

ஃபேஸ்புக்கில் ஏதாவது ஒரு வீடியோவை அப்லோடு செய்தால் அதை மற்றொருவர் திருடி தனது வீடியோ போல அப்லோடு செய்துவிடுகிறார் என்ற புகார் அடிக்கடி ஃபேஸ்புக் நிர்வாகத்துக்கு வந்தது. ஆகவே வீடியோ திருட்டை ஒழிக்கும் நடவடிக்கையில் ஃபேஸ்புக் இறங்கியுள்ளது. இதற்காக வீடியோ மேட்சிங் டூல் ஒன்றை உருவாக்கிவருகிறது. இந்த டூல் உதவியால் எல்லா வீடியோவையும் விரைவாகவும் துல்லியமாகவும் அடையாளம் காண முடியும். யாராவது திருட்டு வீடியோவை அப்லோடு செய்தால் அதைக் கண்டுபிடித்து அகற்றிவிட முடியுமாம். வீடியோ உரிமையாளர்தான் இதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் இதில் சிக்கல்.
அபூர்வ சந்திப்பு
இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானும் கிரிக்கெட் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரும் திடீரெனச் சந்தித்துக்கொண்டார்கள். பிரியத்துடன் டெண்டுல்கர் தனது வீட்டுக்கு ரஹ்மானை விருந்துக்கு அழைக்க ரஹ்மானும் சென்றுவந்துள்ளார். இதை டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். இதேபோல் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்தும் ஏ.ஆர். ரஹ்மான், டெண்டுல்கர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட படத்தை, கடவுள்களுடன் ஒரு செல்ஃபி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
உலகின் பழமையான சிலை கண்டுபிடிப்பு
பிரமிடுகளைவிடப் பழமையான சிலைகள் உலகில் உள்ளன என்றால் நம்புவீர்களா? நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ ரஷ்யாவின் மலைப் பகுதியில் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய மரச் சிலை ஒன்று கிடைத்திருக்கிறது. உண்மையில் இந்தச் சிலை சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர், 1890-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அது 9,500 ஆண்டுகளுக்கு முந்தையது என்றுதான் அறியப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போதுதான் அது 11,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்திருக்கிறது. ஏதோ ரகசியத் தகவல்களைப் பூடகமாகத் தெரிவிப்பது போல் சங்கேதக் குறிகளை இந்தச் சிலை கொண்டிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
சினிமா இயக்குநருக்கு அபராதம்
இந்தியத் திரைப்பட வரலாற்றில் பிரதான இடத்தைப் பிடித்துக்கொண்ட இந்திப் படம் ‘ஷோலே’. ரமேஷ் சிப்பியின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘ஆக்’ என்றொரு படத்தை இயக்கி, 2007-ல் வெளியிட்டார். முறையான அனுமதியின்றி ராம் கோபால் வர்மா ‘ஷோலே’ படத்தை ரீமேக் செய்திருந்தார் என்பதால் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதி மன்றம் இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் அவருடைய தயாரிப்பு நிறுவனமும் காப்புரிமைச் சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறி பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.