Published : 03 Mar 2020 10:21 AM
Last Updated : 03 Mar 2020 10:21 AM

இளமைக் களம்: கொஞ்சம் ஓவியர், கொஞ்சம் யூடியூபர்!

என். கௌரி

சமூக ஊடகங்களை எப்படிச் சரியாகப் பயன் படுத்தலாம் என்பதற்கு ‘ஜென் இஸட்’ தலைமுறைதான் முன்னுதாரணம். அதிலும், இன்றைய இளம் கலைஞர்கள் பலர் சமூக ஊடகங்களைத் தங்கள் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கைக்கும் தூண்டுகோலாக இருக்கிறார்கள். அப்படியொரு இளைஞர்தான் சென்னை, கேளம்பாக்கத்தைச் சேர்ந்த கேசவ் ரத்னவேல். எலக்ட்ரானிக் மீடியாவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்கும் அவருக்கு வயது 25.

சிறந்த வழித்தடம்

சிறு வயதிலிருந்தே வரைவதிலும் கதை சொல்வதிலும் ஆர்வம்கொண்ட இவர், தற்போது அவற்றுக்கு டிஜிட்டல் வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக யூடியூப்பில் இயங்கிவரும் இவர், தன்னுடைய ‘கேஷ்’ (Kesh) என்ற அலைவரிசையில் எளிமையாக வரைவதற்கான வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

“நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போதே ‘யூடியூப்’பை வெளிநாட்டு ஓவியக் கலைஞர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கவனித்துவந்தேன். அவர்கள் யூடியூப் தளத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்துதான் யூடியூப்பில் இயங்கத் தொடங்கினேன். நம்மிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளமாக மட்டுமல்லாமல், சிறந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நல்ல வழித்தடமாகத்தான் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்கள் இருக்கின்றன.

2010-லிருந்து யூடியூப்பில் இருக்கிறேன். அலைவரிசை ஆரம்பித்து ஏழு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. நீண்டகாலத்துக்கு 7,000 சந்தாதாரர்கள்தாம் இருந்தார்கள். இதனால் பணிகளை நிறுத்திவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அடுத்த ஏழு மாதங்களில் 70,000 பேர் அதிகரித்தார்கள். இப்போது என் அலைவரிசையில் சுமார் 3 லட்சம் பேர் இருக்கிறார்கள்” என்று உற்சாகமாகப் பேசுகிறார் கேசவ்.

கதை சொல்லி

சிறுவயதிலிருந்தே கார்ட்டூன்கள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் திரைப்படங்கள் பார்ப்பது, பாட்டியிடம் கதை போன்றவை கேட்பது இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்திருக்கின்றன. “என்னுடைய அம்மா சின்ன வயசுல என்னை சிவசங்கர் பாபா ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்வார். அங்கே போகும்போதெல்லாம் ஏதாவது ஒன்றை வரைந்து சிவசங்கர் பாபாவிடம் காட்டுவேன். அதைப் பார்த்துவிட்டு, என் முகத்தில் மீசை அல்லது ஏதொவொன்றை அவர் வரைந்துவிடுவார்.

எனக்கு அது மிகவும் பிடிக்கும். அவரிடம் காட்டுவதற்காக வரைய தொடங்கியது நாளடைவில் பேரார்வமாக மாறிவிட்டது. இயல்பாகவே என்னிடம் இருந்த கற்பனைத்திறன் ஓவியங்கள் வழியாகக் கதைசொல்பவனாக என்னை ஆக்கியது என்று நினைக்கிறேன்” என்கிறார் கேசவ். இவரது படைப்புலகம் பெரும்பாலும் கற்பனைக் கதாபாத்திரங்கள், கேலிச்சித்திரங்களால் நிறைந்திருக்கிறது.

