

செய்திகளையும் ஓவியங்கள் வாயிலாகச் சொல்லும்போது அதை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அப்படித்தான் இந்தியாவைப் பற்றி அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியாத விஷயங்களை ‘காமிக் ஸ்ட்ரிப்ஸ்’ வாயிலாக பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்கிறார் சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் ராஜாமணி. அதனால்தான் இவரது பேஸ்புக் பக்கத்துக்கு ‘இன்எடிபிள் இந்தியா’ (Inedible India) என்று பெயர் வைத்திருக்கிறார் இவர்.
மும்பை தனியார் வங்கி ஒன்றின் முன்னாள் ஊழியரான இவருக்கு முப்பது வயதாகிறது. இவர் இந்த பேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து ஒரு மாதமே ஆகிறது. அதற்குள் கிட்டத்தட்ட 13,000 பேர் இந்தப் பக்கத்தைப் பின்தொடர்கிறார்கள். சமீபத்தில் இவரது ‘வெப் காமிக்ஸ்’ பேஸ்புக்கில் வைரல் டிரெண்டாக இருந்தது.
தீவிரமான அரசியல், சாதியம், பொருளாதாரம் ஆகியவை குறித்த இந்தியாவின் அன்றாட நிகழ்வுகளை இவர் தனது ‘வெப்காமிக்ஸ்’(Webcomics) வழியே நையாண்டியுடன் விமர்சிக்கிறார். இந்த ‘வெப்காமிக்கை’ உருவாக்குவதற்கு இவர் ரவிவர்மாவின் ஓவியங்களையும், முகலாயர் காலத்து ஓவியங்களையும் பயன்படுத்துகிறார். “பேஸ்புக்கில் நான் பகிர்ந்துகொள்ளும் அரசியல் நையாண்டி கருத்துகளைப் பார்த்து என் நண்பர்கள்தான் என்னை ‘காமிக் ஸ்டிரிப்ஸ்’ உருவாக்குவதற்கு ஊக்கப்படுத்தினார்கள்.
எனக்கு ஓவியம் வரையத் தெரியாது. அதனால், ‘காமிக் ஸ்டிரிப்ஸ்’ உருவாக்கும் திட்டம் தாமதமானது. ஒருநாள், ‘ராயல் எக்ஸ்டென்ஷியல்ஸ்’ (Royal Existentials) என்னும் ‘வெப்காமிக்’ தொகுதியைப் பார்த்தேன். அதில் மொகலாயர் ஓவியங்களைச் சமகால கருத்துகளுடன் ‘வெப்காமிக்காக’ உருவாக்கியிருந்தனர். அதை மாதிரியாக வைத்துதான், ரவி வர்மாவின் ஓவியங்களில் ‘வெப்காமிக்’உருவாக்க ஆரம்பித்தேன்” என்று சொல்கிறார் ராஜேஷ்.
‘இன்எடிபிள் இந்தியா’ பிரபலமானதற்குக் காரணம், அது எல்லோரும் பேசத் தயங்கும் இந்தியாவின் சமகாலப் பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டிருப்பதுதான். “பொதுவாக, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் பெரிதாக யாரும் பேசமாட்டார்கள். அதிலும் குறிப்பாக, சாதிய, மத ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசவே மாட்டார்கள். அதனால், இந்தியாவில் நிலவும் சமகால அரசியல் பிரச்சினைகளையும், சமூகப் பாகுபாடுகளையும், அவற்றைப் பற்றிய மக்கள் மனநிலையையும் பேச நினைத்தேன்.
இந்தக் கருத்துகளை நையாண்டியுடன் ‘காமிக் ஸ்ட்ரிப்ஸ்’ மூலம் தெரிவிப்பதால் எளிதில் நெட்டிசென்களைச் சென்று சேர்கிறது. ஒவ்வொரு காமிக் ஸ்ட்ரிப்பை உருவாக்கியவுடன் அதை நண்பர்களுக்கு அனுப்பி, கருத்துக் கேட்பேன். அவர்கள் நகைச்சுவை குறைவாக இருப்பதாகச் சொன்னால், அதில் போதுமான மாறுதல் செய்து பகிர்ந்துகொள்வேன்”என்கிறார் இவர். ஒரு வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று முறை ‘இன்எடிபிள் இந்தியா’ பக்கத்தை அப்டேட் செய்கிறார்.
மரண தண்டனையைப் பற்றி இவர் உருவாக்கிய ‘காமிக்ஸ்ட்ரிப்’ பேஸ்புக்கில் வைரலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ரவி வர்மா ஓவியத்தில் இருக்கும் பழமை, சமகாலத்தில் நிலவும் பிற்போக்குத்தனம் இரண்டையும் இவரது கருத்துகள் சரியாக இணைக்கின்றன. அதுவும் இந்தப் பக்கத்தின் பிரபலத்துக்கு ஒரு காரணம்.
ஒரு தீவிரமான பிரச்சினையை நகைச்சுவையுடன் விமர்சிப்பது அவ்வளவு எளிமையான காரியமல்ல. அதைத் திறம்படச் செய்கிறார் ராஜேஷ் ராஜாமணி.
‘இன்எடிபிள் இந்தியா’ பக்கத்தைப் பின்தொடர: >https://www.facebook.com/inedibleindia1