

மிது கார்த்தி
கரோனா தொற்றைவிட இன்று பலரையும் சோர்வடைய வைத்திருப்பது வீட்டுக்குள்ளேயே முடக்கியிருக்கும் ஊரடங்குதான். அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே வரலாம் என்றபோதிலும், அதையும் தாண்டி நகர்வலம் வருவோர் இருக்கவும் செய்கிறார்கள். ஒரு புறம் அத்துமீறி வருவோருக்கு விதவிதமான தண்டனைகளைக் காவல்துறையினர் வழங்கியும் வருகிறார்கள். இன்னொரு புறம் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் இந்த ஊரடங்குக் காலத்தில் கவனம் ஈர்த்த சில விழிப்புணர்வு செயல்பாடுகள்:
கரோனா ஹெல்மெட்
சென்னையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வலம்வருவோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த காவல் அதிகாரி ராஜேஷ் பாபு கையில் எடுத்த ஆயுதம், கரோனா ஹெல்மெட். கரோனா வைரஸைப் போன்று ஹெல்மெட்டை மாற்றியமைத்து, சாலையில் அவர் களமிறங்கினார். ஊரடங்கை மீறிச் சாலையில் சுற்றுவதால், கரோனா நோய் எப்படி நம்மைத் தாக்கக்கூடும் என்பது குறித்து ராஜேஷ் பாபு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வீட்டிலேயே இருப்பதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். கரோனா ஹெல்மெட் ஒளிப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதால், இந்த விழிப்புணர்வும் கவனம் ஈர்த்தது. கரோனா ஹெல்மெட் பற்றிய செய்தி வெளிநாட்டுப் இதழ்களிலும் இடம்பிடித்து விழிப்புணர்வைப் பரவலாக்கியது.
கரோனா ஓவியங்கள்
இந்தியச் சாலைகளில் ஓவியம் வரைந்து கவனம் ஈர்ப்பது காலங்காலமாகவே நடந்துவருவதுதான். இந்த கரோனா காலத்தில் அதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள் ஓவியர்களும் ஓவியக் கல்லூரி மாணவர்களும். தாங்கள் வாழ்ந்த பகுதிச் சாலையில் கரோனா ஓவியங்களை பிரம்மாண்டமாக வரைந்து, ஊரடங்கை மீறிச் சாலையில் சுற்றுவோருக்குப் பாடம் எடுத்தனர். இதுபோன்ற கரோனா ஓவியங்கள் தமிழகத்தின் பல சாலைகளிலும் வரையப்பட்டன. கடினமான இந்தச் சூழ்நிலையிலும் மக்கள் நலனில் அக்கறைகொண்டு ஓவியர்கள் வரைந்த இந்த கரோனா ஓவியங்கள், மக்களின் கவனத்தை ஈர்த்தன.
கரோனா ஆட்டோ
தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில்தான் கரோனா வைரஸின் தாக்கம் அதிகம். ஊரடங்கை மதித்து வெளியே வர வேண்டாம் என்று தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. அதையே தனி கவன ஈர்ப்பு உத்தியாக மேற்கொண்டது சென்னை மாநகராட்சி. ஆட்டோ ஒன்றை கரோனா வைரஸ் போலவே மாற்றியமைத்து வீதிகளில் உலவவிட்டது மாநகராட்சி. சாலைகளில் விழிப்புணர்வை பரவலாக்கியபடி சென்ற கரோனா ஆட்டோவின் ஒளிப்படம் ட்விட்டரில் பகிரப்பட்டு, அது வைரலானது. கரோனா ஆட்டோ பற்றிய செய்தி இந்திய அளவில் முக்கிய இடத்தைப் பிடித்தது.
கரோனா குதிரை
தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் இதுபோல பல விழிப்புணர்வுச் செயல்பாடுகள் கவனம் ஈர்த்தன. தலையில் கரோனா ஹெல்மெட் அணிந்து குதிரையில் வந்து ஒரு காவலர் ஹைதராபாத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆந்திர மாநிலம் கர்னூலில் வெள்ளைக் குதிரையில் சிவப்பு நிறத்தில் கரோனா வைரஸை வரைந்து, அதன் மீது உட்கார்ந்து ஒலிபெருக்கியில் கரோனா தொற்று தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இன்னொரு காவலர். இதுபோன்ற ஏராளமான ஒளிப்படங்கள் இந்தக் காலத்தில் வைரலாயின. இந்த விழிப்புணர்வு முயற்சிகள் அனைத்துமே பொதுமக்களாகிய நமக்கானவை. அதை உணர்ந்து ஒவ்வொருவரும் வீட்டிலேயே இருப்போம்; பாதுகாப்பாக இருப்போம்!