Published : 25 Sep 2015 02:23 PM
Last Updated : 25 Sep 2015 02:23 PM

ஐ.டி.உலகம் 16- சி.எஸ்.ஆர். என்னும் சிக்கல்!

சமூகத்துக்கான பெருநிறுவனத்தின் பங்களிப்பு என்பதுதான் கார்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி. சி.எஸ்.ஆர் ஆக்டிவிட்டி என்று இதனை அழைக்கிறார்கள். அரசும் என்.ஜி.ஓக்களும் செய்யாத பல விஷயங்களைச் சமூகத்துக்குச் சத்தமின்றி செய்வதுதான் இந்த முயற்சி. ஆனால், இதிலும் ஊழியர்கள் நசுக்கப்படுகிறார்கள்.

ரூ.5 கோடி வருமானம் உள்ள எந்த நிறுவனமும் சி.எஸ்.ஆர் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று கம்பெனிகள் சட்டம் 2013 கூறுகிறது. இதன்படி, இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றன. இதற்காக ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி செலவழிக்கப்படுவதாக இந்தியப் பெருநிறுவன விவகார மையம் கூறுகிறது. ஒரு நிறுவனம் தனது மொத்த வருவாயில் 2 சதவீதத்தை சி.எஸ்.ஆர் செயல்பாட்டுக்காகச் செலவழிக்க வேண்டும் என்பதும் கம்பெனி சட்டத்தின் 135-வது உட்பிரிவில் கூறப்பட்டுள்ளது.

சட்டம் இயற்றிவிட்டால் செய்துதானே ஆக வேண்டும். அதற்காகவே, ஆண்டுக்கு ஆண்டு சி.எஸ்.ஆர் செயல்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. சம்பளம், பதவி உயர்வு, மன அழுத்தம் என்று புழுங்கும் ஐ.டி. ஊழியர்களுக்கு சி.எஸ்.ஆர் செயல்பாடு கிட்டத்தட்ட ஒரு சாபமாகவே சுமத்தப்படுகிறதாம். சமூகத்துக்கு நல்லது செய்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தால் ஊழியர்களுக்கு என்ன பிரச்சினை என்று பொதுவாகக் கேள்வி எழலாம்.

சி.எஸ்.ஆர் ஆக்டிவிட்டி என்று வந்துவிட்டால் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் மார்கெட்டிங் எக்சிகியூட்டிவாகவும், டிரைவராகவும், காசாளராகவும், நடன இயக்குநராகவும், பேச்சாளராகவும் பல அவதாரங்களை எடுக்க வேண்டியிருக்கும் என்று தான் பட்ட பாடு குறித்து விளக்குகிறார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிற மோகன்.

அவர் கூறும்போது, ‘சிஎஸ்ஆர் சேவையாற்ற எங்கள் நிறுவனம் நாள் குறித்து என்ன தலைப்பின் கீழ் சிஎஸ்ஆர் பணிகளைச் செய்யலாம் என்று எங்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. கூவத்தைச் சுத்தம் செய்வதில் ஆரம்பித்து கறுப்பு பணத்தை மீட்கலாமே வரை ஆளாளுக்கு ஐடியாக்களை மின்னஞ்சல் செய்தார்கள்.

இறுதியாகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்வதற்காக ஒரு பேரணி நடத்துவது என்று திட்டமிடப்பட்டது. பேரணியில் கல்லூரியில் படிப்பவர்கள், அதுவும் மாணவிகள்தான் பங்கேற்க வேண்டும் என்று கூறினார்கள். இங்கிருந்துதான் எனக்குப் பிரச்சினை தொடங்கியது என்று ட்விஸ்ட் வைக்கிறார் மோகன்.

பேரணிக்காக மாணவிகளை அழைத்துவரும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டதாம். சென்னையிலுள்ள முக்கிய கல்லூரிகளுக்கும் சென்ற அவருக்குப் பெரும்பாலான முதல்வர்கள் சொன்ன பதில் ‘மார்ச் மாதம் பார்த்து சி.எஸ்.ஆர் பண்றீங்களே. இது எக்ஸாம் டைம் ஆச்சே, ஸ்டூடன்ஸ தொல்லை பண்ணாதீங்க’ என்று துரத்தினார்களாம்.

