Published : 18 Sep 2015 12:35 PM
Last Updated : 18 Sep 2015 12:35 PM

வாழ்க்கையை மனிதர்களோடு இணைக்காதீர்கள்!

என் வயது 22. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எனது குடும்பம் கடன் பிரச்சினை காரணமாகச் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. என் தந்தை சரியாய் வேலைக்குச் செல்ல மாட்டார். ஒரு நாள் எங்களை விட்டுவிட்டு அவரது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். எங்களையும் அங்கே வரச் சொன்னார். என் தாயார் மறுத்துவிட்டார்.

எட்டு வருடங்களாக என் அம்மாவும் அப்பாவும் பேசுவது இல்லை. என் அம்மா வேலைக்குச் சென்று எங்களைப் படிக்கவைத்தார். என் தாய் எங்கள் மீது உயிரையே வைத்துள்ளார். என் தந்தை வாரம் ஒரு முறை போன் செய்வார். பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது பகுதி நேரம் வேலைக்குச் சென்றேன்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்யூட்டர் சயின்ஸ் படித்தேன். இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு பெண் என் வாழ்க்கையில் வந்தார். முதலில் எனக்குப் பெரியதாய் ஈடுபாடும் இல்லை. மெல்ல மெல்ல என் மனம் அவர் பக்கம் சாய்ந்தது. பின், அவளும் இதனை அவள் தோழிகள் மூலம் அறிந்துகொண்டாள்.

என் நண்பர்களில் ஒருவன் அவளிடம் போனில் ‘நீ என் நண்பனைக் காதலிக்கிறாயா?’ எனக் கேட்க, அவள் ‘இல்லை’ என்று கோபத்துடன் சொல்லிவிட்டாள். இனிமேல் அவள் பக்கம் திரும்பக் கூடாது என முடிவெடுத்தேன். ஆனால் என்னால் அவளை நினைக்காமல் இருக்கவோ அவளிடம் என் காதலைச் சொல்லவோ முடியவில்லை.

அவள் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இப்போது வேலை செய்கிறாள். நான், எம்சிஏ இறுதி ஆண்டு படிக்கிறேன். மீண்டும் அவளது தொடர்பு கிடைத்தது. சில புத்தகங்கள் வாங்க வந்தாள். இப்படி போனில் பேசிக்கொண்டோம். தினமும் பேசுவது இல்லை. மாதம் ஒரு முறை தேவை என்றால் பேசுவாள். பண்டிகை கால வாழ்த்துகள் சொல்லும்போது பேசுவாள்.

போன் பேச்சுகள் எனது காதலை அதிகப்படுத்தின. ஆனால், அதே அளவு பயமும் இருந்தது. பிப்ரவரி மாதம் அவள் பிறந்த நாளுக்காக அவளது பெயரில் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை உருவாக்கி கூகுள் ஸ்டோரில் அப்லோடு செய்தேன். அவளது பிறந்தநாள் பரிசு என்று அவளிடம் சொன்னேன்.

இரவு அலுவலகம் முடித்துவிட்டு வரும் வேளையில் போன் செய்தாள். எடுத்த எடுப்பில் ‘என்னைக் காதலிக்கிறாயா எனக் கேட்டாள்?’. ‘ஆ’ம் என்றேன். ‘உனக்கு என்னை விட நல்ல பெண் கிடைப்பாள். எங்கள் வீட்டைப் பற்றி உனக்குத் தெரியாது. என்னை மறந்துவிடு’ என்றாள். அவளது பெயரில் நான் உருவாக்கிய அப்ளிகேஷனை நீக்கிவிடவும் கோரினாள். அதன் பின்னர் என்னிடம் பேசுவதும் இல்லை. ஃபேஸ்புக்கில் என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருக்கிறாள். ஆனால் அவளைத் தொந்தரவு செய்ய மனம் இல்லை.

