Published : 31 Mar 2020 08:45 AM
Last Updated : 31 Mar 2020 08:45 AM

விசில் போடு 24: தீயாய் வேலை செய்யுது வதந்தி!

‘தோட்டா’ ஜெகன்

மாட்டு வண்டிய பூட்டிக்கிட்டு காட்டு வழியே 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...'ன்னு பாட்டு பாடிக்கிட்டே தலையாட்டி போற கிராமத்து ஆளுங்கள்லேர்ந்து, மெயின் ரோட்டு மேல வீடு இருந்தாலும், பொழுதுக்கும் கேட்டைப் பூட்டிக்கிட்டு, பக்கத்துல குடியிருக்கிறவங்க பேருகூடக் கேட்டுக்காம வீட்டுக்குள்ளயே வாழுற நகரத்து மனிதர்களாகட்டும், எல்லோரையும் போய்ச் சேருற ஒரு விஷயம் என்னன்னா அது வதந்திதான். மனுஷன் வாய்லேர்ந்து வருகிற விஷயங்களில் வாந்தியோட மோசமானது வதந்தி.

உலக மக்கள் எல்லாம் வதந்தி பரப்பறதுல டிகிரி படிச்சிருக்காங்கன்னா, நம்ம மக்களோ வதந்தி பரப்பறதுல டாக்டரேட்டே முடிச்சிருக்காங்க. 25 வருஷத்துக்கு முன்னால புள்ளையார் பால் குடிச்சாருன்னு ஒரு வதந்திய பரப்பி விட்டாங்க. பரீட்சைல பாஸ் பண்ண வைக்கலையா இல்ல லாட்டரில பைசா விழ வைக்கலையான்னு தெரில, எவனுக்குப் பிள்ளையார் மேல என்ன கோபமோ, இப்படிப் பரப்பிவிட்டுட்டாங்க. பிள்ளையார் என்ன பால் குடிப்பாருன்னு கேட்காம விட்டுட்டோமேன்னு ஆட்டுப் பால், மாட்டுப் பால்ன்னு ஆரம்பிச்சு துபாய்ல இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டகப் பால் வரைக்கும், வகைக்கு ஒரு லிட்டருன்னு வாங்கிட்டுக் கோவிலுக்குப் போனவங்கெல்லாம் இன்னமும் இருக்காங்க.

பச்சை கலரு சிங்குச்சா...

பிள்ளையாரை நல்லா பார்த்தீங்கன்னா, ஒரு தந்தம் உடைஞ்சிருக்கும், ஒரு வேளை நம்மாளுங்க ஒரே நேரத்துல ஒட்டுமொத்தமா ஸ்பூன்களை விட்டதால்தானோ உடைஞ்சிடுச்சின்னு ரொம்ப நாளா சந்தேகத்துல இருந்தேன். நாட்டுல இருக்கிறவங்க எல்லாம் நான் கொண்டுவந்த பாலைத்தான் பிள்ளையார் குடிக்கணும்னு கையில பாட்டிலோட கிளம்ப, ‘ஐயோ என் பிள்ளைய காப்பாத்துங்கண்னு, கைலாய வீட்டுல சிவனே புலம்ப ஆரம்பிச்சுட்டாரு. அதுவரைக்கும் தன் வாகனமான எலிக்கு பைக் இன்சூரன்ஸ்கூடப் போடாத விநாயகர், அதுக்குப் பிறகு தனக்கு லைஃப் இன்சூரன்ஸே எடுக்குற அளவுக்கு நம்மாளுங்க கதறவிட்டுட்டாங்க.

பச்சை கலர் புடவை லட்ச லட்சமா வித்த புரளி ஒண்ணு இருக்கு. நங்கையாவுக்கும் நாத்தனாருக்குமான உறவு என்பது சீவமாருக்கும் விளக்கமாருக்கும் இருக்கிற உறவு மாதிரி. ஒண்ணு வீட்டைக் கூட்டுனா, இன்னொன்னு வாசலைக் கூட்டும். அண்ணனைத் தங்கச்சி அன்பாலே அடிச்சா, ஆத்துக்கார அம்மணி அல்லையில மிதிக்கும். இதுல யாரோ பச்சை கலர் புடவை வாங்கிக்கொடுத்தா புருஷன் உயிருக்கு நல்லதுன்னு கிளப்பிவிட, அன்னைக்குத் தான் ஆம்பளைங்களுக்குத் பச்சையில லைட் பச்சை, டார்க் பச்சை, ராமர் பச்சை, அனுமார் பச்சை எல்லாம் இருப்பதே தெரிந்தது.

நாய் கறி உதாரு

விடிந்தவுடனே பொழுது போகலைன்னாக்கூட வதந்திய பரப்ப நம்மாளுங்களாலதான் முடியும். நகைக்கடைய திறக்க நயன்தாரா வந்திருக்காங்க, துணிக்கடைய திறக்க தமன்னா வந்திருக்காங்கன்னு பல்லு விளக்கப்பறப்ப கிளப்பி விட்டுடுவாங்க. ரேஷன் கடையில பருப்பு வாங்குறதைகூட மறந்துட்டு நம்மாளுங்க நெருப்பு மாதிரி கடை திறப்பு விழாவுக்குப் போய்டுவாங்க. நடிகை வராட்டியும் பரவாயில்ல, நடிகை வீட்டு ஜிம்மியவோ இல்லை நடிகையோட மம்மியவோ கூட்டிவாங்க, பார்த்துட்டுப் போறோம்னு கதவுக்கு முன்னால முதுகைக் காட்டி வழிமறிச்சு நின்னவங்க நிறையப் பேரு.

