Published : 23 Jun 2020 09:22 AM
Last Updated : 23 Jun 2020 09:22 AM

குடும்பத்தினரே புரிந்துகொள்ளாவிட்டால் வேறு எங்கே செல்வேன்?

சென்னையில் வேலை தேடும் பெருங்கூட்டத்தைச் சேர்ந்தவன் நான். பல மாதங்களுக்கு முன்பே நெல்லையிலிருந்து சென்னைக்கு ரயில் ஏறியிருந்தேன். தொடர்ந்து வேலை தேடியும் எந்த வாய்ப்பும் சரியாக அமையவில்லை. ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, நெரிசலில் அடித்துப் பிடித்து ஊருக்கு ஓட வேண்டுமா என சென்னை அறையிலேயே தங்கிவிட்டேன்.

ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேல் சென்னையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வெளியில் சாப்பாடு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவதும் சலிப்பாக இருந்தது. அடுத்து வரும் சில மாதங்களில் வேலை கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை. சரி, ஊருக்குத் திரும்பிவிடலாமென்று இ-பாஸுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், தகுந்த காரணம் இல்லையென்று கூறி தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுவந்தது.

அதேநேரம், நீண்ட நாளைக்கு சென்னையில் தங்குவது சரியில்லை என்று மனதுக்குத் தோன்றியது. சென்னையில் நோய்த்தொற்று வேகமாகப் பரவிவந்தது. ஒரு நாளைக்கு ஆயிரம், 1,500 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுவந்தார்கள். ஆகவே, இ-பாஸுக்குத் திரும்பவும் விண்ணப்பித்து, எனது தொடர்புகளைப் பயன்படுத்தி ஒருவழியாக இ-பாஸ் பெற்றுவிட்டேன். எப்படியாவது ஊருக்குப் போய் சிறிது காலம் ஆசுவாசமாக இருப்போம் என நினைத்து, இந்தத் தகவலை குடும்பத்தினரிடம் கூற கைபேசியில் அழைத்தேன்.

அப்பாதான் போனை எடுத்தார். "தம்பி நீ வர்றது நல்லதுதான். ஆனா, வீட்டுல ஆச்சி இருக்காங்க. நீ வேற சென்னைல ஆயிரம், 1,500 பேருக்கு அன்றாடம் கரோனா வருதுன்னு சொல்ற. வர்ற வழில யார் மூலமாவது உனக்கும் கரோனா வந்திடுச்சுன்னா உனக்கும் ஆபத்து, ஆச்சிக்கும் ஆபத்து. இப்போதைக்குச் சென்னையிலேயே இருந்துக்க முடியாதா, தம்பி" என்றார்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இங்கே வேலையும் இல்லை, முழு ஊரடங்கால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாகச் சாப்பாடும் சரியாகக் கிடைப்பதில்லை. அது மட்டுமல்லாமல் தினசரி கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவது மனத்தில் பீதியை அதிகரிக்கிறது. அதனால்தான் எப்படியாவது ஊருக்குப் போய்விடலாம் என்று நினைத்தேன். ஆனால், குடும்பத்தினரோ அதற்கு நேரெதிராகப் பேசுகிறார்கள். குடும்பத்தினரே என்னைப் புரிந்துகொள்ளாதபோது, வேறு யார்தான் புரிந்துகொள்வார்கள். நான் வேறு எந்த இடத்துக்குப் புகலிடம் தேடிப் போவது?

- சா. கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x