

யுகன்
இந்தியா, இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, மாலத்தீவு, பர்மா என சுனாமிப் பேரிடரை எதிர்கொண்ட ஆறு நாடுகளுக்கும் பொதுவான மொழி, பன்முகப் பண்பாட்டை இசையின் துணைகொண்டு அரங்கேற்றும் படைப்பு லயா. புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ‘எர்த்சின்க்’கின் படைப்பு லயா புராஜெக்ட். சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்றிருக்கும் லயா புராஜெக்ட் ஆவணப்படத்தைத் தற்போது இணையத்திலும் பார்க்கலாம்.
சுனாமிப் பேரிடரின்போது மனித நேயத்துடன் தங்களுடைய உயிரைப் பொருட்படுத்தாமல் நன்மைகள் பலவற்றைச் சமூகத்துக்குச் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாடு, மொழி, மதம், சாதி, இன பேதங்களைக் கடந்து மனிதநேயத்தைப் போற்றும் வகையிலும், பன்முகப் பண்பாட்டையும் இசையையும் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆவணப்படத்தைக் காண: www.layaproject.com; இசைக் காணொலியைக் காண: https://earthsync.bandcamp.com/album/laya-project
இது 20:20 செஸ்!
வா.ரவிக்குமார்
விஸ்வநாதன் ஆனந்த், கோனேரு ஹம்பி, விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, பி. அதிபன், டி.ஹரிகா ஆகியோர் செஸ் டாட் காம் இணையதளத்தின் வழியாக ஒரே வேளையில் பலருடன் செஸ் விளையாடி, கரோனா பேரிடருக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 4.5 லட்சம் தொகையைத் திரட்டித் தந்துள்ளனர். செஸ் டாட் காம் இணையதளத்தின் வழியாகச் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்களுடன் செஸ் விளையாடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்திருந்தனர். ஒவ்வொரு வீரரும் 20 பேருடன் ஒரே வேளையில் விளையாடினர்.
விஜயவாடாவிலிருந்து ஹம்பியும், ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட்டிலிருந்து விஸ்வநாதன் ஆனந்தும் இதில் பங்கெடுத்தனர். கோனேரு ஹம்பி 20-ல் 19 ஆட்டங்களிலும், விஸ்வநாதன் ஆனந்த் 20-ல் 18 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றனர். 3 ஆட்டங்களைச் சமன்செய்தார். “எனக்கு இது முற்றிலும் புது விதமான அனுபவம்தான்” என்றார் விஸ்வநாதன் ஆனந்த்.
“ஒரே வேளையில் 20 பேருடன் ஆடியது மறக்க முடியாத அனுபவம். சில ஆட்டங்களில் இன்னும் முனைப்புடன் பயிற்சி செய்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன்” என்கிறார் உலகத் தரவரிசையில் 23-ம் இடத்தில் இருக்கும் விதித் குஜராத்தி. இந்த நல்லெண்ண ஆட்டத்தில் பராகுவேயிலிருந்து ஹரிகிருஷ்ணாவும் சென்னையிலிருந்து பி. அதிபனும் பங்கேற்றனர்.