Last Updated : 11 Sep, 2015 01:35 PM

 

Published : 11 Sep 2015 01:35 PM
Last Updated : 11 Sep 2015 01:35 PM

புதுவை வானில் புதுத் தோரணங்கள்

புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக மைதானம். மெல்லிய கடற்காற்று நம்மைத் தாலாட்டியபடி வீசிக்கொண்டிருந்தது. எப்போதும் கடலருகே வந்தால் கடலை மட்டும் பார்க்கும் மனிதர்கள் அன்று வானத்தைப் பார்த்தபடியே நின்றிருந்தார்கள். காரணம் காற்றின் தாலாட்டுக்கு ஏற்றபடி வானுக்கும் பூமிக்கும் இடையே வசீகரமாக வாலாட்டியபடி பறந்துகொண்டிருந்தன அநேகக் காற்றாடிகள். சுற்றுலாவாசிகளைக் கவர புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்திருந்த பட்டத்தைப் பறக்கவிடும் திருவிழாவில்தான் இந்த உற்சாகமான காட்சியைப் பார்க்க முடிந்தது.

பல்வேறு உருவங்கள் பறந்துகொண்டிருந்தாலும் கார்ட்டூன் பொம்மை முக பட்டங்களுக்கு ஏக மவுசு. அதேபோல் முதலை, ஆக்டோபஸ், பறவை, புலி எனப் பலவகை மாடல்களில் பறந்த பட்டங்களை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டன. பட்டங்களில் ஒளிந்துகிடக்கும் உருவங்கள் நம்மை நோக்கி வருவதைப் போல் வடிவமைத்திருந்தவிதம் சுவாரசியத்தைத் தந்தது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் பரவசத்தால் தரையில் கால் படாமல் பட்டங்கள் போல் மிதந்துகொண்டேயிருந்தார்கள்.

புதுச்சேரி சுற்றுலா துறை, ‘கைட் லைஃப் பவுண்டேஷன்’ சார்பில் இரண்டாவது வருடமாக‌த் தற்போது சர்வதேசக் காற்றாடித் திருவிழாவை உப்பளம் புதிய துறைமுகத்தில் 3 நாட்களாக நடத்தியிருந்தது.

இந்த வருடம் நூற்றுக்கணக்கான பெரிய, சிறிய வகை காற்றாடிகள் பறக்க விடப்பட்டன. கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம் போன்ற பகுதிகளிலிருந்தும் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்தும் தொழில்முறை காற்றாடிகளை வடிவமைத்து பறக்க விடும் குழுவினர் பங்கேற்றார்கள்.

மேலும் காற்றாடி விழாவின் ஒரு பகுதியாக 9 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குக் காற்றாடி தயாரித்தல் பயிற்சிப் பட்டறையும் நடைபெற்றது. தவிர, காற்றாடி தயாரித்துப் பறக்க விடுதல், காற்றாடிக் கண்காட்சி, கோலப்போட்டி, மாணவர்களுக்கான காற்றாடி கவிதைப் போட்டி போன்றவையும் நடத்தப்பட்டன‌. இதற்காக ரூ.10 லட்சத்தைச் சுற்றுலாத் துறை ஒதுக்கீடு செய்திருந்தது.

பல்வேறு உருவ அமைப்பில் பட்டங்களைத் தயாரிக்க முடியும் தமிழகத்தைப் பொறுத்தவரை டைமண்ட் வடிவ பட்டம்தான் பிரபலம். கைட் லைஃப் பவுண்டேஷன் நிர்வாகி ராஜேஷ் நாயர், காற்றாடிகள் 90மீ உயரம் வரை பறக்க விடப்பட்டதையும் 18 காற்றாடி விடும் தொழில்முறை குழுக்கள் பங்கேற்றதையும் பகிர்ந்துகொண்டார். “இது உலகளாவிய விளையாட்டு. இளமையாக நம்மை எப்போதும் மாற்றும் மாயம் காற்றாடிக்கு இருக்கிறது” என்றார் உற்சாகத்துடன்.

காற்றாடித் திருவிழாவைப் பார்க்க ஆர்வத்துடன் குவிந்திருந்த வட இந்தியர்கள் காற்றாடி பற்றித் தங்களுக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் பேசிக்கொண்டார்கள்.

சீனாவில் தான் முதலில் பட்டம் விடும் பழக்கம் தோன்றியது. அங்கிருந்துதான் இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளுக்கு இந்தப் பழக்கம் பரவியுள்ளது. வணிகத்துக்காக வந்த அரேபியர்கள் மூலம் அவர்கள் மூலம் இந்தியாவில் காற்றாடி விடும் வழக்கம் பரவியதாகவும் சொல்லப்படுகிறது.

அரசர்களும், நவாப்புகளும் பட்டங்களைப் பறக்க விட்டுத் தங்களின் திறனை வெளிக்காட்டும் வழக்கம் இருந்திருக்கிறது. இத்தகைய பட்டம் விடும் திருவிழா குஜராத் மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் மட்டுமல்லாது, இளைஞர்கள், இளம் தம்பதியினர், நடுத்தர வயதினர், முதியவர்கள் எனப் பலரும் குழந்தைகளாக மாறி பட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.

காற்றாடி விடுவதற்கு ஏற்ற பருவமும், காற்றும் புதுச்சேரியில் உள்ளன என்றார் இவ்விழாவில் பங்கேற்க வந்த மலேசியா காற்றாடி விடும் சங்கத்தின் தலைவர் அப்துல் காலிம். பொழுது போக்குக்காக மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படா வண்ணம் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுகூடி பல வடிவங்களில் பட்டம் விட்டு மகிழ்வோம் என்று கூறிய அவர், “சாதி, இனம், மொழி, பொருளாதார ஏற்றத்தாழ்வு என அனைத்தையும் கடந்து மனிதர்களை ஒன்றிணைக்கும் தன்மை காற்றாடிக்கு உள்ளது” என்று பெருமிதப்பட்டார்.

படங்கள்: எம்.சாம்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x