

யாழினி
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மருத்துவர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியான காலத்தில், மக்களிடம் மனநலத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதத்தில், இந்தியாவைச் சேர்ந்த 60 இளம் மருத்துவர்கள் பிரபல அமெரிக்கப் பாடகர் பர்ரேல் வில்லியம்ஸின் ‘ஹேப்பி’ பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியிருக்கிறார்கள்.
‘தி மினிஸ்ட்ரி ஆஃப் ஹேப்பினெஸ்’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நம்பிக்கைக்கான பாடல்’ (Song of Hope) என்ற தலைப்பில் பதிவேற்றப்பட்டிருந்த இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாட்டின் இளம் மருத்துவர்கள் முன்னெடுத்திருக்கும் இந்த உற்சாகமான முயற்சியை நெட்டிசன்ஸ் பலரும் பாராட்டிவருகிறார்கள்.
நான்கு நிமிடங்கள், 32 விநாடிகள் நேரம் கொண்ட இந்தக் காணொலியில், சென்னை, பெங்களூரு, கொச்சி, புனே, நாக்பூர், ஆக்ரா, இந்தூர், டெல்லி, கொல்கத்தா, லக்னோ, சூரத், குருகிராம் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த 60 இளம் மருத்துவர்கள் நம்பிக்கையை விதைக்கும் வகையில் நடனமாடிய காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. மருத்துவர்கள் பூஜா, ஷீத்தல், உன்னத்தி ஆகிய மூவரும் இணைந்து இந்தக் காணொலிக்கான கருத்தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
30 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கைக் கடந்து, இந்த நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடி வருகிறார்கள் என்பதை நேர்மறையாகப் பதிவுசெய்யும் வகையில், இந்தக் காணொலி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலிலும் மனநிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மகிழ்ச்சியை முன்வைக்கும் பர்ரேல் வில்லியம்ஸின் ‘ஹேப்பி’ பாடலுக்கு மருத்துவர்கள் நடனமாடியிருக்கிறார்கள்.
நெருக்கடியான இந்தக் காலத்தில், மக்கள் தங்கள் மனநலனில் அக்கறை எடுத்துகொள்ள வேண்டும் என்ற கருத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கும்வகையில் இளம்மருத்துவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
காணொலியைக் காண: https://bit.ly/2xrrZn7