

இசை ரசிகர்களைத் தனது இளமை துள்ளும் வீடியோக்களால் கட்டிப் போட்டிருப்பவர் அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட். இந்த ஆண்டில் இவர் எம்டிவி இசை விருதுகளில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்.
ஆண்டுதோறும் இசைத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு எம் டி வி விருதுகளை வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ஆகஸ்ட் 30 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மைக்ரோசாஃப்ட் தியேட்டரில் நடைபெற்றது. மொத்தம் 16 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த பெண்கள் வீடியோ பிரிவில் டெய்லர் ஸ்விஃப்டின் ப்ளாங் ஸ்பேஸ் என்ற பாடல் விருதைப் பெற்றது. சிறந்த பாப் வீடியோ என்ற பிரிவிலும் இதுதான் விருதைப் பெற்றிருக்கிறது.
எலக்ட்ரோபாப் வகையைச் சேர்ந்த இந்த வீடியோ பாடல் அவரது 1989 என்ற ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஆல்பத்தின் இரண்டாவது சிங்கிள் வீடியோவாக இந்தப் பாடல் கடந்த நவம்பர் மாதம் 10 அன்று வெளியானது.
அமெரிக்க இசை விருதுகள் நிகழ்ச்சிக்காக முதன்முதலில் இந்தப் பாடலைப் பாடி ஆடி அசத்தினார் டெய்லர் ஸ்விஃப்ட். வெறும் மூன்று நாட்களில் உருவாக்கப்பட்ட, விருதை வென்ற பெருமைக்குரிய இந்த வீடியோவை உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். யூடியூப், விவோ போன்ற தளங்களில் பெண்களின் பாப் வீடியோக்களில் அதிகம் பார்க்கப்பட்டதும் இதுதான். நீங்கள் இதைப் பார்க்க விரும்பினால் இதோ முகவரி: https://goo.gl/nW5WHw
டெய்லர் ஸ்விஃப்டின் மற்றொரு வீடியோவான பேட் ப்ளட் இந்த ஆண்டுக்கான சிறந்த வீடியோ விருதை வென்றிருக்கிறது.