

சரத் கமல்
டேபிள் டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆண்டு முழுவதுமே வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் இருப்பவன் நான்.
ஓராண்டில் சராசரியாக 3 மாதங்கள் வீட்டில் இருந்தாலே பெரிய விஷயம். இப்போது 2 மாதங்கள் தொடர்ச்சியாக வீட்டில் இருக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அது மட்டுமல்ல; ஜூலை 31 வரை அனைத்து விளையாட்டுத் தொடர்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
என்னைப் பொறுத்தவரை செப்டம்பர் இறுதிவரை எந்த விளையாட்டுத் தொடரும் நடக்காது. எங்கும் போகவும் முடியாது. நானும் எங்கே செல்லவும் விரும்பவில்லை. அதனால் 3 மாதங்கள்வரை குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட எனக்கு நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
ரொம்ப வருஷமாவே குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கான வாய்ப்பை கரோனா ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. இதுவே எனக்குப் பெரிய பிளஸ்தான். அதோடு பசங்களுக்குப் பள்ளிக்கூடமும் இல்லை. எனவே, குழந்தைகளோடு நேரத்தைச் செலவிடவும் நிறைய வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதனால், தினமும் நேரத்தைச் செலவழிக்க நானே ஒரு அட்டவணையை போட்டிருக்கிறேன்.
காலையில் எழுந்தவுடன் தியானம், யோகா, பயிற்சி, குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது என்று என்னுடைய நேரத்தைப் பிரித்துவைத்திருக்கிறேன். அவர்களைக் குளிப்பாட்டுவது, உணவு கொடுப்பது போன்ற வேலைகளைப் பார்த்துக்கொள்கிறேன். மாலை ஐந்தரை மணிக்கு மேலே குழந்தைகளை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றுவிடுவேன். ஏழு மணிவரை மாடியில் விளையாடுவோம்.
கரோனா பாதிப்பு முடிந்து மீண்டும் விளையாட்டுக்குத் திரும்பும்போது உடற்கட்டோடு இருக்க வேண்டும். எனவே, குடும்பத்தோடு நேரத்தைச் செலவழிக்கிறேன். மேலும், தசைகளை இறுக்கும் பயிற்சி, உடலில் சதை போடாமல் இருக்க பயிற்சி, உடற்பயிற்சி ஒர்க் அவுட்களையும் செய்கிறேன். ராம்ஜி சீனிவாசன் என்பவர் ஜிம்மிலிருந்து காலை 7 மணி, மாலை 4 மணி என இரு முறை ஆன்லைனில் ஒர்கவுட் பயிற்சிகளைச் செய்ய உதவுவார். ஆன்லைனில் பார்த்து பயிற்சியில் ஈடுபடுவேன். கரோனா காலத்திலும் ஃபிட்னஸ் பயிற்சிகளை விடாமல் செய்துகொண்டிருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் டேபிள் டென்னிஸ் பயிற்சி மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன்.
- கார்த்தி