

டெஸ்ட் போட்டிகளில் பங்குகொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி ஒரு சாதனை படைத்துள்ளார். எதுவும் போட்டியிலா என யோசிக்காதீர்கள். அவரது சாதனை ட்விட்டரில். ட்விட்டரில் அதிகம் பேர் பின் தொடரும் விளையாட்டுவீரராக அவர் மாறியுள்ளார். 80 லட்சம் பேர் அவரை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். சச்சின் டெண்டுல்கரை 77.3 லட்சம் பேர்தான் பின்தொடர்கிறார்கள். ஆக சச்சினை முந்தி, முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் விராட் கோலி.
ஏஞ்சலினா ஜோலியின் படங்கள் ஏலம்
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி திரை ரசிகர்களைத் தனது வசீகரத்தால் கட்டிப்போட்டிருந்தவர். இப்போது அவர் ஆறு குழந்தைகளின் தாய் என்றாலும் அவரது இருபது வயதில் அவர் எப்படியிருந்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டாம்.
அதனால் தான் அவரது இருபது வயதில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை ஒளிப்படங்கள் சுமார் ஒரு லட்சத்து எண்பத்தியிராண்டாயிரம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கின்றன. லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்ட இவை நிர்வாணப் படங்கள் என்ற போதும் கலையம்சம் கொண்டவை.
வரப்போகிறது ஸ்மார்ட் லென்ஸ்
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த பார்மசூட்டிகல் கம்பெனி நோவார்டிஸ் மனிதர்களுக்கான ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸின் மூல வடிவத்தை உருவாக்கியுள்ளது. இதை வரும் 2016-ம் ஆண்டு மனிதருக்குப் பொருத்தி சோதனை செய்யப்போகிறது. கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் இந்த கான்டாக்ட் லென்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணாடியின் உதவியின்றி படிக்க முடியாத முதியவர்களுக்கு உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. கண்ணின் இயற்கையான ஆட்டோஃபோகஸ் தன்மையை இந்த லென்ஸ் கொண்டிருக்கிறது என்பதால் சிறப்பாகப் பேசப்படுகிறது.