

ஆப்பிள் நிறுவனம் ‘ஐபேட் புரோ’ என்னும் பெரிய, வலிமையான ஐபேடை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? இருக்கிறது. ஸ்டீவ் ஜாப்ஸ் முதன்முதலில் ஐபேடை அறிமுகப்படுத்தும்போது, ‘‘யாருக்கும் இங்கே ‘ஸ்டைலஸ்’ தேவையில்லை. ஏனென்றால், நம் விரலைவிடச் சிறந்த சுட்டிக்காட்டும் சாதனம் வேறு எதுவும் இல்லை” என்று சொல்லியிருந்தார்.
ஆனால், இப்போது அவருடைய நிறுவனமே ‘ஐபேட் புரோ’வுடன் ஒரு ஸ்டைலஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்த ஸ்டைலஸுக்கு ‘ஆப்பிள் பென்சில்’ என்று பெயர் வைத்திருக்கிறது. இந்த ஸ்டைலஸ் அறிவிப்பு வெளியானவுடனேயே இணைய உலகம் ஆப்பிள் நிறுவனத்தைப் பயங்கரமாகக் கலாய்த்துத் தீர்த்துவிட்டது. சாம்சங்கும், மைக்ரோசாஃப்டும் பல ஆண்டுகளுக்கு முன் செய்த விஷயத்தை ஆப்பிள் இப்போதுதான் செய்திருக்கிறது. விரல்களுக்குப் பதிலாக எதற்கு ‘ஸ்டைலஸைப்’ பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பலரும் யோசித்தனர்.
இதுபோன்ற எல்லாச் சந்தேகங்களுக்கான பதில்களையும் ஆப்பிள் நிறுவனம் ‘ஆப்பிள் பென்சில்’ அறிமுக வீடியோவிலேயே அளித்துவிடுகிறது.
இந்த ஆப்பிள் பென்சில் ‘கிராஃபிக் டிசைன்’, ‘போட்டோ எடிட்டிங்’ எனப் படைப்பாளிகளுக்குப் பெரிய அளவில் உதவக்கூடிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அமைப்பு, அழுத்தம், சாய்வு போன்றவற்றை இந்தப் பென்சிலால் கண்டறிய முடியும். ‘ஐஎஸ்கேஎன் ஸ்மார்ட் சர்ஃபேஸ்’, ‘அடோப் டிஜிட்டல் பேனா’ போன்று இதன் தோற்றம் இருக்கிறது. இது ‘வேகம் டேப்லட்’டை (Wacom Tablet) இடத்தை எளிமையாகப் பிடித்துவிடும். இந்த ஆப்பிள் பென்சிலைப் பயன்படுத்தாதபோது நேரடியாக ஐபேட்டில் சார்ஜ் போட்டுக்கொள்ளும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயலிகள் உருவாக்குபவர்களுக்கு இந்த ஆப்பிள் பென்சில் பெரிய வரப்பிரசாதம். இந்த ஆப்பிள் பென்சிலை வைத்து உங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸின் ‘வேர்டு டாக்குமென்ட்’, ‘பவர் பாயிண்ட் பிரசன்டேஷன்’ என எதில் வேண்டுமானாலும் ஒரு பகுதியை வட்டமிட்டு அதை ‘கிராஃபிக் பொருட்களாக’ மாற்ற முடியும். இதுபோன்ற பல சிறப்புகளை ஆப்பிள் பென்சில் கொண்டிருக்கிறது. ஆப்பிள் பென்சிலின் விலையை 99 டாலராக நிர்ணயித்திருக்கிறார்கள்.
ஆப்பிள் தனக்கே உரியத் தனித்தன்மைகளுடன்தான் ஆப்பிள் பென்சிலை உருவாக்கியிருக்கிறது என்பதை நெட்டிசன்கள் அறிமுக விடீயோவைப் பார்த்தவுடன் ஒப்புக்கொண்டார்கள். அதனால் நவம்பர் மாதம் சந்தைக்கு வரப்போகும் ‘ஆப்பிள் பென்சிலை’ ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.