இவை முகக்கவசம் மாதிரி!

இவை முகக்கவசம் மாதிரி!
Updated on
2 min read

மிது கார்த்தி

கரோனாவுக்கெனத் தடுப்பு மருந்து எதுவும் இல்லை. முகக்கவசமும் கைகளைக் கழுவுவதும்தான் இன்றைய ஒரே தடுப்பு உத்தி. எனவே, மக்களின் அன்றாடத் தேவையில் அத்தியாவசியமாகிவிட்டன முகக்கவசங்கள். இந்த கரோனா காலத்தில் உலகில் விதவிதமான முகக்கவசங்கள் உலாவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கவனம் ஈர்த்த சில முகக்கவசங்கள்:

முகம் போன்றதொரு முகக்கவசம்

கரோனாவைத் தடுக்க தாடை, வாய்ப் பகுதி, மூக்குவரை முகக்கவசத்தால் மறைக்க வேண்டியிருப்பதால், தங்கள் அழகு முகத்தை வெளிக்காட்ட இயலவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு மூக்கு முதல் தாடைவரை தங்களுடைய உண்மையான முகத்தை அச்சிட்டுத் தரும் முகக்கவசம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. அது போன்றதொரு முகக்கவசத்தை இளம் பெண் ஒருவர் குவைத் விமான நிலையத்தில் அணிந்துவர, அது சமூக ஊடகங்களில் வைரலானது.

பன்றி முகம்

குழந்தைகளுக்கு விளையாட்டாக விதவிதமான உருவங்களில் முகக்கவசங்களை மாட்டி விடுவதுபோல், ஜப்பானில் பன்றியின் முகத்தைக்கொண்டே உருவாக்கப்பட்ட முகக்கவசங்கள் வலம்வரத் தொடங்கியுள்ளன. இரு இளைஞர்கள் இது போன்ற முகக்கவசத்தை மாட்டிக்கொண்டு தலைநகர் டோக்கியோவில் வலம்வர, அந்தப் படம் சமூக ஊடகங்களில் ஹிட் அடித்துள்ளது.

தண்ணீர் கேன் கவசம்

சென்னையில் தண்ணீர் கேன் இல்லாத வீடுகளே கிடையாது. அந்த கேனையே பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் முகக்கவசமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். முகத்துக்கு ஏற்றாற்போல் தண்ணீர் கேனை வெட்டி, தலை முதல் நெஞ்சு பகுதிவரை மறைத்துக்கொள்கிறார்கள்.

முட்டைக்கோஸ் கவசம்

தமிழகத்தில் பனை ஓலையைக் கொண்டு பொதுமக்கள் சிலர் முகக்கவசம் அணிந்தது ஊடக வெளிச்சத்துக்கு வந்தது. அதுபோலவே பாலஸ்தீனத்தில் முட்டைக்கோஸில் முகக்கவசம் அணிந்த சிறுமிகளின் ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்துள்ளன.

இவர்களைப் போல உலகின் பல நாடுகளிலும் விதவிதமான பொருட்களில் முகக்கவசங்களை உருவாக்கி அணிந்துவருவது அதிகரித்தவண்ணம் உள்ளது. கரோனா தொற்று இல்லாத உலகம் உருவாகும்வரை, இதுபோன்ற விந்தையான முகக்கவசங்களை நாம் தொடர்ந்து பார்க்க நேரிடலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in