

கனி
காதல் இல்லாத காலம் என்பது வரலாற்றில் இல்லை. அப்படியிருக்கும்போது, கரோனாவால் மட்டும் காதலைத் தடுத்துவிட முடியுமா என்ன? முடியாது என்று நிரூபித்திருக்கிறார் புரூக்ளினைச் சேர்ந்த ஒளிப்படக்கலைஞர் ஜெரிமி கோஹன்.
உலகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுப்பதற்காக மனிதர்கள் வீடுகளில் தனிமையுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஜெரிமி கோஹனின் ‘குவாரன்டைன் கியூட்டி’ என்ற டேட்டிங் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, உலகக் காதலர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 28 வயதாகும் ஜெரிமி கோஹன், தன் டேட்டிங் கதையை மூன்று காணொலிப் பகுதிகளாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவருடைய ஊரடங்கு கால ‘டேட்டிங் ஃபார்முலா’ இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.
அவருடைய கதையின் முதல் பகுதியில், அவருடைய வீட்டின் எதிர் மாடியில் தோரி சிக்னெரல்லா ‘டிக்டாக்’ காணொலிக்காக நடனமாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவரிடம் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் ஜெரிமி கையசைக்க, பதிலுக்கு தோரியும் கையசைக்கிறார். எப்படி அவரிடம் பேசுவது என்று யோசித்த ஜெரிமி, தன்னிடமிருந்த ட்ரோனில் தன் அலைபேசி எண்ணை எழுதி அவருக்கு அனுப்புகிறார். அவரிடமிருந்து பதில் வருமா என்ற சந்தேகத்துடன் இருந்த ஜெரிமியை ஆச்சரியப்படுத்தும் விதமாக, அவருடைய கைபேசிக்கு தோரி பதில் அனுப்புகிறார். இப்படி அவர்களுடைய டேட்டிங்கின் முதல் பகுதியைக் காணொலியில் விளக்கியுள்ளார் ஜெரிமி.
இரண்டாம் பகுதியில், ஜெரிமி தன் பால்கனியிலும், தோரி தன் மாடியிலும் ‘பேஸ்’ செயலியில் பேசிக்கொண்டே சாப்பிடும் காணொலியைப் பகிர்ந்துள்ளார். மூன்றாம் பகுதியில், தோரியைச் சந்திக்க பெரிய பலூன் போன்ற குமிழியைத் தயார்செய்து, குமிழிக்குள் இருந்தவாறு தோரியைச் சந்தித்துள்ளார் ஜெரிமி.
ஆனால், குமிழிக்குள் இருந்ததால் தான் எடுத்து சென்ற பூங்கொத்தை தோரியிடம் ஜெரிமியால் வழங்க முடியவில்லை. இதனால் வருத்தப்பட்டிருக்கும் ஜெரிமி, அடுத்து என்ன புதுமையான வழிகளைக் கண்டறிந்து இந்த கரோனா காலத்தில் தன் காதலை வளர்க்கப்போகிறார் என்று இவர்களுடைய காதல் கதையைச் சமூக ஊடகங்களில் நெட்டிசன்ஸ் ஆர்வத்துடன் பின்தொடர்ந்துவருகிறார்கள். அவர்களுடைய ஆவலைப் பூர்த்திசெய்யும் வகையில், ஐந்து பகுதிக் காணொலிகளை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜெரிமி.
இவர்களுடைய கதையைப் பார்க்க: https://bit.ly/2VvyNbi