

என். கௌரி
கோவிட்-19 காலமானது பல மாற்றங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்திவருகிறது. இந்தப் பெருந்தொற்றுக் காலத்துக்கேற்பப் பல துறைகள் தங்களைத் தகவமைத்துக்கொண்டு வருகின்றன. இதில் அழகுக்கலைத் துறையும் விதிவிலக்கல்ல. முகக்கவசத்துக்குள் மறைந்திருக்கும் முகத்துக்கு ஒப்பனை செய்யும் எண்ணம் நம்மில் பலருக்கும் எழாமல் இருக்கலாம். ஆனால், ஒப்பனை செய்துகொள்வது மனித இனத்தின் பழக்கமாக இருந்துவந்திருக்கிறது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் இப்போது ஆதிக்கம் செலுத்திவரும் ‘மேக்-அப்’ போக்குகளிலிருந்து தெரியவருகிறது.
கண்கள் மீதமிருக்கின்றன
முகக்கவசத்தால் பாதி முகம் மறைக்கப்பட்டுவிட்டாலும், உலகத்தை நாம் பார்ப்பதற்கும், நம்மை உலகம் பார்ப்பதற்கும் கண்கள் மீதமிருக்கின்றன அல்லவா? அதனால், இந்தப் பெருந்தொற்றுக் கால உலகில் கண்களுக்கான ஒப்பனையே பெரும் ஆதிக்கம் செலுத்தவிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
அத்துடன், பல நாடுகளில், ஊரடங்குக்குப் பிறகு, கண்களுக்கான ஒப்பனைப் பொருட்களான ‘ஐலைனர்ஸ்’(eyeliners), ‘ஐ ஷேடோ’ (eye shadow), ‘மஸ்காரா’ (mascara), ‘ஐ லாஷஸ்’ (eye lashes) ஆகியவற்றின் விற்பனை அதிகரித்திருக்கிறது. ‘டாப் 5’ அழகுப் பொருட்கள் என்ற வகையிலிருந்த ‘ஐ ஷேடோ’, இந்த ஊரடங்குக் காலத் தளர்வுகளுக்குப் பிறகு, ‘டாப் 3’ வகைக்கு முன்னேறியிருப்பதாக பிரபலத் தனியார் அழகுக்கலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவந்த ‘கிளர்ச்சியான கண்களுக்கான ஒப்பனை’, இனி இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தும் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள். அதிலும் கண்களுக்கான ‘நீல’, ‘நியான்’ நிறங்கள்தாம் இனி வரும் காலத்தில் ‘மேக்-அப்’ டிரெண்டாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.
கண்களுக்கான ஒப்பனையைப் பொறுத்தவரை, புருவங்களில் இருந்து தொடங்குவதுதான் எப்போதும் சரியாக இருக்கும். இதற்கு, ‘வாட்டர்ப்ரூஃப் ப்ரோமேடு’(brow pomade) என்ற பொருள் உதவும். கண்ணிமையின் மேற்பரப்பை அழகுபடுத்துவதற்கு ‘ஐ-பிரைம’ரின் (eye primer) உதவி தேவை. இந்திய கண் ஒப்பனைத் துறையில், காஜலின் (Kajal) ஆதிக்கம் இன்னும் அதிகரிக்கவிருக்கிறது. காஜல் கண்களில் நீண்ட நேரம் இருப்பதற்கு, ஐ-ஷேடோ பவுடருடன் அதை ஒருங்கிணைப்பது அவசியம். கண்களுக்கான நிறங்களைப் பொறுத்தவரை, முதலில் ‘பீச்’ அல்லது ‘பிங்க்’ நிறங்களிலிருந்து தொடங்கலாம். இந்த நிறங்கள் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்றவை.
‘லிப்ஸ்டிக்’ பிரியர்கள்
முகக்கவசம் அணிவதென்பது இந்தக் காலத்தின் அத்தியாவசியம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்தப் பெருந்தொற்று கட்டுக்குள் வந்தபிறகும், வெளியே செல்லும்போதும் மேலும் சில காலம் நாம் முகக்கவசம் அணிய வேண்டியிருக்கும். இதனால், ஒப்பனைப் போக்கில் ‘லிப்ஸ்டிக்’ பயன்பாடு குறைய வாய்ப்பிருக்கிறது என்று சொல்லும் அழகுக்கலை நிபுணர்கள், எந்தக் காலத்திலும் ஒப்பனையில் லிப்ஸ்டிக்கின் இடத்தை வேறு எந்தப் பொருளாலும் இட்டு நிரப்பிவிட முடியாது என்கிறார்கள். கோவிட்-19-க்குப் பிறகான உலகத்திலும், லிப்ஸ்டிக்கின் தேவை இருக்கவே செய்யும் என்கிறார்கள் அவர்கள்.
இதே கருத்தையே லிப்ஸ்டிக் பயன்படுத்தும் இளம்பெண்கள் சிலரும் வழிமொழிகிறார்கள். “இந்தச் சூழல் சரியாகி மீண்டும் அலுவலகத்துக்குச் செல்லும்போது, முகக்கவசம் அணிந்திருந்தாலும், லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டுதான் செல்வேன். ஏனென்றால், எனக்கு மேக்-அப்பில் மிகவும் பிடித்தது லிப்ஸ்டிக்தான். ‘ஐ-மேக் அப்’பில் எனக்கு எப்போதுமே ஆர்வமிருந்ததில்லை. முகக்கவசம் அணிவதால், லிப்ஸ்டிக் போட வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
இப்போது ‘மேட் லிப்ஸ்டிக்’குள்தாம் (Matte Lipstick) பிரபலமாக இருக்கின்றன. இந்த வகை லிப்ஸ்டிக் முகக்கவசத்தில் ஒட்டி, மேக்அப் கலைந்துவிடும் என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. என்னதான் இனிவரும் காலத்தில் கண்களுக்கான ஒப்பனை பிரபலமானாலும், லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் குறைந்துவிடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று உறுதியாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ரா. இவாஞ்சலின் எலிசபெத்.
ஆனால், என்னதான் லிப்ஸ்டிக் பிரியர்கள், லிப்ஸ்டிக்கை விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு லிப்ஸ்டிக்கின் தாக்கம் ஒப்பனை உலகில் குறைவாகத்தான் இருக்கப்போகிறது. நாமும் நம் கண்களை அட்டகாசமான, புதுமையான ஒப்பனைகளைப் பார்த்து ரசிப்பதற்குத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.