Published : 16 Jun 2020 09:14 AM
Last Updated : 16 Jun 2020 09:14 AM

கரோனா காலக் கல்யாணங்கள்!

கேரளா திருமணத் தம்பதி

ரேணுகா

கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜம்முன்னு கல்யாணம் செய்வதைவிட கம்முன்னு கல்யாணம் செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம் என நிரூபித்துள்ளன பல இளம் ஜோடிகள்.

தங்களுடைய திருமணத்தை ஆடல், பாடல் என விமரிசையாக நடத்துவதற்குப் பலரும் கனவு கண்டிருப்பார்கள். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடந்தால்போதும் என்ற நிலைக்கு பல ஜோடிகள் வந்துவிட்டன. முகக்கவசங்கள், கிருமிநாசினி, குறைந்த எண்ணிக்கையில் விருந்தினர்கள் என்ற அரசின் வழிமுறைகளைப் பின்பற்றித் திட்டமிட்ட தேதிகளில் பலரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.

எல்லையில் இணைந்த ஜோடி

அப்படி கரோனா காலத்தில் நடைபெற்ற பல திருமணங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழ்நாடு-கேரள எல்லையான சின்னாறு சோதனைச் சாவடி சாலையில் நடைபெற்ற ராபின்சன்- பிரியங்கா திருமணம் குறிப்பிடத்தக்கது. கோவையைச் சேர்ந்த ராபின்சனுக்கும் கொச்சியில் செவிலியராகப் பணியாற்றிவரும் பிரியங்காவுக்கும் கடந்த மார்ச்சில் திருமணம் நடத்த முடிவானது. ஆனால், கரோனா ஊரடங்கால் இவர்களுடைய திருமணம் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு, கடைசியாகத ஜூன் 7 அன்று நடந்தேறியது.

இந்தத் திருமணத்துக்கு மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர். சாலையில் சிறிய ஜமுக்காளம் விரிக்கப்பட்டு அதன்மேல் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. பின்னர், மணமகன் ராபின்சன் கைகளைக் கிருமிநாசினியால் சுத்தம் செய்துகொண்டு மணமகள் பிரியங்காவுக்குத் தாலி கட்டினார். சமூக இடைவெளியை முழுமையாகப் பின்பற்றி திருமணம் நடைபெற்றது. மணப்பெண் பிரியங்கா பெற்றோரை ஆரத்தழுவி விடைபெற முடியாமல் கண்ணீரும் புன்னகையுமாக புகுந்த வீட்டுக்குச் சென்ற காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

அரை நாளில் திருமணம்

இதேபோல பஞ்சாப்பைச் சேர்ந்த சைத்தாலி, நிதின் ஆகியோரின் திருமணத் தேதி 12 மணி நேரத்தில் முடிவாகி நடந்துமுடிந்தது. “எங்களுடைய திருமணத்தை மே 2-ம் தேதி வெகு விமரிசையாக நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஊரடங்கால் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. திருமண நாளை ஒத்திவைக்க முடிவெடுத்திருந்தோம். அப்போதுதான் என் மாமனார் மே 1-ம் தேதி தொலைபேசியில் அழைத்து, “நீங்கள் இருவரும் நிச்சயிக்கப்பட்ட தேதியிலேயே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். நான், ஆமாம் என்றேன்.

எங்களுக்கு கையில் இருந்தது 12 மணிநேரம்தான். அம்மாவின் திருமணப் புடவை, பாட்டியின் பாரம்பரிய நெக்லஸை அணிந்துகொண்டேன். நானே என்னை அழகுபடுத்திக்கொண்டேன். எங்கள் வீட்டை வண்ணத் துணிகளாலும் செயற்கைப் பூக்களாலும் அலங்கரித்தோம். பண்டிகை போல் கொண்டாடப்படும் பஞ்சாபியர்களின் திருமணம் மிகவும் எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் திருமணம் நடந்தேறியது” என்கிறார் மணமகள் சைத்தாலி.

பத்து விருந்தினர்கள்

சண்டிகரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நேஹா, லட்சியா இருவரும் 10 ஆண்டு காதலித்தவர்கள். தங்களுடைய திருமணத்தை கரோனா ஊரடங்கு காரணமாக மேலும் தள்ளிப்போடக் கூடாது என நினைத்ததால், நிச்சயிக்கப்பட்ட தேதியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுடன் 10 விருந்தினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.

ஆயிரக்கணக்கான விருந்தினர்களுடன் பல லட்ச ரூபாய் செலவு செய்து நடத்தப்படும் இந்தியத் திருமணங்கள் வெகு பிரசித்தம். ஆனால், செலவுக்கு அப்பால் மனங்களின் சங்கமமே முக்கியம் என்பதை நிரூபித்திருக்கின்றன இந்த கரோனா காலக் கல்யாணங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x