

இளையராஜாவின் பெயரில் அநேக இணையதளங்கள் செயல்பட்டுவருகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் யாரோ நடத்துகிறார்கள். ஆகவே இளையராஜா இப்போது தனக்கான இணையதளத்தைத் தானே தொடங்கியுள்ளார். ரசிகர்களுடன் உரையாடுவதற்கான தளமாக அதை உருவாக்கியிருக்கிறார்.
அந்த இணையதளத்தின் ரசிகர்களுக்கான பக்கத்தில் இளையராஜாவின் ஃபேன் க்ளப்பில் உறுப்பினராக இணைந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் சில முக்கியமான தருணங்களில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும் இந்தப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
ரசிகர்கள் இசை தொடர்பான தங்கள் சந்தேகங்களை இளையராஜாவிடம் கேட்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. கேள்விகளை எழுதி மின்னஞ்சல் வழியாக அனுப்பலாம். அல்லது யூடியூப் உதவியுடன் கேள்வியாகக் கேட்டு அதை வீடியோவாகவும் அனுப்பலாம். இந்தத் தளத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
அந்த இணையதளத்தில் ஒரு போட்டியையும் அறிவித்திருக்கிறார்கள். இளையராஜாவின் இசையில் உருவான அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற நின்னுக்கோரி வர்ணம், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் புத்தும் புதுக் காலை ஆகிய பாடல்களுக்கான வீடியோவை உருவாக்கி அனுப்பும்படி கோரியிருக்கிறார்கள்.
சிறந்த பத்து வீடியோக்கள் இளையராஜாவின் தளத்தில் ரசிகர்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்றும், முதலிடம் பிடித்த வீடியோவை உருவாக்கியவர் இளையராஜாவைச் சந்தித்து இசை ஆலோசனை பெறலாம் என்றும் கூறியுள்ளார்கள். இளையராஜாவின் பாடலுக்குக் காட்சிகளை அமைக்கும் வாய்ப்பு புது படைப்பாளிகளுக்குக் கிடைத்துள்ளது. ஆர்வமுள்ள ரசிகர்கள் வீடியோக்களை உருவாக்கிப் பதிவேற்றம் செய்யலாம். உங்கள் வீடியோவை அக்டோபர் 31-க்குள் அனுப்ப வேண்டும். இளையராஜாவின் இணைய முகவரி: >http://www.ilaiyaraajalive.com/