Published : 25 Feb 2020 10:29 AM
Last Updated : 25 Feb 2020 10:29 AM

இணைய உலா: தனி இருவர்!

வி. சாமுவேல்

‘ஒத்தசெருப்பு’ படத்தில் ஒரே ஆளாக ஆர். பார்த்திபன் நடித்ததைப் போல், ஒரே ஆளாக யூடியூப் அலைவரிசை ஒன்றில் நடித்து அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஹரி பாஸ்கர். தன்னுடைய திரைக்கதையில் எல்லாக் கதாபாத்திரங்களையும் ஹரி பாஸ்கர் ஒரே ஆளாகச் செய்கிறார். இந்த ‘சோலோ’ நடிப்பில், ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தித் தனக்கென யூடியூபில் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிவைத்திருக்கிறார் ஹரி பாஸ்கர்.

நடிப்புக்கு ஹரி பாஸ்கர் காரணம் என்றால், அதன் பின்னணியில் அவருடைய நண்பர் நரேஷும் இருக்கிறார். இவர் கேமராமேனாகவும், வீடியோ எடிட்டராகவும் செயல்பட்டு எழுத்துக்கு வடிவம் கொடுக்கிறார். கேமராவுக்கு முன் ஒருவர், கேமராவுக்குப் பின் ஒருவர் என இரண்டே பேர்கொண்ட ‘காம்போ’ தான் இவர்களுடைய படைப்புகளின் பின்னணியில் உள்ளது. யூடியூபில் ‘ஜம்ப் கட்ஸ்’ (Jump Cuts) என்ற பெயரில் அலைவரிசை ஒன்றைத் தொடங்கித் தாங்கள் உருவாக்கும் வீடியோக்களை இவர்கள் பதிவேற்றிவருகிறார்கள். இந்த அலைவரிசைக்குச் சுமார் 19 லட்சம் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர்.

ஒத்த ஆள்

கல்லூரி நண்பர்களான இவர்கள், ஒரே சிந்தனையுடன் பயணித்துவருகிறார்கள். எப்படி இந்தத் துறைக்குள் வந்தீர்கள் என்று ஹரிபாஸ்கரிடம் கேட்டோம். “ கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் உதவி இயக்குநராகவும் நரேஷ் உதவி கேமராமேனாகவும் ஆனோம்.

ஆனால், சில மாத இடைவெளியில் இருவரும் சேர்ந்து யூடியூப் அலைவரிசையைத் தொடங்க முடிவுசெய்தோம். ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே நான் நடித்தேன். பின்னர் கதைக்கேற்ப பல கதாபாத்திரங்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் நரேஷ், ‘எல்லாக் கதாபாத்திரங்களையும் நீயே பண்ணு’ என்று ஐடியா கொடுத்தான். முயற்சி செய்துதான் பார்ப்போமே என்று பல கதாபாத்திரங்களைச் செய்யத் தொடங்கினேன்.” என்கிறார் ஹரி பாஸ்கர்.

ஆண் கதாபாத்திரம் மட்டுமின்றிப் பெண் கதாபாத்திரங்கள் வந்தாலும் அதையும் ஹரிபாஸ்கரே செய்கிறார். ஆனால், பெண் போல் மேக்அப் போட்டுக்கொள்ளாமலேயே ஹரி பாஸ்கர் நடித்துவிடுகிறார். நரேஷ் ஒளிப்பதிவையும் எடிட்டிங் வேலையையும் செய்துவிடுகிறார்.

எல்லா வேலைகளையும் முடித்து யூடியூபில் இருவரும் பதிவேற்றிவிடுகிறார்கள். ஒரே ஆள் பல கதாபாத்திரங்களில் தோன்றும் இவர்களுடைய வீடியோவைப் பார்த்து சந்தாதாரர்கள் எகிற ஆரம்பித்துவிட்டார்கள். இவர்கள் ஒரு வீடியோ போட்டாலும், அதை லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் பார்த்துவிடுகிறார்கள். அடுத்த வீடியோ எப்போது வரும் என்று சந்தாதாரர்களைக் காத்திருக்கச் செய்யும் அளவுக்கு சுவாரசியமான விஷயங்களை இருவரும் செய்துவருகிறார்கள்.

இளைஞர்களின் கருத்துகள்

இவர்களுடைய வீடியோக்களில் ‘பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ வீடியோ பெரிய வரவேற்பைப் பெற்றது. எப்படி ஒரே ஆளாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிகிறது? “ கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவேன். எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ அந்தக் கதாபாத்திரம் எப்படி நிஜ வாழ்க்கையில் நடக்கும் என்பதை யோசித்து நடிப்பது வழக்கம். ஒரு சில யோசனைகளை நரேஷ் சொல்வான். பாவனைகளைச் சேர்ப்பது பற்றி இருவரும் பேசி முடிவுசெய்வோம்” என்கிறார் ஹரி பாஸ்கர்.

இவர்களுடைய வீடியோக்களைப் பெரும்பாலும் இளைஞர்கள்தாம் பார்க்கிறார்கள். எனவே, இளைஞர்கள் அடிக்கும் கூத்துகளையும் நகைச்சுவையையும் தங்களது வீடியோக்களில் அதிகம் சேர்த்துக்கொள்கிறார்கள். மேலும், சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துகளும் வீடியோக்களில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

“பலரும் எங்கள் வீடியோக்களைப் பார்த்து பாராட்டுகிறார்கள். நிறைய பார்வையாளர்கள் எங்களுக்கு நல்லவிதமான யோசனைகளையும் சொல்வார்கள். அவற்றை முடிந்த அளவுக்குச் செயல்படுத்துவோம். எங்கள் வீடியோக்களில் அதிக அளவில் நிகழ்கால விஷயங்கள் இருக்கும்படியும் பார்த்துக்கொள்கிறோம்” என்கிறார் நரேஷ். தற்போது ஹரிபாஸ்கரும் நரேஷும் சேர்ந்து யூடியூப் அலைவரிசையில் தொடர் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்கள். யூடியூப் பிரபலங்களாக உருவாகிவிட்ட இருவரும், அடுத்தகட்ட பாய்ச்சலுக்காகக் காத்திருக்கிறார்கள்!

யூடியூபில் இவர்களுடைய வீடியோவைக் காண: https://bit.ly/2T6wFWb

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x