Published : 16 Jun 2020 09:19 AM
Last Updated : 16 Jun 2020 09:19 AM

கரோனாவுக்கு ஏன் சென்னையைப் பிடிச்சிருக்கு?

மிது கார்த்தி

கரோனா வைரஸ் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்பதைத் தீவிரமாகக் கடைப்பிடித்துவருகிறேன். தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகும், அரசு வழிகாட்டுதல்களை கொஞ்சமும் மீறவில்லை. சென்னைவாசிகள் பலரும் இதைக் கடைப்பிடிக்கலாம். ஆனால், எல்லோரும் நம்மை போலவே கடைப்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது அல்லவா? அது நிஜம் என்பதை சில நாட்களுக்கு முன்பு இரண்டு சம்பவங்கள் உணர்த்தின.

மாத மளிகைப் பொருட்கள் வாங்கு வதற்காக வேளச்சேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்றேன். உள்ளே செல்லும்போது கைகளைக் கழுவ கிருமிநாசினி கொடுத்தார்கள். பரவாயில்லையே என்று மனதில் நினைத்தப்படியே கைகளில் அதைத் தேய்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். கடையின் முகப்பில் சென்னை மாநகராட்சியும் காவல்துறையும் வழங்கிய ஃபிளெக்ஸ் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. ‘வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளே வர வேண்டும்; முகக்கவசம் அணியாவிட்டால் கடைக்குள் செல்ல அனுமதியில்லை; கடையில் பணியாற்றுபவர்கள் கண்டிப்பாகக் கையுறை அணிய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முகக் கவசம், கையுறை சகிதம் (கடைக்கு செல்லும்போது கையுறையும் அணிகிறேன்) நான் கடைக்குள் நுழைந்தபோது உள்ளே அதிர்ச்சி காத்திருந்தது. சூப்பர் மார்க்கெட்டில் இருந்த வாடிக்கையாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணியாமல் பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள். பணியாளர்களில் ஒருவர் முகத்திலும் முகக்கவசம் இல்லை. ஒரு சிலர் அதை மாட்டியிருந்தாலும், அது தாடைக்குக் கீழே இழுத்துவிடப்பட்டிருந்தது. யார் கையிலும் கையுறைகள் இல்லை. முகக்கவசம் இல்லாத வாடிக்கையாளர்களும் உள்ளே வர தாராளமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு பொருளை நாம் எடுக்கும்போது தனிமனித இடைவெளியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், போட்டிப்போட்டுக்கொண்டு அருகில் வந்து பொருட்களை எடுத்தார்கள்.

அது உறுத்தலாக இருக்கவே, கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு விரைவாக சூப்பர் மார்க்கெட்டில் பில் போட்டுவிட்டு வெளியேறினேன். அடுத்து காய்கறிக் கடைக்கு சென்றேன். அங்கும் இதே நிலைதான். கடையில் இருந்த ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் முகக்கவசம் இல்லாமல் காய்கறிகளைத் தொட்டுத் தொட்டு எடுத்துக்கொண்டிருந்தார்கள். கடைக்காரர் முகத்திலும் முகக்கவசம் இல்லை; கையிலும் கையுறை இல்லை.

மனம் தாளாமல் கடைக்காரரிடம், “நீங்களும் முகக்கவசம், கையுறை போடல; முகக்கவசம் போடாமல் வருபவர்களையும் உள்ளே விடுகிறீர்களே” என்று ஆதங்கத்துடன் கேட்டால், “மூச்சு முட்டுது..” என்று கடைக்காரர் சிரித்துக்கொண்டு சொல்ல, கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், அதிசயத்தைக் கேட்டதுபோல் ஏளனச் சிரிப்புடன் என்னைப் பார்த்தார்கள். கடைக்காரர் பில் போடும்போது, ‘உங்கள் கடைக்கு வரவே பயமா இருக்கு. இனி இந்தக் கடைக்கு வர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

கரோனா நோய்த்தொற்று, ஒற்றை இலக்கத்தில் இருந்தபோது ஓரளவுக்கு முழுமையான பொது முடக்கத்தில் இருந்தோம். இன்றைக்கு நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை எகிறிக்கொண்டிருக்கும் நிலையில், நோயின் வீரியத்தைப் பற்றி கவலைக்கொள்ளாமலும் அரசின் வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளியும் தளர்வுகளை அனுபவித்துவருகிறோம். நோயின் கோரமுகம் இப்போது என்னவென்று மக்களுக்குத் தெரிந்திருக்கும். இன்னும் ஓரிரு மாதங்கள் கழித்து நோயின் தாக்கம் எப்படி இருக்கும் என்று ஊகிக்கவே பேரச்சமாக இருக்கிறது.

வெளியூர் நண்பர்கள், உறவினர்கள் அழைக்கும் போதெல்லாம், சென்னையில் வேகமாகப் பரவும் கரோனா பற்றிய கேள்வி இல்லாமல் உரையாடல் முடிவதில்லை. சென்னையில் ஏன் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதற்கு அரசின் அறிவிப்புகளுக்கு அப்பால், பொதுமக்களின் அலட்சியமும் முக்கியக் காரணம். அதற்கு இரு பருக்கை எடுத்துக்காட்டுகள்தான் மேலே சொன்ன அலட்சியங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x