Published : 04 Sep 2015 12:45 PM
Last Updated : 04 Sep 2015 12:45 PM

உறவுகள்: துவாரத்தின் வழியே உலகத்தைப் பார்க்காதீர்கள்!

என் வயது 26. ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். என் தந்தை மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு எங்களைப் படிக்க வைத்துவிட்டார். நாங்களும் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கிறோம்.

என் தலை சற்றுப் பெரியதாகவும், இடது கண் சற்று மூடியும் இருக்கும். பள்ளி முதல் வீடு வரை அனைவரும் என்னை நீட்டு தலையா, ஒன்றரைக் கண்ணா என்றுதான் அழைப்பார்கள். ஆரம்பத்தில் அவமானமாக இருந்தாலும் நாளடைவில் அது பழகிவிட்டது. அவமானங்கள் துரத்திய தருணத்திலும் என் அத்தை மகள் எனக்கு ஆறுதலாக இருந்தாள். எங்களுக்குள் சிறு வயது முதல் நல்ல புரிதல் இருந்தது. எனது முன்னேற்றத்தில் அக்கறை காட்டி ஊக்குவிப்பாள்.

நான் 12 ம் வகுப்பு படித்தபோது அவர்கள் வீட்டில் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. அவள் என்னை விரும்புவதாக என் குடும்பத்தாரிடம் கூறினாள். என்னிடம்கூட அதைச் சொல்லவில்லை. இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. என்னிடம் கேட்டபோது, பயத்தில் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டேன். எனக்கோ அவளை மிகவும் பிடிக்கும் ஆனால் அது காதல் என்று எனக்கு மிகவும் தாமதமாகத்தான் புரிந்தது.அதன் பிறகு நான் அவளிடம் பேசத் தடை. எனக்காக வீட்டில் அனைவரிடமும் பேசாமல் மூன்று வருடங்கள் கழித்தாள். அவளை என்ன சொல்லி சம்மதிக்க வைத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்தது.

நாட்கள் வருடங்களாக மாறின. வேலை, அலுவலகம் என்று என்னைத் தயார் செய்துவந்தும் அவள் நினைவு என்னை விட்டு நீங்க மறுக்கிறது. என்னைப் போல் யாரும் தனிமையில் இருப்பதைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பேன். எனவே எனக்கு நண்பர்களும் அதிகம். என்னிடம் பேசினால் அவர்கள் பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு கிடைகிறது என்று பலர் என்னிடம் சொல்கிறார்கள். ஆனால் நான் என் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று தவித்துக்கொண்டிருக்கிறேன். நான் தவிர்க்க முயன்றாலும் என்னை ஏதோ ஒரு தனிமை துரத்திக்கொண்டேயிருக்கிறது. தனிமையைப் போக்க வார இறுதி நாட்களில் அரசுப் பள்ளிகளில் இலவசமாகப் பாடம் நடத்திவருகிறேன். வீட்டில் திருமணத்துக்குப் பெண் பார்க்கிறார்கள். ஆனால் எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. சில சமயம் ஏன் எனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்று வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுகிறது. எனது தனிமையை எப்படிப் போக்குவது?

“ஏன் எனக்கு மட்டும்?” என்ற கேள்வி ஏன்? யார் பொறுப்பு, உங்களுடைய இன்றைய தனிமைக்கு? அங்கொரு கிளி இலவு காத்துக் கிடந்து, கிட்டாது பறந்து போயிற்று; இங்கொருவர் ஏற வேண்டிய வாகனத்தைத் தவற விட்டுவிட்டுப், பயணத்தைத் தொடர முடியாமல், ஒரே சதுரத்தில் தேங்கிவிட்டார்! கடந்த காலத்தை ‘ரீவைண்ட்’ செய்ய முடியும்; ‘ரிவர்ஸ்’ பண்ண முடியாது! உங்கள் குறைகளை மறக்கச் செய்து, தன்னம்பிக்கையை ஊட்டி, இலக்கை நோக்கிச் செல்ல ஊக்குவித்தார் அந்த தேவதை என்று கொள்ளுங்கள். அவரைக் காதலி என்று நினைக்காமல் மனதில் ஓர் உயர்ந்த இடத்தில் வைப்பீர்கள்; மரியாதை வரும். ஊரில் பலருக்கும் ஆலோசனை கூறுவதில் வல்லவரான உங்களுக்கு உங்கள் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை! ‘அன்னைக்கு செத்தது உங்கப்பா; அதனால் தத்துவம் சொன்னேன்; இன்னைக்கு செத்தது என் அப்பா இல்ல’ என்கிற கதை மாதிரிதான்! யாருக்குமே தன்னுடைய விஷயத்தில் உணர்வுகளிலிருந்து விலகி நின்று, அறிவுப்பூர்வமாகச் சிந்திக்க இயலாது.

தொலைத்த இடத்திலேயே சந்தோஷத்தைத் தேடாதீர்கள். வேறொரு இடத்தில் அது இருக்கிறது! உங்களைப் பற்றிய விவரங்களை அறிந்து, புரிந்து நடக்கும் ஒரு பெண்ணை முழுச் சம்மதத்தோடு மணம் செய்துகொள்ளுங்கள். நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்யுங்கள்; பிறருக்கு உபயோகமாக இருக்கிறோம் எனும் எண்ணமே உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

நண்பர்களுடன் இருப்பது, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகியவை தனிமையை விரட்ட உதவும். ஒரே சதுரத்தில் தேங்காமல் இருக்க, கடந்த கால நினைவுகளை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானியுங்கள். அந்த நினைவுகள் வந்தால், விழிப்புணர்வோடு எண்ணங்களைத் திசை திருப்புங்கள். எதை நினைக்கிறோமோ, அதுதான் நடக்கும்.

