Published : 30 Jun 2020 09:04 AM
Last Updated : 30 Jun 2020 09:04 AM

டெல்லியிலிருந்து சென்னைக்கு...ஒரு கரோனா டைரி!

எல்.ரேணுகாதேவி

கரோனா ஊரடங்கு நூறு நாட்களைக் கடக்க உள்ளது. ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஊரடங்குதான் கரோனாவுக்கான தடுப்பு மருந்து என்று சில மாவட்டங்கள் ஊரடங்குக்குள் வந்துள்ளன. இந்த மூன்று மாத காலத்தில் கரோனாவைத் தடுப்பதில் பாடம் கற்றிருக்கிறோமா என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழலாம். நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில், டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த ஓர் இளைஞரின் அனுபவம், பல ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.

காய்ச்சல் பரிசோதனை

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் தீபன். இவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடந்த வாரம் வந்தார். சென்னையில் நோய்த் தொற்று அதிகமாக இருப்பதால் அரசின் வழிகாட்டுதலின்படி வீட்டில் தனித்திருக்க வேண்டும், முகாம்களில் தங்கவைத்துக் கண்காணிக்கப்படுவோம் என்ற எண்ணத்திலேயே தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். ஆனால், நிஜத்தில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது என்கிறார் தீபன்.

“ஊரடங்கு திடீரென அறிவிக்கப்பட்டதால் நான் டெல்லியில் மாட்டிக்கொண்டேன். வீட்டின் ஒரே மகன் என்பதால் என் பெற்றோர் எப்படியாவது சென்னைக்கு வந்துவிடும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு சாத்தியப்படவில்லை. மத்திய அரசு ஊரடங்கைத் தளர்த்திய பிறகுதான் வீட்டுக்குச் செல்ல வழி கிடைத்தது. கடந்த வாரம் டெல்லியிருந்து சென்னை வர ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவுசெய்தேன். டெல்லி விமான நிலையத்துக்கு வந்தபோது காய்ச்சலை அறிய உதவும் ‘தெர்மல் ஸ்கேன்’ செய்யப்பட்டது. நான் வந்த விமானத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் எனக்குத் தனி இருக்கை கிடைத்தது. மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன்.

விமானம் சென்னையை வந்தடைந்தது. கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள சென்னையில், வெளி மாநிலங்களிலிருந்து வருவோர் கடுமையாகச் சோதிக்கப்படுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், விமான நிலையத்தில் ‘தெர்மல் ஸ்கேனிங்’ மட்டுமே செய்யப்பட்டது. தனிநபர் இடைவெளியும் பெரும்பாலான இடங்களில் கடைப்பிடிக்கப்படவில்லை. வெளி மாநிலத்திலிருந்து வந்தவர் என்பதைக் குறிக்கும் வகையில், என் கையில் ஒரு முத்திரை குத்தப்பட்டது. வீட்டுக்குச் செல்வதற்கான வாகன அனுமதி பெறுவதற்கான இ-பாஸ் பெறும் ஏற்பாடு விமான நிலையத்திலேயே நடைபெற்றது.

தொடர்ந்த அலட்சியம்

என் வீடு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளது. எங்கள் வீட்டின் எதிர் வீடு காலியாக இருந்தது. எனவே, வீட்டின் உரிமையாளரிடம் பேசி என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். அடுத்த 14 நாட்களுக்கு எனது வீடு உள்பட எங்கும் செல்வதில்லை என்று தீர்மானித்துள்ளேன். இது எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்ட கட்டுப்பாடுதான். அரசோ, மாநகராட்சி நிர்வாகமோ எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. இது எனக்கு வியப்பாக இருந்தது.

விமான நிலையத்தில் குத்தப்பட்ட முத்திரையும் ஒரே குளியலில் அழிந்துவிட்டது. வெளி மாநிலத்திலிருந்து வரும் ஒருவரைக் கண்காணிப்பதில் இருக்கும், இந்த மெத்தனம் நோய்த் தொற்றின் பரவலை அதிகப்படுத்தாதா? தெர்மல் ஸ்கேனிங்கை மட்டும் நம்பி வெளிமாநிலத்திலிருந்து வருவோரைக் கண்காணிக்காமல் விடுவது, ஆபத்தில் முடியாதா? என்னைப் போன்றே விமானத்தில் வந்தவர்கள் எல்லாரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வார்களா? அவர்களில் யாருக்கேனும் நோய்த் தொற்று இருந்தால், அதன் மூலம் தொற்று பரவல் எண்ணிக்கை உயராதா?

நான் டெல்லியிருந்து சென்னைக்குப் புறப்பட்டபோது, என் நண்பர்களில் ஒருவர் பெங்களூருவுக்கும் மற்றொருவர் அசாமுக்கும் சென்றனர். பெங்களூருவுக்குச் சென்ற நண்பரிடம் உங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதியுள்ளதா? கழிப்பறை, குளியலறை அடங்கிய தனி அறை உள்ளதா என்று பெங்களூரு விமான நிலையத்திலேயே விசாரிக்கப்பட்டுள்ளது. அவரும் இருக்கிறது என்று பதிலளித்துள்ளார். இருந்தபோதும் அவருடன் வீடுவரை ஒரு அரசு ஊழியர் அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்துதலுக்கான வசதி அங்குள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பிறகே சென்றுள்ளார்.

அசாமுக்கு சென்ற நண்பருக்கு முதலில் கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பிறகு அரசின் ஏற்பாட்டிலேயே வசதியான ஒரு விடுதியில் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிவு வந்த பிறகே வீட்டுக்கு அவர் அனுப்பப்படுவாராம். ஏன் இது போன்ற நடைமுறை தமிழகத்தில் இல்லை?”

அந்த இளைஞர் எழுப்பும் கேள்விகள் எல்லோருக்கும் எழக்கூடிய நியாயமான கேள்விகள்தாம். ஆனால், பதில் கிடைக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x