

கரோனாவைத் தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவை மட்டுமே தடுப்புக் கவசங்களாக இருந்துவருகின்றன. இந்த இரண்டையும் சுற்றி பல ஒளிப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் உலா வந்தவண்ணம் உள்ளன. அவற்றில் கடந்த வாரம் வைரலான சில ஒளிப்படங்களும் அவற்றின் பிண்ணனியும்:
வழிவிடும் முகக்கவசம்
வீட்டை விட்டு வெளியே வந்தாலே, முகக்கவசம் இல்லாமல் வர முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால், முகக்கவசம் அணிந்துகொண்டு வெளியே சுற்றுவோர், ஏதாவது சாப்பிட நேர்ந்தால் சங்கடம்தான். இந்தச் சங்கடத்துக்கு வேடிக்கையாகத் தீர்வுச் சொல்லியிருக்கிறார் பிரிட்டன் மாடல் எம்மா லூயி கோனோலி. அவர் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் எக்குத்தப்பாக வைரல் ஆனது.
அந்த வீடியோவில், காரில் உட்கார்ந்துகொண்டு எம்மா இரண்டு முகக்கவசங்களுடன் சாப்பிடுகிறார். சாதாரணமாக நாம் அணியும் இரு முகக்கவசங்களை அணிந்திருக்கும் எம்மா, ஒன்றை மூக்கிலும் மற்றொன்றை வாயின் மேலேயும் அணிந்திருந்தார். அவர் வாயைத் திறந்தவுடன் இரண்டு முகக்கசங்களும் தானாகவே இடைவெளியை ஏற்படுத்திக்கொடுக்கின்றன. வாய்க்குள் உணவு செல்லவும் வழிஏற்படுத்தி கொடுக்கின்றன. வீடியோவில் பார்க்கும்போது முகக்கவசங்களே வாயைத் திறந்து மூடுவதுபோல் வேடிக்கையாகவும் இருந்தது. இனி வெளியே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோர், எம்மா வழியைப் பின்பற்றலாம்.
லிஃப்ட் கூட்டம் கூடாது
லிஃப்ட் கதவு திறந்திருப்பதைக் கண்டால் அவசர அவசரமாக ஓடிப்போய் ஏறிவிடுவது பலருடைய வாடிக்கை. ஆனால், கரோனா காலம் லிஃப்ட்டில் ஏறத் தடைப் போட்டுவிட்டது. பல நாடுகளிலும் பொதுமுடக்கத்திலிருந்து சற்று தளர்வு அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துவருகிறது.
வெளிநாடுகளில் ஷாப்பிங் மால்களில் சமூக இடைவெளியுடன் மக்கள் சுற்றத் தொடங்கியிருக்கிறார்கள். லிஃப்ட்டில் ஏறும்போது கூட்டமாக ஏற முடியாது என்பதால், அங்கும் சமூக இடைவெளியைக் கட்டாயமாக்கிவிட்டார்கள். இதற்காகவே லிஃப்டில் ஒவ்வொருவரும் இடைவெளிவிட்டு நிற்கும் அளவுக்கு வரைந்தும் வைத்திருக்கிறார்கள். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் லிஃப்டில் சமூக இடைவெளி இல்லாமல் ஏற முடியாது.
சினிமா சீட்டில் பொம்மைகள்
கரோனாவால் உலகெங்கும் திரையரங்குகள் மூடிக்கிடக்க, கரோனா முதலில் பரவத் தொடங்கிய சீனாவில் திரையரங்குகள் ஓரளவு செயல்படத் தொடங்கியிருக்கின்றன. கரோனா பீதியிலிருக்கும் மக்கள் திரையரங்குக்கு வருவார்களா என்ற சந்தேகம் இருந்த நிலையில், அந்தப் பயம் இல்லாமல் திரையரங்குகளுக்கு மக்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
திரையரங்குகள் சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுவிட்டதால், இரண்டு சீட்டு தள்ளி ஒருவர் என்ற அடிப்படையிலேயே உட்கார வைக்கப்படுகிறார்கள். போறப்போக்கில் யாரும் பக்கத்து சீட்டில் மற்றவருடன் உட்கார்ந்துவிடக் கூடாது என்பதால், காலி சீட்டில் பொம்மைகள், சினிமா பிரபலங்களின் உருவப் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகிக் கடந்த வாரத்தில் வைரலாயின.
காமிக்ஸ் முகக்கவசம்
வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பர்ஸைகூட மறந்துசெல்லலாம். ஆனால், தப்பித்தவறி முகக்கவசத்தை மட்டும் மறக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. அத்தியாவசியமாகிவிட்ட அந்த முகக்கவசங்களை விதவிதமான தோற்றத்தில் அணிய வேண்டும் என விரும்பும் புதுமை விரும்பிகள் உலகெங்கும் இருக்கிறார்கள். அந்த வகையில் குரோஷியாவைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் ஷோரேன் அர்கோவிக் என்பவர், காமிக்ஸ் வாசகங்கள், காமிக்ஸ் படங்களுடன் கூடிய முக்கவசங்களைத் தயாரித்து விற்பனைக்கு விட்டிருக்கிறார். எதிர்பார்த்ததைவிட இந்த முகக்கவசங்களுக்கு வரவேற்பு கிடைக்க, இப்போது காமிக்ஸ் முகக்கவசங்கள் குரோஷியாவில் ஹிட்டாகிவிட்டன.