

என்னதான் பெருந்தொற்றால் உலகம் முடங்கியிருந்தாலும், எப்போதும் இல்லாத அளவுக்கு இணைய உலகம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு வைரல் டிரெண்டையும் புரிந்துகொண்டு பின்தொடர வேண்டுமென்றால், அதற்கு ‘ஜென் இஸட்’ (Generation Z) இளைஞர்களின் மொழி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்தத் தலைமுறையினரின் மொழிப் புரியாவிட்டால், அவர்கள் உருவாக்கும் வைரல் டிரெண்டைப் புரிந்துகொள்வது கடினம். உங்களிடம் ‘FOMO’ இருந்தால், இந்தச் சொற்களுக்கான பொருளைத் தெரிந்துகொள்வது நல்லது. ‘FOMO’ என்றால் ‘Fear of Missing out’ (விடுபட்டுவிடுவோமோ என்ற பயம்) என்று பொருள்.
‘ஓகே பூமர்’ (OK Boomer) – இது நேர்மறையான சொல் இல்லை. ஆனால், மரியாதைக் குறைவான சொல்லும் அல்ல. கடந்த தலைமுறையினரைக் குறிக்க இந்தச் சொல்லை இளைய தலைமுறையினர் பயன்படுத்துகிறார்கள். இப்போது டிரெண்டில் இருக்கும் ஒரு விஷயம் கடந்த தலைமுறையினருக்குப் புரியவில்லையென்றால், அவர்களை ‘ஓகே பூமர்’ என்று குறிக்கின்றனர்.
‘பூகி’ (Bougie) – ‘பூர்ஷ்வா’ (Bourgeois) என்ற சொல்லின் சுருக்கமான வடிவம். பகட்டானவர்கள், விலையுயர்ந்த ரசனை கொண்டவர்களைக் குறிக்க ‘ஜென் இஸட்’ இளைஞர்கள் பயன்படுத்தும் சொல்.
‘பிரெட்’ (Bread) – பணத்தைத்தான் ‘ஜென் இஸட்’ இளைஞர்கள் ‘பிரெட்’ என்று சொல்கிறார்கள். பிரெட் மாவால் (Dough) செய்யப்படுகிறது. ஆங்கிலத்தில் ‘Dough’ என்றால், பணம் என்றும் பொருள். அதனால், பணத்தை ‘பிரெட்’ என்று சொல்கிறார்கள்.
‘Asdfasggjhj’ அல்லது ‘sksksksks’ – இந்த இரண்டையும் பிரபல காணொலிகளின் பின்னூட்டங்களில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.
அதீத உற்சாகம், அதீத சிரிப்பைக் குறிக்க இந்த இரண்டு பதங்களையும் ‘ஜென் இஸட்’ பயன்படுத்துகின்றனர்.
‘குட்சி’ (Gucci) – ஏதாவது ஒரு விஷயமோ, நபரோ மிகச் சிறந்ததாக, சிறந்தவராக இருப்பதைக் குறிக்க இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
‘ஜென் இஸட்’ அகராதி பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆர்வமிருப்பவர்கள் ‘Simp’, ‘Yeet’, ‘Bop/Banger’, ‘Deadass’, ‘Say Less’, ‘Finna’, ‘Clout’, ‘High-key’, ‘Cap/No Cap’, ‘Enby’, ‘Bruh’ உள்ளிட்ட சொற்களுக்கான பொருளை நேரம் கிடைக்கும்போது கூகுள் உதவியுடன் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், நீங்கள் ‘FOMO’வுக்கு ஆளாகலாம்.