Published : 24 Mar 2020 10:23 AM
Last Updated : 24 Mar 2020 10:23 AM

இணையத்தில் கரோனா வைரல்கள்!

ரேணுகா

உலகையே பீதிக்குள்ளாக்கியிருக்கும் கரோனா வைரஸ் பரவலால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டில் டி.வி.யை விட்டால் இணையமே கரோனோ வைரஸ் நோய் குறித்த தகவல்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துவருகிறது. இதனால் இணையத்தில் கரோனோ நோய் குறித்த வித்தியாசமான, மனதுக்கு நெருக்கமான தகவல்கள் சட்டென வைரலாகிவிடுகின்றன. அந்த வகையில் கரோனா வைரஸ் தொடர்பாக சமீபத்தில் வைரலான சில நிகழ்வுகள்:

கரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்துவருகிறார்கள். இங்கே கடந்த 2014-ம்ஆண்டு மருத்துவம் படிக்கச் சென்றார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமிஷ் வியாஸ். இவர் மருத்துவப் படிப்பை முடித்த பின்னர் வுஹான் மாகாணத்தில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றிவருகிறார்.

கரோனா நோய்த்தொற்று வுஹான் மாநிலத்தில் சதிராட்டம் ஆட, நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். ஆனால், அமிஷோ பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சீனாவிலேயே தங்கிவிட்டார்.

மகனுக்கு கரோனா வைரஸ் தொற்றிவிடுமோ என அஞ்சிய அவருடைய அம்மா, நாடு திரும்பும்படி காணொலி வழியே அழைத்தார். அப்போது பேசிய அமிஷ் “போர் நடக்கும்போது வீரன் பயந்து பின்வாங்கி ஓடக் கூடாது. அதுபோல்தான் ஒரு மருத்துவரான என்னுடைய வேலையும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதுதான் என்னுடைய முதல் கடமை. கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு நாம் மீண்டும் சந்திப்போம்” என்றார்.

பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டினராக இருந்தாலும் ஒரு மருத்துவராக அவர்களுக்கு உதவ முடிவெடுத்த அமிஷ் வியாஸின் காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இவர் கரோனா பரவல் அதிகமுள்ள வுஹான் மாகாணத்தில் மனைவி, மகளுடன் வசித்துவருகிறார். தற்போது சீனாவில் கரோனாவிலிருந்து மக்கள் மீண்டுவருகிறார்கள். கரோனா பாதிப்புக்காகத் தற்காலிகமாகத் திறக்கப்பட்ட மருத்துவமனைகளும் மூடப்பட்டுவருகின்றன. அமிஷ் வியாஸ் பணியாற்றிவந்த தற்காலிக மருத்துவமனையும் மூடப்பட்டுள்ளது.

“ஒரு மருத்துவராக கரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து நான் பயப்படவில்லை. நானும் என்னைப் போல் உள்ள மற்ற மருத்துவர்களுக்கு ஒரு குழுவாக இனைந்து மக்களுக்காகப் பணியாற்றிவருகிறோம். உலகத்தில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் தற்போது ஒரு குழுவாக இணைந்து மக்களை கரோனா தொற்று நோயிலிருந்து காப்பாற்றுவதே முதல் பணி” எனக் கூறியுள்ளார் அமிஷ்.

கரோனா நடனம்

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட கேரளத்தில் இந்நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகள் அசுரவேகத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக, கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் கேரளக் காவல் துறையின் ஊடகத் துறை சார்பில் பொதுமக்கள் கைகளை எவ்வாறு சுத்தமாகக் கழுவ வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டனர். ஆறு போலீஸார் முகக் கவசம் அணிந்துகொண்டு சமீபத்தில் வெளியான ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் வரும் ‘களக்காடு...’ என்ற பாடலுக்கு நடனமாடியவாறே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். காவல் துறையினரின் இந்த வித்தியாசமான முயற்சி, சமூக ஊடகங்களில் வைரலாகி, பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.

இசையால் இணைந்தவர்கள்

கரோனா நோய் தாக்கியுள்ள பெரும்பாலான நாடுகளில் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், எவ்வளவு நேரம்தான் வீட்டிலேயே தங்கியிருக்க முடியும்? இதற்கு மாற்று வழியாக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் இருவர் மக்கள் தனிமையாக உணர்வதைத் தடுக்க தங்களுடைய இசைத் திறமையை வெளிப்படுத்தி, உற்சாகப்படுத்தினர். பார்சிலோனாவில் வசிக்கும் பியானோ இசைக் கலைஞரான ஆல்பர்டோ கெஸ்டோசோ தன்னுடைய பால்கனியில் கீபோர்டு இசைக் கருவியில் ‘டைட்டானிக்’ படத்தில் வரும் ‘My Heart will go on’ படலை வாசித்தார்.

இவரைத் தொடர்ந்து பக்கத்து குடியிருப்பில் வசித்துவந்த இசைக் கலைஞர் அலெக்சாண்டரும் சாக்ஸபோனை வாசிக்கத் தொடங்கி னார். இருவருடைய இசையையும் கேட்டு குடியிருப்புவாசிகள் அனைவரும் கைகளைத் தட்டி உற்சாகமடைந்தனர். இவர்களுடைய இந்தக் காணொலி சமூக வலைத் தளத்தில் வைரலானது. இந்த காணொலியை இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

வடிவேல் மீம்ஸ்கள்

கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் வாட்ஸ்அப், மீம்ஸ் ஆகியவை சமூக வலைத்தளங்களையும் விட்டுவைக்கவில்லை. தங்களைப் பின்தொடரும் ஆண்களை இருமலால் விரட்டும் பெண், கைகுலுக்குவதற்குப் பதிலான கால்களால் இடித்துக்கொள்வது என வித்தியாசமான காணொலிகளும் மீம்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அதேபோல் மீம்கள் முழுவதிலும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ‘கரோனா கலாய்ப்பு’ என்ற மீம்கள் இணைய உலகத்தைத் தொற்றிக்கொண்டுள்ளன.

வெறும் வேடிக்கையான விஷயமாக மட்டும் கரோனா தொற்றுநோயைக் கருதாமல், இந்த ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுவது - கரோனா பரவலைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x