

ஒரு மணி நேரத்தில் 293 ரூபி சதுரப் புதிர்களை விடுவித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த கிருபா என்னும் இளைஞர். 15 வயதான இவரது இந்தச் சாதனை ஒரு கின்னஸ் சாதனையாகும்.
இதற்கு முன்னர் பிரான்ஸைச் சேர்ந்த தோமா வாட்டியோடென்னா என்பவர் ஒரு மணி நேரத்தில் 210 புதிர்களை விடுவித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்து விட்டார் கிருபா.
உண்மையில் அவர் வெறும் 44 நிமிடங்களிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்திவிட்டார்.
-----------------------------------------------------------
விண்வெளிக்குப் போகும் விஸ்கி
ஜப்பானின் மதுபான நிறுவனமான சந்துரி தனது தயாரிப்பில் சிறந்த விஸ்கியை விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கப்போகிறது. இது என்ன சோதனை என்கிறீர்களா? இந்த நிறுவனம் இரண்டு வகையான விஸ்கிகளை ஆகஸ்ட் 16-ல் விண்வெளிக்கு அனுப்பப்போகிறது, ஒன்று 21 வருடங்களான விஸ்கி, மற்றொன்று அப்போதே தயாரித்த விஸ்கி. இந்த இரண்டும் ஓராண்டுக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
இவற்றில் பாதி ஓராண்டுக்கு பிறகு பூமிக்குக் கொண்டுவரப்படும். மீதிப் பாதி இன்னும் ஓராண்டுக்கு விண்வெளி மையத்தில் வைக்கப்படும். புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளி மையத்தில் விஸ்கியின் நிறம், சுவை, தன்மை ஆகியவற்றைச் சோதிப்பதற்காக இது விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
-----------------------------------------------------------
ஆபாச இணையதளங்கள் முடக்கமா?
இணையவாசிகளில் ஒருசாரார் கடந்த வாரம் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். பாலின்ப இணையதளங்கள் இந்தியாவில் திடீரெனத் தடைசெய்யப்பட்டதுதான் இந்த அதிர்ச்சிக்குக் காரணம். லட்சக்கணக்காக இத்தகைய தளங்கள் செயல்படும்நிலையில் வெறும் 857 தளங்களை முடக்குவதால் 'கவலைப்பட' ஒன்றுமில்லை என இத்தளங்களின் ரகசிய ரசிகர்கள் ஆசுவாசமடைந்தனர். எல்லாத் தளங்களையும் தடைசெய்ய வேண்டுமெனப் பலர் கொதித்தார்கள். பலர் வெளிப்படையாக விவாதிக்க முடியாமல் புழுங்கிக்கொண்டிருந்தபோது, தடைவிலக்கிக்கொள்ளப் பட்டதாக அறிவிக்கப்பட ரகசிய விவாதம் பிசுபிசுத்துவிட்டது.
-----------------------------------------------------------
கின்னஸ் சாதனை படைத்த ஐஸ்கிரீம் கோன்
நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் ஹென்னிக் ஒல்சென். இந்த நிறுவனம் உலகத்திலேயே உயரமான ஐஸ்கிரீம் கோனை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த கோனின் உயரம் 3.08 மீட்டர். இத்தாலியில் இதற்கு முன்னர் 2.81 மீட்டர் உயரமுள்ள கோனே இந்தச் சாதனையைச் செய்திருந்தது. இப்போது நார்வே நிறுவனம் இதை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இந்த கோனில் 1,086 லிட்டர் ஐஸ்கிரீம் நிரப்பப்பட்டது. இதை சுமார் 10,800 பேர் சுவைத்து மகிழ்ந்துள்ளார்கள்.
தொகுப்பு: ரோஹின்