

கனி
கரோனா நோய்த்தொற்றுக் காலம், நமக்கு எல்லா மட்டங்களிலும் புதிய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்திவருகிறது. வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளைச் செய்வதற்கான சாத்தியம் உருவாகியிருக்கிறது. சமூக அளவிலான மாற்றங்கள் மட்டுமல்லாமல், உறவு நிலைகளிலும் இந்த நோய்த்தொற்றுக் காலம் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கியிருக்கிறது.
ஒரு புறம், இந்த ஊரடங்குக் காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால், மறுபுறம் இந்த நோய்த்தொற்றுக் கால ஊரடங்கின் காரணமாக உறவுத்தளங்களில் நேர்மறையான மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கின்றன ஆய்வு முடிவுகள். ‘தி நாட் வேர்ல்ட்வைட்’ (The Knot Worldwide) என்ற உறவுகள் நலச் செயலி, ‘அட் ஹோம் டூகெதர்’ (At Home Together) என்ற பெயரில், தனித்துவாழும் இளைஞர்கள், புதிதாகத் திருமணமானவர்கள், இளம் தம்பதிகளிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
2020 ஏப்ரலின் கடைசி இரண்டு வாரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கலந்துகொண்ட தம்பதிகளில் 90 சதவீதத்தினர், தாங்கள் ஒன்றாகச் செலவிடும் நேரம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 40 சதவீதத்தினர், ஒரு நாளில் 18 மணி நேரத்தை ஒன்றாகச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ஊரடங்குக் காலத்தில், புதிய ஆரோக்கியமான பழக்கங்களைத் தங்கள் இணையுடன் இணைந்து உருவாக்கியிருப்பதாக இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 46 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
தங்கள் இணையை ஆழமாக, கூடுதலாகப் புரிந்துகொள்ள, வெளிப்படையாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள இந்தக் காலம் உதவியதாக 40 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்துகொள்வதும் இந்த நேரத்தில் அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருவரும் இணைந்து சமைப்பது, ஒன்றாக அமர்ந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்ப்பது ஆகியவையும் இந்த நேரத்தில் அதிகரித்துள்ளன.
இந்த நோய்த்தொற்று உருவாக்கிவரும் எதிர்மறை விளைவுகள் தங்கள் உறவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தம்பதிகள் தெரிவித்துள்ளனர். காதலர்கள், தொலைதூரத்தில் வசிக்கும் தம்பதிகள் ஆகியோரில் மூன்றில் இரண்டு மடங்கு பேர், அலைபேசி, காணொலி அழைப்புகளால் தங்கள் இணையுடன் தொடர்ந்து பேசிவருவதாகத் தெரிவித்துள்ளனர்.
“இந்தியச் சமூகம் குடும்ப அமைப்பின் மூலம் இயங்கிவருவது. இணையம், தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தால், புதிய பணிச்சூழல் உருவானது. எப்போதும் சாலைகளில், போக்குவரத்து நெரிசலில், அலுவலகத்தில், சமூக நிகழ்வுகளில் பெரும்பாலான நேரத்தை நாம் செலவிட்டுக்கொண்டிருந்தோம். இதனால், தம்பதிகள் ஒன்றாகச் செலவிடும் நேரம் வெகுவாகக் குறைந்திருந்தது. இந்த நோய்த்தொற்றுக் காலம், மன அழுத்தம், பதற்றம், பிரச்சினைகளைத் தனிநபர்கள், உறவுகளிடம் உருவாக்கியிருந்தாலும், இந்தச் சூழலில் தம்பதிகள் ஒன்றாகச் செலவிடும் நேரம் அவர்களுக்குள் புரிதலை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார் ‘தி நாட் வேர்ல்ட்வைட்’ நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அங்குர் சரவாகி.