ஆனால் மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. ஒருநாள் நான் சென்ற பேருந்தில் அவளும் ஏறினாள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஆனால், அவள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவளைப் பார்த்த அன்று எனக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. ஒரு நல்ல பணியில் சேர்ந்த பின்பு மீண்டும் அவளிடம் பேசலாம் எனத் தோன்றுகிறது. என் மீது அவளுக்கு நம்பிக்கை வருமா, அவளிடம் பேசலாமா?

நண்பரே, பொறுப்பான மகன், உழைப்பாளி, குறிக்கோளிலிருந்து விலகாதவர், காதலியை அடைந்தே தீர வேண்டும் எனும் வெறியுள்ளவர் என்று உங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் வேண்டாம் என்று உங்கள் காதலி நினைத்திருந்தால், அப்போதே வெட்டிவிட்டிருப்பார்! அவர் பெற்றோருக்குப் பயப்படுவதாலும், தன்னைவிட சிறந்த பெண் உங்களுக்குக் கிடைப்பாள் என்று உண்மையிலேயே நம்புவதாலும் தன் காதலைச் சொல்லாமல் மழுப்புகிறார் என்று தோன்றுகிறது.

கொஞ்ச நாள் அவரைத் தொந்தரவு செய்யாமல் விடுவதும் நல்லதுதான். நீங்களும் படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள்ளுங்கள்; பிறகு அவர்கள் வீட்டுக்குச் சென்று முறையாகப் பெண் கேளுங்கள். உங்களை மருமகனாக அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால் மகிழ்ச்சியே. சாதி, அந்தஸ்து இவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் சொல்லவில்லை. இவற்றில் இரு குடும்பங்களுக்கும் வித்தியாசம் இருந்தால், பெண்ணின் தந்தை கோபப்பட்டு உங்களை அவமானப்படுத்திக்கூட அனுப்பிவிடலாம்! அங்கிருந்து சம்மதம் வராவிட்டால் உங்கள் காதலி உங்களைத் தியாகம் செய்துவிடுவார். அந்தத் தோல்வியை உங்களால் எதிர்நோக்க முடியுமா?

இப்போது கண்டும் காணாமல் போகும் காதலி, நீங்கள் உறுதியாக இருந்தால், இளகலாம். காத்திருங்கள்; ஆனால் கால வரையறை இல்லாமல் காக்க வேண்டாம். வாழ்க்கை ஒரு சீட்டுக்கட்டு விளையாட்டு மாதிரி. நமது கைக்கு என்ன சீட்டு வருகிறதோ அதைக் கொண்டு சாமர்த்தியமாக விளையாடி வெல்ல முயல வேண்டும். நாளை என்ன என்பதை யாரும் சொல்ல முடியாது. நாம் ஆசைப்படும் ஒரு விஷயத்துக்கு இன்று முயலலாம். நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஏற்றுக்கொள்ள உங்கள் மனதைத் தயார் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், வாழ்க்கையை மனிதர்களோடு இணைக்காதீர்கள்; ஒரு குறிக்கோளோடு இணைத்துக் கொள்ளுங்கள்.



நான் கிராமப்புறத்தைச் சார்ந்த இளைஞன். மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன். எல்லோருக்கும் முடிந்த வரை நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவன். வாழ்க்கையை நேசித்து லட்சியத்துடன் வாழ்பவன். என் கண்களில் ஒருவிதப் பாதிப்பு என்பதால் கண்ணாடி அணிவேன். அதனால் உறுத்தலாகத் தான் பார்ப்பேன். நண்பர்கள்கூட உன் பார்வை வித்தியாசமாக உள்ளது என்று கூறுவார்கள். பேண்ட் அணிந்து பழக்கப்பட்ட எனக்கு, கைலி கட்டுவது சற்றே பாதுகாப்பற்றதாகத் தோன்றும். அதனால் நடக்கும்போது கைலியின் மடிப்புகளைச் சரிசெய்யும் பழக்கம் உண்டு.