இப்படித்தான் சில மாசம் முன்னால ஹோட்டல்ல நாய்க் கறி போடுறாங்கன்னு யாரோ பேச்சு வாக்குல போட்டுவிட அது காத்துவாக்குல பரவி, ஹோட்டல் சப்ளையர்களை என்னமோ உலகப் போருக்கான வெப்பன் சப்ளையர்கள் மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஹோட்டல் முதலாளிங்க எல்லாம், அய்யா நாங்க காய்கறி வாங்கவே கஷ்டப்படுறோம், இதுல நாய்க் கறிக்கு எங்கய்யா வாங்குறதுன்னு கூட்டறிக்கை விடுற மாதிரி ஆகிடுச்சு.

உப்புமா பீதி

பல வதந்திகளுக்கு ஆயுசு சில வாரம்னா, சில வதந்திகளுக்கு ஆயுசு பல வருஷம். அட்சய திரிதியை அன்னைக்குத் தங்கம் வாங்கினால் வருஷம் பூராவும் தங்கம் வாங்கித் தீராதாம்னு ஒரு வதந்தி. இதுல கொடுமை என்னன்னா, சித்தாடை கட்டினாலும் புத்தாடையா போடு, அதுவும் பட்டாடையா போடுங்கிற ரேஞ்சுல, பல பேரு வருஷத்துல அன்னைக்கு ஒரு நாள் மட்டும்தான் தங்கமே வாங்குவாங்க. யாராவது அரசியல் தலைவர் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டா போதும், நாட்டுக்கோழி அடிச்சு நல்லெண்ணெய் ஊத்தி வக்கணையா சமைச்சுக் கொடுத்த மாதிரி ஆகிடும் வதந்தி பரப்புற வாய்ங்களுக்கு.

காலைல பேச்சு போயிடுச்சு சாயந்திரம் மூச்சு போயிடுச்சு, ஒரு வாரத்துக்கான காய்கறிய வாங்கி வச்சுக்கோங்கன்னு நாலு மணிக்குப் பரப்பி விடுவாங்க. அப்புறம் ஏழு மணி வாக்குல, உடம்புல பழுதெல்லாம் இல்லை. இப்பகூடப் பொழுது போகலைன்னு ஐசியூவுக்குப் பின்னால இருக்கிற சந்துல பந்து விளையாண்டாருன்னு மடைய திருப்பியும் விடுவாங்க.

உப்புமாவைச் சிறந்த உணவாக ஐநா அங்கீகாரம் செய்திருக்கிறது. இது தமிழருக்குக் கிடைத்த கவுரவம்னு புரளியைப் பரப்பி விடுவாங்க. நாம உப்புமாவை மறந்த உணவாக்கலாம்னு இருக்கோம், இவங்க இதுல சிறந்த உணவுன்னு வேற சொல்லி ஆறாத புண்ணுல அயர்ன் பாக்ஸைத் தேய்ப்பாங்க. வதந்திகளில் ரம்யாகிருஷ்ணன்னா அது உலகம் அழியுறதைப் பத்தின வதந்திதான்.

நாம ஸ்கூலுக்குப் போன காலத்துல இருந்து நம்ம குழந்தைங்க ஸ்கூலுக்குப் போற காலம் வரைக்கும் ரம்யாகிருஷ்ணனுக்கு எப்படிப் புருவமும் மாறல உருவமும் மாறலையோ, அப்படியாப்பட்டதுதான் உலகம் அழியுற வதந்தி. வர ஏப்ரல் மாசம் முதல் நாள் உலகம் அழியும், தீபாவளி முடிஞ்சா மறுநாள் உலகம் அழியும்னு என்னைக்காவது ஒருநாள் அழியப் போற மேட்டரை வருஷம் நாலு தடவை திரை கட்டி ஓட்டுவாங்க.

கரோனாவுக்கு ரசம்

இங்கிலாந்து இளவரசி டயானா இறப்புக்குப் பிறகு உலகத்துலேயே அதிகம் பேரு பேசுறது கரோனா பத்திதான். உலக மக்கள் எல்லாம் கரோனாவிடமிருந்து தள்ளிப் போலாம்னு பார்க்கிறப்ப, நம்மாளுங்க அதுக்கே புள்ளி வச்சு கோலம் போட்டுக்கிட்டு இருக்காங்க. ரசம் குடிச்சு வளர்ந்து உடம்புக்கு கரோனா வராதுன்னு ஒரு புரளி.

கோழிகள் மூலம் கரோனா பரவுதுன்னு இன்னொரு வதந்தி. கோழிகளோட பல பரம்பரையா தின்னே கொன்னவனெல்லாம் இப்ப கோழியைப் பார்த்தாலே கடன் கொடுத்தவங்க மாதிரி தள்ளி ஓடுறாங்க. டாஸ்மாக் பார் லீவை டாஸ்மாக் லீவுன்னு பரப்பி விட்டுட்டாங்க நம்மாளுங்க. குழந்தைகளை ஸ்கூல்ல பிக்கப் பண்ண போனவங்கக்கூட குவாட்டரை பிக்கப் பண்ண கடைய நோக்கி நடையைக் கட்டுனாங்க.

கோடி கோடியா செலவு பண்ணியும் மக்கள்ட்ட பரப்ப முடியாத ஒரு விஷயத்தையும் பைசா செலவில்லாம பரப்ப வதந்தியாலதான் முடியும். விமானம் பறக்கிற வேகத்தைவிட வதந்தி பரவுற வேகம் அதிகம். பரவுற வதந்தியகூட மன்னிச்சிடலாம். ஆனா, அதை நம்பி நம்மாளுங்க உருள்றதைத் தான் ஏத்துக்கவே முடியாது.

(சத்தம் கேட்கும்)

கட்டுரையாளர்

தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x