

வா.ரவிக்குமார்
“காச வெச்சு முன்னேறும் ஏச்சைகள் ஒருபுறம்
திறமையால் முன்னேறும் ஏழைகள் மறுபுறம்
இருபுறம் நடுவே காக்க வந்த ஒரு கரம்
நட்பு என்ற வடிவில் வந்தது ஓர் அறம்
நாங்க செய்யும் சம்பவம் எல்லாமே வேறு தரம்
அனைவரும் சமம் என்று மதிப்பது எங்கள் குணம்…”
ஏ.கே.47 துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டாக்களாக வெடிக்கின்றன கவிராயரின் சொல்லிசை (ராப்) வரிகள். குரலின் ஸ்தாயியுடன் ஒத்திசைவாக டிரம்ஸின் தாளக்கட்டும் சேர்ந்துகொள்ள, போதையூட்டும் தாளத்துடன் சேரும் வார்த்தைகளில் லயிக்கிறது மனம்.
பிறந்த கதை
தஞ்சாவூர் ‘அன்னை வேளாங்கண்ணி கல்லூரி’யில் இரண்டாம் ஆண்டு ‘விஸ்காம்’ படிக்கும் மாணவர் பிரவீன். இளைஞர்கள் பெரிதும் விரும்பும் திரைப் பாடல்களில் இவருக்குப் பெரிய விருப்பமில்லை. அவருடைய நாட்டம் எல்லாம் ஆங்கில ஹிப்ஹாப், ராப் பாடல்களின் மீதே இருந்தது.
சொல்லிசைக் கலைஞர்கள் எனப்படும் ராப் பாடகர்களின் மீது பிரவீனுக்கு இருக்கும் ஈடுபாட்டைப் பார்த்து அவருடைய பாட்டி வியந்தார். தாத்தாவின் கவிதை எழுதும் திறமை, அதையே பாடலாகப் பாடும் திறமை, எதிர்காலத்தில் நடக்கவுள்ள விஷயங்களைக் குறிப்பால் உணர்த்தும் திறன் ஆகியவற்றைப் பற்றி பிரவீனிடம் பாட்டி கூறியிருக்கிறார். எல்லாவற்றையும்விட தாத்தாவின் ‘கவிராயர்’ என்ற பெயர், நவீனத்தின் குழந்தையான பிரவீனின் மனத்தில் ஆழமாக இடம்பிடித்துவிட்டது. அதனால் அந்தப் பெயரிலேயே ஒரு சொல்லிசைப் பாடலை எழுதிப் பாடி, ‘கவிராயர்’ யூடியூப் அலைவரிசையில் வெளியிட்டிருக்கிறார்.
வண்ணங்களில் வெளிப்படும் போராட்டம்
“ராப் பாணியில் பெரும் உந்துசக்தியாக, எனக்கு முன்னுதாரணமாக நினைப்பது அமெரிக்காவைச் சேர்ந்த எமினெம்மின் பாடல்களே. எனக்கு அவருடைய இசை ஒரு தெரபி மாதிரி! இந்தச் சமூகத்தில் நான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் பெரியார், அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும் நடந்திருக்கின்றன. அந்தக் கலக அரசியலை எங்கள் யூடியூப்பின் ‘லோகோ’வில் வண்ணங்களின் மூலமாகவே வெளிப்படுத்தியிருப்போம்.
ஒரு சொல்லிசைக் கலைஞராக என்னை வெளிப்படுத்திக்கொள்ள மேற்கொண்ட முயற்சிதான் ‘வணக்கம் வந்தனம்’ பாடல். ஏ.பி.கே. பிரவீன் ஒலிப்பதிவு, ரியாஸின் இயக்கம் - ஒளிப்பதிவு, சந்தோஷின் எடிட்டிங் ஆகியவை இந்தக் காணொலிக்கு மிகப் பெரிய பலம். அடுத்ததாக ஊரடங்கு காலத்தில் நாலு சுவருக்குள் அடைந்திருப்பதை விளக்கும் பாடலை எழுதிவருகிறேன். பணம், நட்பு போன்றவற்றைப் பற்றியும் ராப் பாடல் எழுதிவருகிறேன்” என்றார்.
சொல்லிசை உலகத்துக்கு அறிமுகமாகியிருக்கும் கவிராயருக்கு நாமும் வணக்கம், வந்தனம் சொல்லி வரவேற்கலாம்!
பாடலைக் காண: https://youtu.be/ON1aGnmyvk4