

கரோனா காலத்தில் சலூன்கள் மூடிக்கிடந்தபோது நொந்து நூடூல்ஸ் ஆனது நம் இளைஞர் சமூகம்தான். புறாக்கூடு கணக்காக வளர்த்த முடியையும் புதர் போன்ற தாடியையும் படமெடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுத் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டார்கள். ஆனால், பாதுகாப்பே முதன்மை என நினைத்த அங்கிள்கள் ‘செல்ஃப் கட்டிங்’கில் களமிறங்கினார்கள். இப்போது சலூன்கள் திறக்கப்பட்டுவிட்டன. இப்போது வரும் அங்கிள்கள் முன்னெச்சரிக்கையாக முடியை மொட்டை அடிக்காத குறையாகக் கரைத்துக்கொள்கிறார்கள். மீண்டும் சலூனுக்குப் பல நாள் கழித்து வரலாம் என்ற முன்னெச்சரிக்கை உணர்வுதான் இதற்குக் காரணம்.
ஆனால், நம் இளைஞர்கள் அப்படியல்ல. வழக்கம்போல விதவிதமாக சிகையலங்காரம் செய்துகொள்ளவே அவர்கள் விரும்புகிறார்கள் என்கிறார்கள் சலூன்காரர்கள். பெருநகரத்து இளைஞர்களோ லேட்டஸ்ட் வரவான ‘ஃபயர் கட்’ செய்துகொள்ள விரும்புகிறார்கள். அதென்ன ‘ஃபயர் கட்’?
தீப்பிடிக்கும்
‘ஃபயர் கட்’ சிகையலங்காரத்துக்கு முன்னோடி மும்பையைச் சேர்ந்த மீட் கலா (meet gala). ஓர் இளைஞரின் தலைமுடியில் நெருப்பைப் பற்றவைத்து, அநாயசமாக சிகையலங்காரம் செய்து, அதை யூடியூபில் இவர் பதிவேற்றியதைப் பார்த்து இளைஞர்கள் வாய்பிளந்து நின்றார்கள். அந்த வீடியோ வைரல் ஆகவே, அதைப் பார்த்தே பல சலூன்களில் ‘ஃபயர் கட்’ அறிமுகமாகத் தொடங்கியது. இப்போது அது இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங் ஸ்டைலாகிவிட்டது. குறிப்பாக, பெருநகரங்களில் இந்த ஸ்டைலைப் பின்பற்றும் சலூன் கடைகளில் இளைஞர்கள் மொய்க்கிறார்கள்.
‘ஃபயர் கட்’ என்பது வித்தியாசமான அழகைத் தரும் சிகையலங்காரம் அல்ல. வழக்கம்போலவே இளைஞர்கள் கேட்கும் ஸ்டைலில் முடியை வெட்டும்போது, தலைமுடியில் ரசாயனப் பொடியைக் கலந்து, அதில் நெருப்பைப் பற்றவைத்து, தலைமுடியில் நெருப்பு பற்றி எரியும்போதே மின்னல் வேகத்தில் சிகையலங்காரம் செய்யும் ஸ்டைல்.
தலைமுடியில் நெருப்பைப் பற்ற வைத்தால், முடி கருகிவிடாதா என்ற கவலையெல்லாம் இளைஞர்கள் மத்தியில் சற்றும் இல்லை. “இந்த ஸ்டைலால் உச்சந்தலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்தச் சிகையலங்காரத்தால் பிளவுபட்ட முடி, பலமிழந்த முடி போன்றவை சாம்பலாகிவிடுகின்றன. ‘ஃபயர் கட்’ செய்வதால் முடி பளபளப்பாக இருக்கும்” என்கிறார்கள் சலூன்காரர்கள்.
‘ஃபயர் கட்’ செய்தேன் என்று நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லிக்கொள்வதைக் கெத்தாகப் பார்ப்பதாகச் சொல்லும் இளைஞர்களும் உண்டு. ஆனால், இந்த ‘ஃபயர் கட்’டை யார் வேண்டுமானாலும் செய்துகொள்ள முடியாது. அடர்த்தியான முடி உள்ளவர்கள் மட்டுமே செய்துகொள்ள முடியும். இந்த ‘ஃபயர் கட்’டை செய்துகொள்ள உங்களுக்கும் ஆசை இருக்கலாம். ஆனால், கடையைப் பொறுத்து ஆயிரம் ரூபாய்வரை செலவுசெய்யத் தயாராக இருந்தால்தான், அந்தக் கடைகளை எட்டியாவது பார்க்க முடியும்!