

ரோஹின்
தலைப்பைப் படிச்சி கொஞ்சம் ஜெர்க் ஆகியிருப்பீங்க. பயப்படாதீங்க! உங்களுக்கு நல்லா தெரிஞ்ச தமிழ்ப் பக்திப் பாடலொன்றின் தொடக்க வரியின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது. சீர்காழி கோவிந்தராஜனின் குரல் நமக்கெல்லாம் அத்துப்படி. கணீரென்று பல காலைப் பொழுதுகளைத் திறந்துவைத்த மங்கலக் குரல் அது. அவரது குரலில் வெளியான ‘நீயல்லால் தெய்வமில்லை…’ பாடலை நீங்கள் தெரிந்திராமல் இருந்திருக்க வாய்ப்பேயில்லை. அந்தப் பாடலில் அப்படியே ஆங்கிலச் சொற்களை போட்டு நிரப்பி, பாடி, அலெக்ஸ் இன் வொன்டர்லேண்ட் புகழ் தனிக்குரல் நகைச்சுவை மன்னர் அலெக்ஸ் வெளியிட்டிருக்கும் ‘சீர்காழி கோஸ் இங்கிலிஷ்’ என்னும் யூடியூப் வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
அமேசான் பிரைம் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியான ‘அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்’ நிகழ்ச்சி மூலம் பரவலான வரவேற்பைப் பெற்றவர் அலெக்ஸ். திரையிசைப் பாடலுடன் நகைச்சுவையைக் கலந்து அவர் தந்த வித்தியாசமான கலவை ரசிகர்களைக் கிறங்கடித்தது. சிரிப்புக்குச் சிரிப்பு, பாடலுக்குப் பாடல் என இரு தடங்களில் ஒரு பயணம் நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் காதில் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த அலெக்ஸ் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராளப் பிரபு திரைப்படத்தில் ‘மாட்டிக்கிட்டான் ராசா மவன்’என்ற பாடலையும் பாடியதன் மூலம் பின்னணிப் பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
அவர் கரோனா காலத்தில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு அவருடைய ரசிகர்களைச் சந்தோஷப்படுத்தி வருகிறார். ஏப்ரல் மாதத்தில் ‘மௌன ராகம்’ படத்தில் இடம்பெற்ற ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலை ஆங்கிலத்தில் பாடி அசத்தினார். அடுத்து ரஜினி காந்த் நடித்த ‘தர்மதுரை’ படத்தின் ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’ ஆங்கிலத்தில் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இப்போது சீர்காழியின் பாடலை ஆங்கிலத்தில் பாடியுள்ளார். பலரை மகிழ்வித்த அந்தப் பாடலை நீங்களும் கேட்டு மகிழலாம்.
சீர்காழி கோஸ் இங்கிலிஷ் வீடியோவைப் பார்க்க : https://youtu.be/7mnMUnGoKcU