

மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இருக்கும் நீண்ட இடைவெளியை நேரடியாக இணைக்கும் வழிகளில் போராட்டங்களும் ஒன்று. மக்களின் கோரிக்கைகள் அரசாங்கத்தைச் சென்றடையவும், முடிவில்லாமல் இருக்கும் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரவும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபடும்போது அவற்றின் தாக்கம் இன்னும் அதிகரிக்கிறது. மொழிப் போராட்டத்தில் ஆரம்பித்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம், தற்போது நடந்துகொண்டிருக்கும் மதுவிலக்குப் போராட்டங்கள் வரை மாநிலம் முழுவதும் மாணவர்கள் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் மாணவர் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்யப்பட்டுகிறார்கள். தமிழகத்தில் தீவிர சமூகப் பிரச்சினையான மதுவுக்கு எதிரான விவகாரத்தில் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டிருக்கும் மாணவர்களின் போராட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் காவல்துறையை விமர்சித்துப் பல செய்திகள் பரவுகின்றன. இந்தப் பின்னணியில் மாணவர்களின் போராட்டங்கள் குறித்தும், சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்தும் மாணவர்களது கருத்துகளின் தொகுப்பு:
ஸ்ரீமதி, மூன்றாம் ஆண்டு பி.இ, அரசு பொறியியல் கல்லூரி, கோவை
அருண் குமார், எம்.பில். (தமிழ்), ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடெல்லி
போராட்டங்களின் தாக்கம்:
போராட்டம் போன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் கலந்துகொள்வது அவர்களின் அரசியல் விழிப்புணர்வை வளர்க்கும். இன்றைய புகழ்பெற்ற அரசியல்வாதிகள் பலர் தங்களின் கல்லூரிக் காலத்தில் மாணவர் இயக்கங்களில் செயல்பட்டவர்களே. ஆகவே, மாணவர்களின் போராட்டங்களுக்கு என்றுமே தாக்கம் அதிகம்.
சமூக ஊடகங்களின் தாக்கம்:
சமூக ஊடகங்களின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆக்கபூர்வமாகவும் எதிர்மறையாகவும் என இரு வகையான தாக்கங்கள் அவற்றால் ஏற்படும். தெருவில் இறங்கிப் போராடுவதற்கு மக்களுக்குத் தேவையான மனமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் சமூக ஊடகங்களால் உண்டாக்க முடியும். தெருவில் இறங்கிப் போராடச் செய்யும் அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனால்கூட, ஒட்டுமொத்த சமூகத்தின் மனநிலையை மாற்றவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக ஊடகங்களால் முடியும்.
வாய்ப்பு கிடைத்தால் போராட்டங்களில் கலந்துகொள்வீர்களா?
அமைதியான முறையில் நடைபெற்ற சில போராட்டங்களில் நான் பங்குகொண்டிருக்கிறேன். என் மனதுக்குச் சரியென்று படும் போராட்டங்களில் இனியும் நான் கலந்துகொள்வேன்.
லிஸ், இரண்டாம் ஆண்டு இதழியல் துறை, எம்.ஓ.பி வைஷ்ணவ கல்லூரி
போராட்டங்களின் தாக்கம்:
மக்கள் தங்களின் கோரிக்கை களை முன்வைத்தும் அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கும் போது மாணவர்களின் அதிரடிப் போராட்டம் தேவையான ஒன்றாக மாறிவிடுகிறது. சரியான நோக்கத்துக்காக, துடிப்பான குறிக்கோளுடனும் ஒன்றுபட்டுப் போராடினால் விரைவில் தீர்வு கிடைக்கும். போராட்டங்களின்போது மாணவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்துவதைக் கண்டித்தாக வேண்டும்.
சமூக ஊடகங்களின் தாக்கம்:
மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சமூக ஊடகங்கள் பெரும் பங்குவகிக்கின்றன. நேரடியாகப் போராட்டத்தில் இறங்க முடியாதவர்களும் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் ஆதரவை அளிக்க முடியும்.
வாய்ப்பு கிடைத்தால் போராட்டங்களில் கலந்துகொள்வீர்களா?:
நல்ல விஷயங்களுக்காகப் போராடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் நான் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். என்னுடைய பங்களிப்பை அளிப்பேன்.
சாய்ராம், இரண்டாம் ஆண்டு இதழியல் துறை, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி
போராட்டங்களின் தாக்கம்: நல்ல நோக்கம் ஒன்றுக்காக எந்த ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதல் இல்லாமலும், வற்புறுத்தல் இல்லாமலும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை ஆதரிக்கிறேன்.
சமூக ஊடகங்களின் தாக்கம்:
பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கான ஒரு தளம்தான் சமூக ஊடகங்கள். நேரடிப் போராட்டங்களின் தாக்கத்தையும் உறுதியையும் இவற்றால் ஏற்படுத்த முடியாது. விழிப்புணர்வு ஏற்படுத்தவே பெரும்பாலும் இவை பயன்படுகின்றன.
வாய்ப்பு கிடைத்தால் போராட்டங்களில் கலந்துகொள்வீர்களா?
போராட்டங்களில் ஈடுபடும்போது காவல் துறையினர் ஏதாவது வழக்கு பதிவுசெய்தால் அது உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிக்கலை உண்டாக்கும். போராட்டங்களில் கலந்துகொள்வதை அதனால் நான் தவிர்க்கிறேன்.
போராட்டங் களின் தாக்கம்:
ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணவும், விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும்தான் மாணவர்கள் ஒன்றுகூடுகிறார்கள். வன்முறை இல்லாமல் அகிம்சை வழியை பின்பற்றினால் அப்போராட்டம் மேலும் வலுப்படும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் செயல்களும் தடுக்கப்படும். மாணவர் போராட்டங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைளுக்குக் கண்டிப்பாக வழிவகுக்கும்.
சமூக ஊடகங்களின் தாக்கம்:
சமூக ஊடகங்கள் மூலமாக ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பது முடியாத ஒன்று. ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால், நேரடிப் போராட்டங்களின் தாக்கம் இதில் இருக்காது.
வாய்ப்பு கிடைத்தால் போராட்டங்களில் கலந்துகொள்வீர்களா?
அகிம்சை வழியில் நடைபெறும் போராட்டம் என்றால், அதில் கண்டிப்பாக நான் பங்கெடுத்துக்கொள்வேன்.