100 நாட்கள் சவால்

தான் வரைவதோடு நிறுத்திக்கொள்ளாமல், மற்றவர்களையும் வரைவதற்குத் தூண்டும்விதமாகச் சென்ற ஆண்டு இன்ஸ்டாகிராமில் ‘100 நாட்கள் ஸ்கெட்சிங் சேலஞ்ச்’ என்ற ஒரு பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் கேசவ். “நம்ம எல்லோரிடமும் பேரார்வம் இருக்கிறது. ஆனால், எல்லோராலும் நினைத்தபடி அதைத் தொடர முடிவதில்லை.

வழக்கமான வேலை நேரம்போக மீதி நேரத்தில் மனத்துக்குப் பிடித்தபடி வரையலாம், எழுதலாம் என்று நினைத்தால் அது அவ்வளவு சீக்கரத்தில் நடப்பதில்லை. அதை மனத்தில் வைத்துதான் இந்த ‘100 நாட்கள் ஸ்கெட்சிங் சேலஞ்ச்’ என்ற பிரச்சாரத்தைக் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கினேன். இந்த மே மாதம் இன்னொரு சேலஞ்ச் தொடங்க இருக்கிறேன்.

அன்றாடம் குறைந்தது ஆறு நிமிடங்கள் வரைவதற்காக ஒதுக்கி, அதை இன்ஸ்டாகிராமில் பதிய வேண்டும் என்பதுதான் அந்த சவால். எடுத்தவுடன் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் வரைய வேண்டும் என்று நினைத்தால், அது சாத்தியமாகாது. எளிமையாகச் சின்னச் சின்னப் பழக்கங்களாக முன்னெடுக்கும்போது அதில் வெற்றிபெறுவது எளிது.

அதுதான் ஆறு நிமிட ‘ஸ்கெட்சிங் சேலஞ்ச்’ வெற்றிபெற்றதற்குக் காரணம். நான் வரைவதோடு மற்றவர்களையும் என்னோடு சேர்ந்து வரைய வைத்தது உண்மையிலேயே சிறந்த அனுபவமாக அமைந்தது” என்று சொல்கிறார் கேசவ். இந்த ‘100 நாட்கள் ஸ்கெட்சிங் சேலஞ்ச்’ முடிவில் 47,000 ஓவியங்கள் உருவாகியிருக்கின்றன.

பொறுமை கடலினும் பெரிது

கல்லூரிப் படிப்பைப் படித்து முடித்தவுடன், ஏழு மாதங்கள் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றிய கேசவ், அதன் பிறகு, முழுநேர ‘ஃப்ரீலான்ஸ்’ ஓவியராகப் பணியாற்றிவருகிறார். யூடியூப்பில் வெற்றிகரமாக இயங்க கேசவ் சொல்லும் ஆலோசனை இதுதான். “யூடியூப் மட்டுமல்ல, எந்த ஒரு சமூக ஊடகத்தையும் அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த பொறுமை அவசியம்.

பொறுமை கடலினும் பெரிது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், எதிர்பார்ப்புகள் இல்லாமல் இயங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் படைப்புகளுக்கு ‘லைக்ஸ்’ ‘ஷேர்’ கிடைக்காதபோது வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால், எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து செயல்படும்போதுதான் வெற்றிபெற முடியும்.” என்கிறார் கேசவ்.

யூடியூப் சேனலில் மாதம் ஒரு புதுமையான ‘ஆர்ட் ஷோ’ நிகழ்த்துவது, பயனுள்ள ஆன்லைன் ஓவியக் கல்விக் காணொலிகளை உருவாக்குவது, வலைத்தொடர்கள், நேரலை மல்டிமீடியா திரைப்படம் தயாரிப்பது, முக்கியமாக நல்ல கதைகளை டிஜிட்டல் வடிவத்தில் சொல்வது என ஒரு பெரிய பட்டியலைத் தன் வருங்காலத் திட்டமாகப் பகிர்ந்துகொள்கிறார் கேசவ்.

கேசவ் யூடியூப் அலைவரிசையைப் பார்க்க: www.youtube.com/user/kesh4ares/videos

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x