இதனால் அந்தத் தெருவில் உள்ள ஒரு பெண்மணி என்னைத் தப்பான கண்ணோட்டம் கொண்டவன் என்று நினைத்து, பலரிடம் என்னைப் பற்றித் தவறாகக் கூறிவிட்டார். கேட்டவர்களும் தங்கள் பங்குக்குக் கண் காது மூக்கு வைத்து என்னைத் தவறாகச் சித்தரித்துவிட்டனர். ஆனால் என்னைப் பற்றி அறிந்த நல்ல நண்பர் ஒருவர், “தம்பி உங்களை எல்லாரும் சந்தேகிக்கிறார்கள். தெரு வழியே நீங்கள் நடமாடாதீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டதும் நான் மிகவும் நொந்துவிட்டேன்.

அந்த நகரில்தான் நான் பள்ளிக் கல்வியை முடித்தேன். ஆறு மாத காலம் அரசுப் பணி பார்த்தேன். இப்போது எங்கு சென்றாலும் பெண்கள் என்னைப் பற்றித் தப்பாகப் பேசுகிறார்கள். தினமும் காலை இதைப் பற்றி நினைப்பு வருகிறது. மிகவும் வெள்ளந்தியான என்னை மற்றவர்கள் இவ்வாறு நினைப்பது எனக்கு மிகவும் குற்ற உணர்வாக உள்ளது. இதிலிருந்து விடுபட்டு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவே முடியவில்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

மற்றவர் உங்களைத் தப்பாக நினைக்கிறார்கள் என்பதுதானே உங்கள் கவலை? நீங்கள் தப்பானவர் இல்லை என்று நீங்கள் நம்பும்போது, குற்றவுணர்வு ஏன் வர வேண்டும்? தேவையே இல்லை. ‘எல்லோரும் சந்தேகிப்பதைத் தவிர்க்க, தெருவழியே நடமாடாதீர்கள்’ என்று உங்கள் நலம் விரும்பி சொல்வது தீர்வல்ல; பிரச்சினையைத் தவிர்க்கும் வழி அது! எதிர்நோக்குங்கள்; தவிர்க்காதீர்கள். ஒரு நோயின் அறிகுறிகளுக்கு மட்டும் மருந்து கொடுத்தால், நோய் தீராது. அதை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். ஒரு பெண்மணி உங்களைப் பற்றித் தவறாகப் பேசிய உடனேயே அவரிடம் சென்று உங்கள் உண்மை நிலையை விளக்கிச் சொல்லியிருந்தால், பேச்சு வளர்ந்திருக்காது.

அடுத்து நீங்கள் குறைபாடாக நினைக்கும் இரு விஷயங்களைப் பார்ப்போம். உங்கள் கண் பார்வையில் உள்ள பிரச்சினைக்கு ஒரு கண் மருத்துவரைச் சந்தித்தீர்களா? உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா என்றும் அவரிடம் கேட்டீர்களா? லுங்கியைச் சரிசெய்து கொள்ளும் பழக்கத்தைப் பிறருக்காக அல்ல, உங்களுக்கே அது அநாகரிகமாகத் தோன்றாமல் இருக்க, கவனித்து மாற்றிக்கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய வம்பு ஒலிபரப்பப்பட்ட தகவல் போல் எங்கும் பரவி பல பெண்கள் உங்களைத் தப்பாகப் பேசுவதாக நீங்கள் நம்புகிறீர்கள்.

இதனால் நீங்கள் அனுபவிக்கும் வேதனை எனக்குப் புரிகிறது. தாழ்வு மனப்பான்மையினாலும் நீங்கள் அவதிப்படுகிறீர்கள். உங்களைப் பற்றிய வம்புகளுக்கு எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. நீங்கள் உடனடியாக ஒரு மனநல மருத்துவரை / ஆலோசகரைச் சந்தித்து, இதுபற்றிப் பேச வேண்டும். தாமதப்படுத்தினால், உங்கள் வருத்தம், பயம் இவை கூடி நிம்மதியின்றி தவிக்கும் நிலைக்குப் போய்விடுவீர்கள்.



உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x