Published : 17 Mar 2020 10:14 AM
Last Updated : 17 Mar 2020 10:14 AM

அச்சில் ஏறும் வேடிக்கை மனிதர்கள்!

ரேணுகா

ஜாலியான வாழ்க்கையில் வேடிக்கையான விஷயங்களுக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் இந்தியக் குடும்பங்களில் நகைச்சுவையான விஷயங்களுக்கு அளவேயில்லை எனலாம். இதுபோன்ற குடும்பங்களில் நடக்கும் வேடிக்கையான விஷயங்களை நகைச்சுவை சித்திரக் கதைகளாக, சமூக வலைத்தளத்தில் வரைந்துவருகிறார் சைலேஷ் கோபாலன்.

மும்பையைச் சேர்ந்த சைலேஷ், படித்து வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில்தான். கவின்கலை, வடிவமைப்பு தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்ற சைலேஷ், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நகைச்சுவை ஓவியம் ஒன்றை பதிவுசெய்தார். அந்த ஓவியம் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான லைக்குகளை அள்ளின. அந்த ஒரு ஓவியம் மூலம் சமூக ஊடகங்களில் சைலேஷ் கவனம் ஈர்த்தபோது அவருக்கு 21 வயதுதான்.

லட்சங்களாக அதிரிகத்தன

சமூக ஊடகங்களில் கிடைத்த இந்தப் பாராட்டு சைலேஷூக்கு சமூகத்தில் நடக்கும் நகைமுரணான விஷயங்களை ஒவியமாகப் பதிவுசெய்யும் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதனையடுத்து ‘brownpaperbagcomics’ என்ற சமூக வலைத்தளத்தில் பக்கம் ஒன்றை உருவாக்கினார் சைலேஷ். தற்போது சைலேஷின் ஃபேஸ்புக் பக்கத்தை மட்டும் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். பொதுவாக, கார்ட்டூன் சித்திரங்கள் வரைவோர் அரசியல் நையாண்டிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், இந்தியக் குடும்பங்களில் தினமும் நடக்கும் வேடிக்கையான நிகழ்வுகளே சைலேஷின் ஓவியங்களுக்கான கரு. இதற்காக கபீர், அனன்யா எனும் இரு கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் சைலேஷ். இந்த இரு கதாபாத்திரங்களும் எதிர்கொள்ளும் விஷயங்களைச் ஒவியங்களாகப் பதிவுசெய்கிறார்.

உதாரணத்துக்கு, அழுதுகொண்டிருக்கும் மகளிடம், “ஏன் அழுகிறாய்? எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லு” என்பார் அம்மா. “நான் ஒருவரைக் காதலிக்கிறேன். ஆனால், அவனுக்கு வேறு பெண்ணைப் பிடித்திருக்கிறது” என அந்தப் பெண் சொன்னால், “இதற்காகவா நான் உன்னைப் படிக்க அனுப்புகிறேன்?” என ஆத்திரப்படுகிறார். அதேபோல் சிலர் தங்களுக்குப் பிறந்தநாளைக் கொண்டாடப் பிடிக்காது என்பார்கள் ஆனால், நிஜத்தில் பிறந்தநாளன்று யாராவது வாழ்த்து செய்தியை அனுப்ப மாட்டார்களா என ஏக்கத்துடன் இருப்பார்கள். இதுபோல் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை நகைச்சுவைச்ஓவியங்களாகப் பதிவு செய்துவருகிறார்.

நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களைக் கஷ்டப்படுத்திச் சிரிப்பதைவிட, நம்மைச் சுற்றி எந்த அளவுக்கு நகைமுரண்கள் உள்ளன என்பதைத் தன்னுடைய சித்திரங்கள் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் சைலேஷ் கோபாலன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x