

டீக்கடை, பெட்டிக்கடை கேள்விப் பட்டிருப்போம். காதல் பிரேக் அப் கடை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்தப் புது விதமான கடையைத் திறந்து கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள் கனடாவைச் சேர்ந்த சகோதரர்கள்.
காதலை வளர்க்க ஆலோசனை மையங்கள் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சந்தானம் காதல் ஆலோசகராக நடித்திருப்பார். ஆனால், காதலை முறிப்பதற்கான சேவை என்பது சினிமாவும் காணாத புதுமை. அப்படியான ஒரு சேவையை மெக்கன்சி, இவான் சகோதர்கள் இணை, இணையத்தில் வெற்றிகரமான தொழிலாக நடத்தி வருகிறது.
சொந்த அனுபவம்
மெக்கன்சிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்தான் இந்த விநோதமான வேலையில் இறங்க உந்துதலாக இருந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய காதலி, திடீரென ஒரு நாள் பேச்சை நிறுத்திக்கொண்டுவிட்டார். என்ன காரணம் என மெக்கன்சிக்குத் தலைகால் புரியவில்லை. பல வழிகளில் காதலியைத் தொடர்புகொள்ள முயன்றும், எதற்கும் பதில் கிடைக்கவில்லை. இவ்வளவு காலம் காதலித்தவர், திடீரென ஒரு பதிலும் சொல்லாமல் உறவை முறித்துக்கொள்வது சரிதானா என மெக்கன்சி கவலைப்பட்டிருக்கிறார்.
ஆனால், நம்ம ஊர் தேவதாஸைப் போல் தாடி வளர்த்துத் தளரவில்லை. அந்தப் பிரிவிலிருந்து மீண்ட பிறகு காதலை முறையாக முறிப்பதற்கு, நாமே ஒரு சேவையை ஏன் தொடங்கக் கூடாது என அவருக்குத் தோன்றியிருக்கிறது. அப்படி உருவானதுதான், ‘பிரேக்-அப் ஷாப்’.
முறித்துக்கொள்ள பல வழிகள்
காதலை முறித்துக்கொள்வது குறித்துக் காதலர்கள் பலர் பரஸ்பரம் பேசிக்கொள்ளத் தயங்குகிறார்கள். அதைத் தவிர்க்க இதுபோன்ற சேவை இந்தக் காலத்தில் அவசியமானது எனக் களத்தில் இறங்கியிருக்கிறார் மெக்கன்சி. ‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’ படத்தில் சந்தானம் காதல் சேவைக்குப் பலவிதமாகக் கட்டணம் வைத்திருப்பார். அதுபோல் இவர்களும் பிரேக்-அப் செய்ய பல வழிமுறைகளையும் கட்டணங்களையும் இவர்களது இணையச் சேவையில் வைத்திருக்கிறார்கள்.
இதற்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா உள்ளிட்ட பல சிறப்புச் சலுகைகளும் உண்டு. ஆறு விதமான வழிமுறைகளை இந்தச் சேவையில் தருகிறார்கள். பிரேக்-அப் செய்தியை மின்னஞ்சல் வழியாகத் தெரிவிப்பது, குறுஞ்செய்தி வழியாகத் தெரிவிப்பது ஆகிய இரண்டு சேவைகளுக்கும் 10 டாலர் கட்டணம்.
கடிதம் வழியாகத் தெரிவிக்க விரும்பினால், அதற்குக் கட்டணம் 20 டாலர். இதுவே மேம்படுத்தப்பட்ட கடிதம் வழியாகத் தெரிவிப்பதற்கு 30 டாலர் கட்டணம். தொலைபேசி வழியாகத் தெரிவிப்பதற்கான கட்டணம் 29 டாலரில் இருந்து தொடங்குகிறது.
இந்த எல்லாச் சேவைகளையும் அவர்களே காதலன் / காதலி சார்பாகச் செய்து தருவார்கள். அது மட்டுமல்லாமல் காதல் முறிவால் ஏற்படும் வேதனையில் இருந்து மீள்வதற்கு, காதல் பிரிவால் வாடுபவர்களுக்குப் பரிசுப் பொருள்களும் தரப்படுகிறது. காதல் முறிவிலிருந்து மீள்வதற்குப் பாட்டு, புத்தகம், பானம், மாத்திரைகள் அடங்கிய பரிசுப் பொதியையும் தருவித்துக்கொள்ளலாம்.
பிடிக்காத காதலி / காதலனை முறித்துக்கொள்வதற்கு இந்தச் சேவை சரி, பிடிக்காத நட்புகளை என்ன செய்ய என்று கேட்டால் அதற்கும் ஒரு சேவை இருக்கிறது. ‘பிட்ச் பொட்டீக்’ மூலமாகப் பிடிக்காத நண்பர்களுக்கு அழுகி நாற்றமடிக்கும் பூங்கொத்தைப் பொட்டலமாக அனுப்பலாமாம். எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க!