Last Updated : 18 Aug, 2020 10:05 AM

 

Published : 18 Aug 2020 10:05 AM
Last Updated : 18 Aug 2020 10:05 AM

ஆகஸ்ட் 22: சென்னை தினம் - ஒவ்வொருவருக்கும் சென்னை நினைவு!

நான் 1990-ல் முதன்முதலாக மெட்ராஸுக்கு வந்தேன். என்ன மெட்ராஸ் எனப் பார்க்கிறீர்களா? அப்போது சென்னையின் பெயர் இதுதான். இப்போதும் பழைய ஆட்களின் பேச்சைக் கவனித்தீர்கள் என்றால் அவர்கள் சென்னையை மெட்ராஸ் என்றே சொல்வார்கள். 1996 ஜூலை 17 அன்றுதான் அது சென்னை எனப் பெயர் மாற்றம்பெற்றது. அதுவரையிலும் மெட்ராஸ்தான். ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’, ‘மெட்ராஸச் சுத்திப் பார்க்கப் போறேன்’ போன்ற பாடல்களைக் கேட்டிருக்கிறீர்கள் தானே?

1990-ம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்தேன். பொறியியல் பட்டப்படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வுக்காக சென்னைக்குக் குடும்பத்துடன் வந்தேன். செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு வரும் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் கிண்டியில் வந்து இறங்கினோம். மெட்ராஸ் அதிகாலையிலேயே பரபரப்பாக இருந்தது. பருவ வயதினான எனக்குப் பெற்றோருடன் சாலையைக் கடப்பதே பெரிய பாடாயிருந்தது.

அப்போது வெளியூர்ப் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் பாரி முனையில் அண்ணாமலை மன்றத்தின் எதிரே இருந்தது. மவுண்ட் ரோட்டில் இருக்கும் ஸ்பென்சர் பிளாசா மட்டுமே பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். சென்னையில் பொறியியல் கலந்தாய்வு முடித்துவிட்டுப் பேருந்தில் சென்றபோது, அது மவுண்ட் ரோடு வழியாக வந்தது. அப்போது பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி ஸ்பென்சர் பிளாசாவை வாய்பிளந்து வேடிக்கை பார்த்தது நினைவில் உள்ளது. பாரி முனையில் புறப்பட்ட பேருந்து போக்குவரத்து நெரிசலிடையே தாம்பரம் வந்து சேர்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அன்றைக்கு சென்னையில் மொபைல்களைச் சுமந்த இளைஞர் கூட்டம் இல்லை. பறக்கும் ரயில் இல்லை. மெட்ரோ ரயில் இல்லை. எத்தனையோ இல்லைகள். ஆனால், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்று சென்னையை உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றாகியிருக்கிறது. ஆனால், சென்னை கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் அது நிதானமாக ஒவ்வொரு படியாக ஏறி, வளர்ந்த நகரம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சென்னையைப் பற்றிக்கூற ஒவ்வொருவரிடம் ஏராளமான கதைகள் உண்டு. அப்படியான கதைகளை இந்த சென்னை நாளில் நினைவுகூருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x