

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். இதை உணர வேண்டுமானால் கடுமையான வெயிலில் மரங்களே இல்லாத சாலையில் சென்று பார்க்க வேண்டும். இந்தச் சொற்றொடர் எவ்வளவு பொருள் பொதிந்தது என்பது அப்போது புரியும். வெயில் நேரங்களில் நிழல் தரும் மரங்களில் நின்று ஓய்வெடுத்துக்கொள்கிறோம். ஆனால் அந்த மரங்களை யார் நட்டுவைத்திருப்பார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா?
முகமறியாத எவ்வளவோ பேர் நட்டுவைத்த மரங்கள் யார் யாருக்கோ நிழல்களைத் தந்துகொண்டிருக்கின்றன. இப்படி நிழல் தரும் மரங்களை உருவாக்கும் நோக்கத்தில் ‘தரு நிழல்கள்’ என்ற அமைப்பினர் மதுரையில் செயல்பட்டுவருகிறார்கள். ஓராண்டாக மரக்கன்றுகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் சுமார் 30 இளைஞர்கள் மதுரை நகரின் ஏதாவது ஒரு பகுதியில் ஒன்றுசேர்கிறார்கள். சந்திக்கும் வேளையில் ‘தருவோம்’ என்று முழங்குகிறார்கள். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஏதாவது ஒரு வளாகத்தில் சுமார் 25 முதல் 30 மரக்கன்றுகள்வரை நடுகிறார்கள். காலை 8 மணியளவில் மரக் கன்றுகளை நடத் தொடங்கும் அவர்கள் சுமார் 3.30 மணி வரை அந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள். வெளி மாவட்டங்களில் படிக்கும் மாணவர்கள்கூட மரக் கன்றுகளை நடுவதற்காக ஊருக்கு வந்து செல்கிறார்கள்.
தரு நிழல்கள் அமைப்பினர் தங்கள் முதலாமாண்டு விழாவை ஜூலை 5 அன்று மதுரைக் கல்லூரியில் கொண்டாடினார்கள். சில நேரங்களில் மரங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்காக மலையேறும் பயிற்சியிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
மதுரையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் ராஜா இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுகிறார். மாணவர்களின் முயற்சியால் 27.4.2014 அன்று தரு நிழல்கள் என்ற இந்த அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு மாணவர்களே முழுப் பொறுப்பு என்று சொல்லும் ஒருங்கிணைப்பாளர் ராஜா, வாழ்வில் சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற அவர்களின் எண்ணமே இந்த அமைப்புக்கு அடிப்படை என்கிறார். தற்போது இதில் சுமார் 60 உறுப்பினர்கள் உள்ளனர். மாதம்தோறும் ஏதாவது 2 ஞாயிற்றுக் கிழமைகளில் மரம் நடும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
திருப்பரங்குன்றம், எல்லீஸ் நகர், மகாத்மா காந்தி நகர் போன்ற பகுதிகளில் இதுவரை 540 மரக்கன்றுகளை நட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் 7 அடிக்கு மேல் உயரமுள்ள மரங்களையே நட்டு, பராமரித்துவருகிறார்கள். மரங்களின் அவசியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார்கள் இவர்கள்.