டியவள் நான். அங்குள்ள டிராக்கில் ஓடி பயிற்சி இல்லாததாலேயே தங்கம் கைநழுவியது. இருந்தாலும் விட மாட்டேன். அடுத்த ஒலிம்பிக்கில் நான் பங்கேற்று தங்கம் வென்றே தீருவேன்!” என்று சொல்லும் அவரது கண்களில் ஒலிம்பிக் கனவு மிளிர்கிறது.
