

ஆதி
மில்லேனியல்ஸ் எனப்படும் புத்தாயிரத்தின் இளைஞர்களுக்குச் சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் எல்லாம் நிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டு, வேலை நேரம் போக பொழுதுபோக்கிலேயே வாழ்க்கையைக் கழிக்கும் சுகவாசிகள் என்றொரு கருத்து வலுவாக இருக்கிறது. இது ஓரளவுக்கு உண்மை என்றபோதும், இந்த நம்பிக்கையைப் புத்தாயிரத்தின் இளைஞர்கள் சிலர் அவ்வப்போது தகர்த்துவருகிறார்கள்.
கரோனா எனப்படும் கோவிட்-19 தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் நேரத்திலும் இதுபோன்ற ஒரு தன்னார்வக் குழு, கோவிட்-19 நோய் பாதிப்பு குறித்த எண்ணிக்கைகள்-தரவுகளை உடனுக்குடன் covid19india.org என்ற இணையதளத்தில் பதிவேற்றிக்கொண்டிருக்கிறது. கோவிட்-19 தொடர்பான தகவல்களைப் பெறப் பலரும் தேடும் முதல் தளங்களில் ஒன்றாக இது உள்ளது. அதிகாலை 3 மணி, 4 மணிக்குக்கூட இந்தத் தளத்தில் தரவுகள் பதிவேற்றப்படுகின்றன; மேம்படுத்தப்படுகின்றன. இந்தத் தளத்தின் ட்விட்டர் பக்கத்தை 90,000 பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்தத் தளத்துக்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பொதுவெளிகளிலேயே பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன. ‘குறிப்பிட்ட மாநிலத்துக்கான தகவல்கள் சரியாக இல்லை, அதை மேம்படுத்துங்கள்’, ‘இந்த மாநிலத்தில் மாவட்டவாரித் தகவல்கள் சரியாக இல்லை. அதைச் சரிபாருங்கள்’ - என்று கோவிட்-19 தொடர்பான தகவல்களை எவ்வளவு துல்லியமாகத் தருவது, அனைவரும் புரிந்துகொள்ள வசதியாக எப்படி வடிவமைப்பது போன்ற ஆலோசனைகளை இந்தத் தளத்தைப் பின் தொடர்பவர்கள் இந்தத் தளத்துக்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அதற்கேற்ப covid19india.org தளம் மேம்படுத்திக்கொள்வது, பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால் நள்ளிரவு, அதிகாலை என்று நேரக் கட்டுப்பாடு இல்லாமல் நாடு முழுக்க பாதிக்கப்பட்ட நோயாளிகள், குணமடைந்த நோயாளிகள், இறந்தவர்கள், தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்கள் குறித்த தகவல்களை இந்தத் தளம் பதிவேற்றிவருவதே காரணம். நோயரின் அடையாளத்தை வெளியிடாமல் அவர்களுக்கு இடையிலான தொடர்பையும் இந்தத் தளம் தெரிவிக்கிறது.
பாராட்டுப் பெற்ற தளம்
கோவிட்-19 போன்ற கொள்ளைநோய் காலத்தில் தகவல்சார் இதழியலை முன்னெடுப்பதில், மக்களிடையே நோய் குறித்த புரிதலை மேம்படுத்துவதில் இதுபோன்ற உடனடி, துல்லியத் தகவல்களின் முக்கியத்துவம் குறித்து ‘தி இந்து’ ஆங்கில இதழ் தெளிவாக விளக்கியுள்ளது. அதன் அடிப்படையில் அந்த நாளிதழின் செய்திகள் எழுதப்படுவதாகவும் தெரிவித்தது. இந்தத் தரவுகளைத் தொகுப்பதில், அந்த நாளிதழ் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட தன்னார்வ ஆதாரங்களில் covid19india.org முதன்மையானது.
இத்தனைக்கும், “எங்களுடைய நோக்கமெல்லாம் தரவுகளை ஓரிடத்தில் சேகரிப்பதும், எதிர்கால ஆய்வுக்கு அவை உதவியாக இருப்பதை உறுதிசெய்வதும்தான். தரவுகளை முந்தித் தருவது எங்களுடைய நோக்கமல்ல” என்கிறார் இந்தத் தளத்தை உருவாக்கிய குழுவைச் சேர்ந்த ஒருவர்.
சரி, கோவிட்-19 தொடர்பான தகவல்களை மெனக்கெட்டுத் தொகுத்துத் தருவதில் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்ற கேள்வி பலருக்கும் எழும். அதற்கு அந்தப் புத்தாயிரத்தின் இளைஞர்கள் கூறும் பதில் இதுதான்:
‘கோவிட்-19 நாட்டிலுள்ள எல்லோரையும் பாதிக்கிறது. இன்றைக்கு நமக்குத் தெரியாத யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம். நாளைக்கு நாமேகூடப் பாதிக்கப்படலாம். இந்த வைரஸின் பரவலை நாம் நிறுத்தியாக வேண்டும். அதற்கு இந்த நோய் எப்படி, எந்த வகையில் பரவிக்கொண்டிருக்கிறது என்ற அறிவு தேவை. திட்டவட்டமான முடிவுகளை எடுக்க, நாங்கள் தொகுக்கும் தரவுகள் நிச்சயம் உதவும். அதுவே எங்கள் நோக்கம். இதனால் வருமானம் கிடைக்கவில்லை என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல’ என்கிறார்கள் covid19india.org குழுவினர்.