இந்த விஷயத்தை நிறுவனத்திடம் சொன்னபோது, ‘புராஜெக்ட்டில் தான் சொதப்புகிறீர்கள் என்றால், இது மாதிரி விஷயங்களில் கூடவா’ என்று குட்டு வைத்தார்களாம். ‘எனக்கு இது தேவையா. என் வேலையில என்ன குத்தம் கண்டுபுடிச்சீங்க’ என்று பொங்கியவருக்கு டெர்மினேஷன் கடிதம் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து அறிவுசார் ஊழியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த அருண் பிரகாஷ் கூறும்போது “ஒரு நிறுவனத்தில் சி.எஸ்.ஆர் செயல்பாடுகள் ஆரம்பிக்கிற அறிகுறிகள் தெரிந்தாலே, நிறுவனம் மாறுவதற்கு நிறைய பேர் தயாராகி விடுவார்கள். ஏனென்றால், ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுத்த கதையாக சி.எஸ்.ஆர் செயல்பாடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் இழப்பது அதிகம். சி.எஸ்.ஆர் நடவடிக்கைகளை சாஃப்ட்வேர் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்தக் கூடாது. அதற்கென்று தனிக் குழுக்களை நியமிக்க வேண்டும்” என்று சொல்லும் அருண், எந்த நிறுவனமும் அப்படிச் செய்வதில்லை என்கிறார்.

முதலில் சி.எஸ்.ஆர் பற்றிய அறிவிப்பு மின்னஞ்சலில் வருமாம். எந்தத் தலைப்பில் பணிகளை மேற்கொள்ளலாம். எந்தப் பகுதியில் மேற்கொள்ளலாம் என்றெல்லாம் நல்ல பிள்ளையைப் போல் ஊழியர்களிடம் கேள்வி கேட்பார்களாம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பிறகு அவர்களே முடிவை அறிவிப்பார்களாம். அன்று முதல் பெரும்பாலான ஊழியர்களுக்குச் சனி, ஞாயிறு விடுமுறை கிடையாது, பணி முடிந்த பிறகும் அலுவலகத்தில் இருக்க வேண்டுமாம்.

இதுபற்றி அருண் கூறுகையில், “எனக்குத் தெரிந்து ஒரு நிறுவனத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட நிகழ்ச்சி நடத்துவது என முடிவெடுத்தார்கள். அந்த ஆதரவற்றோர் மையத்தில் இருநூறு குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுக்கு கிஃப்ட் வாங்க வேண்டும் என்பதற்காக ஊழியர்கள் அனைவரும் பணம் தர வேண்டும் என்று மேனேஜர் மின்னஞ்சல் செய்தார்.

அதில் எல்லோருக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால், வேறு வழியின்றி கையிலிருந்த காசைப் போட்டு வாங்கிக் கொடுத்தார்கள். அந்த நிகழ்ச்சி நடக்கிற நாளில் நிறுவனம் சார்பில் கலை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பெண் ஊழியர்கள் நடனமாட வேண்டும் என்று அந்த ஐ.டி. நிறுவனம் பணித்தது.

புராஜக்ட் முடிக்கிற நேரத்தில் சி.எஸ்.ஆர் ஆக்டிவிட்டிஸுக்கு அழைத்து ஹெச்.ஆர். அல்லல் தருவார். ஆனால், இந்தப் பக்கம் மேனேஜரோ, ‘புராஜக்ட் இழுத்துக்கிட்டே போவது என்ன இன்கிரிமெண்ட தியாகம் பண்றியா’ என்று கேட்பார். ஹெச்.ஆருக்கும், புராஜக்ட் மேனேஜருக்கும் நடுவில் சிக்கி சக்கையாவது ஊழியர்கள்தான்.

ஐ.டி. ஊழியர்கள் சமூக பொறுப்புணர்வுக்கு எதிரானவர்கள் இல்லை. நிறுவனங்கள் மேற்கொள்ளும் சி.எஸ்.ஆர் என்பது சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு ‘நானும் துணி கொடுத்தேன் என்பதைப் போலத்தான் உள்ளது. அதன் போலித் தனத்தாலேயே இதில் ஊழியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை” என்கிறார் அருண்.

சி.எஸ்.ஆர் நடவடிக்கைகளில் புராஜக்ட் இல்லாதவர்களைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் பேருக்கு செய்யாமல், நிறுவங்கள் உணர்வோடு செய்தால்தான் உண்மையிலேயே ஒரு சமூகம் ஏற்றம் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x