இப்போது என்ன செய்கிறேன்: கரோனா தந்த பக்குவம்

இப்போது என்ன செய்கிறேன்: கரோனா தந்த பக்குவம்
Updated on
1 min read

ஜி.எஸ்.எஸ்.

ஊரடங்கு காரணமாக வீட்டில் அடைபட்டுக் கிடக்கும்போது உருப்படியான சிலவற்றைச் செய்தேன், சிலவற்றைச் செய்துகொண்டும் இருக்கிறேன். உறவினர் ஒருவரிடமும் நண்பர் ஒருவரிடமும் சிறிது காலமாகத் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் தவிர்த்து வந்தேன். காரணம் இரு வேறு நிகழ்வுகளில் எனக்கு அவர்கள் தவறிழைத்து விட்டதுதான். நான் தவிர்ப்பதை அவர்களும் புரிந்துகொண்டதால், குற்ற உணர்வு காரணமாக மௌனமாகவே இருந்தார்கள்.

இப்போது யோசிக்கும்போது வாழ்க்கையின் போக்கில், அதெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல என்று தோன்றியது. அவர்களைக் கைபேசியில் தொடர்புகொண்டு சகஜமாகப் பேசினேன். நடுவே நடந்ததை மறக்க முயல்கிறேன் என்று கூறியபோது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை அவர்களுடைய குரலிலிருந்து உணர முடிந்தது. கரோனா காலம் இந்தப் பக்குவத்தைத் தந்தது.

எனக்குத் தட்டச்சு நன்கு தெரியும். என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக நான் சொல்லச் சொல்லக் கணினியில் பதிவுசெய்வதற்கு ஒருவர் நாள்தோறும் உதவுவார். ஊரடங்கு காரணமாக அவரால் வர முடியவில்லை. இதழ்களுக்குத் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற நிலையில் ‘கூகுள் வாய்ஸ் ஓவர்’ கருவியை (பேசுவதை அப்படியே கணினியில் பதிவேற்றக் கூடியது) நாடினேன். நடைமுறையில் நிறையப் பிரச்சினைகள். கரோனா என்று சொன்னால் கண்ணா என்று பதிவாகிறது. முற்றுப்புள்ளி என்றால், புள்ளிக்குப் பதிலாக முற்றுப்புள்ளி என்ற சொல் இடம்பெறுகிறது. பத்திகளைப் பிரிக்க முடியவில்லை. என்றாலும்கூட, ஒன்றும் இல்லாததற்கு ஏதோ ஒன்று என்கிற அளவில் அது உதவியாகத்தான் இருக்கிறது.

கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள், வானொலி, தொலைக்காட்சி என்று பல தேவைகளுக்காக விநாடி வினா நிகழ்ச்சி நடத்தி வருவதன் காரணமாக, என்னுடைய கணினியில் எக்கச்சக்கமான விநாடி-வினா கோப்புகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரே எக்ஸெல் கோப்பில் அடக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். கேட்ட கேள்வி, கேட்காத கேள்வி, எந்தத் துறை தொடர்பான கேள்வி என்பதையெல்லாம்கூட வேறுபடுத்த முயல்கிறேன்.

நாள்தோறும் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் நான்கு வாரங்களில் இந்தச் செயல் முடிவடைந்துவிடும் என்று நம்புகிறேன். இதேபோல் ‘சாஃப்ட் ஸ்கில்ஸ்’ தொடர்பான பயிற்சிகளை நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவதால், இது தொடர்பான கோப்புகளும் என்னிடம் அதிகம் உண்டு. ஒரே தலைப்பில் பத்துப் பதினைந்து கோப்புகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் சில மாறுதல்கள் இருக்கும். இவற்றையெல்லாம் தரப்படுத்தும் முயற்சியையும் தொடங்கியிருக்கிறேன்.

வீட்டு வேலைகளில் முன்பு ஓரளவுதான் பங்கெடுத்துக்கொள்வேன். இப்போது மனைவியின் மறுப்பையும் மீறி, கூடுதல் பணிகளில் ஈடுபடுகிறேன். நிறைவாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in