நான் பி.எஸ்.சி. இறுதியாண்டு படிக்கிறேன். பெற்றோர், அக்கா ஆகியோர் வேலைக்குச் செல்கிறார்கள். எனது குடும்பத் தினருக்கு என் மீது பிரியம் இல்லை என்று நினைக்கிறேன். அக்கா அளவுக்கு என் மீது அக்கறை காட்டுவதில்லை எனத் தோன்று கிறது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து இந்த நிலைமைதான்.

என் அம்மாவுக்கு இரண்டாவதாகப் பையன் பிறக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது. ஆனால் பெண்ணாகப் பிறந்ததால் என்னைப் பார்க்கவே அவர் விரும்பவில்லை. சிறிது நேரம் கழித்துத்தான் என்னைப் பார்க்கவே செய்திருக்கிறார். இதை அம்மா சொன்னபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

நண்பர்கள் என்னை ஜோக்கர் மாதிரி பார்க்கிறார்கள். நானும் நண்பர்கள்தானே என்று பொறுத்துக் கொண்டேன். ஆனாலும் தனிமையில் அழுவேன். என்னிடம் யாராவது ஓர் ஆண் பேசினால் போதும் எனக்கும் அவருக்கும் காதல் என்று கதை கட்டிவிடுவார்கள். அதை நான் விரும்பவில்லை என்று சொன்னாலும் அவர்கள் நிறுத்தவில்லை. என் நெருங்கிய தோழி ஒருத்தி ஒரு தவறு செய்தாள். அதைத் தட்டிகேட்ட நாள் முதலாய் அவள் என்னை எதிரி போல் நினைத்துச் செயல்படுகிறாள். என்னு டைய நெருங்கிய நண்பன் ஒருவனிடம் சொல்லாமல் மற்றொரு நண்பனுடன் நான் சினிமாவுக்குச் சென்றேன். அதனால் அவனும் என்னுடன் பேசுவது இல்லை. தவறு என் மீதுதான், ஆனாலும் வருத்தமாக உள்ளது. தனிமையாக உணர்கிறேன்.

இந்த மாதிரி சிக்கல்களால் நான் தொந்தரவுக்குள்ளாகிறேன். என்னால் எதிலும் கவனம் செலுத்த முடிய வில்லை. கல்லூரி முடிந்த பின்னர் அறிமுகமே இல்லாத புது இடத்துக்குச் சென்று வேலை பார்க்க வேண்டும். ஏதாவது விபத்து நேர்ந்தாலாவது எல்லோரும் நம் மீது அக்கறை காட்டுவார்களோ என்றெல்லாம் நினைக்கிறேன். சில சமயங்களில் யாரையாவது காதலித்துவிடலாமா என்றுகூட எண்ணம் வருகிறது. இது சரியா தவறா என்று தெரியவில்லை. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

விபரீத எண்ணங்களாக இருக்கின்றனவே! வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்கும் நேரத்தில் யாரையாவது காதலித்துவிடலாமா என்று தோன்றுவதும், உங்கள் வீட்டாரும், நண்பர்களும் உங்கள் மீது உள்ள பாசத்தை நிரூபிக்க உங்களுக்கு விபத்து நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் யாருமே என் மீது பாசம் காட்டவில்லை என்ற எண்ணம், நான் பாசத்துக்கு அருகதையற்றவள் எனும் கணிப்பால் ஏற்பட்டது. அந்தக் கணிப்பு எங்கிருந்து வந்தது?

நீங்கள் பெண்ணாய்ப் பிறந்ததால் உங்கள் தாய் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை உங்களிடம் சொல்ல, நான் வேண்டாத பிள்ளை என்று முடிவு கட்டிவிட்டீர்கள்! ஒரு துவாரத்தின் வழியாக வெளி உலகைப் பார்க்கும்போது விரிவாகத் தெரிய வாய்ப்பில்லை, அல்லவா? அதுபோல, குறுகிய பார்வையின் அடிப்படையில்தான் உங்கள் புரிதல் இருக்கிறது. பிறருக்குப் பிடிக்காத மாதிரி உங்களிடம் என்ன இருக்கிறது? ஏன் பிடிக்காது?

நீங்கள் யாரிடமும் உங்களைத் துன்புறுத்தும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளவில்லை போலும். மனதுக்குள்ளேயே வைத்து ஊதி, ஊதி பெரிதாக்கியிருக்கிறீர்கள். ஒருவேளை பேச முயன்றிருக்கலாம். அவர்களுடைய பதில் ‘கன்வின்ஸிங்’ ஆக இல்லாமல் போயிருக்கலாம். நாம் எல்லோரும் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் அனுபவங்களைச் சரியாகக் கவனித்திருப்போம்; ஆனால் சிலர் தவறாகப் புரிந்துகொண்டிருப்போம். அந்த சிலரில் நீங்களும் ஒருவர்!

உங்கள் தாயிடம் ஒரு பொருத்தமான முன்னுரையுடன், இதுவரை நீங்கள் மனதளவில் அனுபவித்துவரும் துன்பங்களை ஒன்றுவிடாமல் சொல்லுங்கள்; சொல்லத் தயங்கினால் எழுதிக் கொடுங்கள். அவர் உங்களைச் சரியாகப் புரிந்து கொண்டால், ஆறுதலாக இருப்பார். எதிர்பார்த்த இதம் கிடைக்க வில்லையென்றால், ஓர் உளவியல் ஆலோசகரைப் பாருங்கள். சுய துன்புறுத்தல் தொடரக் கூடாது.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x