Published : 25 Feb 2020 10:29 AM
Last Updated : 25 Feb 2020 10:29 AM

விசில் போடு: இது தாண்டா தண்டம்

‘தோட்டா’ ஜெகன்

இதுவும் கடந்துபோகும்னு நாம நாட்களை நகர்த்த முடியாத மாதிரி எப்பவும் நம்மோடு இருந்துவரும் ஒரு விஷயம் செலவு. செலவுகளுக்காகத்தான் நாம சம்பாதிக்கிறோம் என்பது உண்மை. ஆனா, பிரச்சினை என்னன்னா, நம்மில் பலரும் சம்பாதிக்கிறதை அனைத்தையும் செலவு பண்றதுதான்.

நாடு இன்னைக்குப் பொருளாதார மந்தநிலைல இருக்கிறதுனால, நாட்டுல முக்கால்வாசி பேருக்கு வாழ்வாதாரம் நொந்த நிலைலதான் இருக்கு. ‘அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும், வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் அவனும் குருடனும் ஒன்றாகும்’னு எழுதினார் கவிஞர் வாலி. சட்டை வாங்க போனப்ப ஒரு கைக்குட்டை சேர்த்து வாங்கலாம். ஆனா, ஒரு முட்டை வாங்கறதுக்கு ஒரு பெட்டை கோழி வாங்குற கதையாத்தான் இருக்கு இந்தத் தலைமுறை செலவு செய்யறது.

எத்தனை மொபைல்?

இன்றைய இளைஞர்கள் கண்ணை மூடிக்கொண்டு செய்யறது ரெண்டே விஷயம்தான். ஒண்ணு, படுத்துத் தூங்குறது; ரெண்டு, புதுசு புதுசா செல்போன் வாங்குறது. அந்த சிவனுக்குக்கூட மூணு கண்ணுதான். ஆனா, இன்னைக்கு செல்போனுக்கு கேமராங்கிற பேருல நாலு கண்ணு.

வாழ்க்கைலகூட ஒருத்தனுக்கு மொத்தமா நாலு காதல்தான் வரும். ஆனா, மொபைல்களில் வாரத்துக்கு நாலு மாடல் வருது. ஒண்ணைவிட ஒண்ணு பெட்டரா இருக்கலாம்தான். அதுக்காக எப்பவுமே ‘பெஸ்ட்’டை வச்சு இருக்கணும்னு, ரெஸ்ட் விடாம செலவு பண்ணக் கூடாது. பொங்கல்ல நெய் ஊத்துனா பிரயோஜனம்; செங்கல்ல நெய் ஊத்தலாமா?

சின்ன வயசுல ஆசை சாக்லெட்டை டப்பாக்குள்ள போட்டு தெருவுல இருக்கிறவங்களுக்குக் கூச்சப்பட்டுக்கிட்டே கொடுத்துக்கிட்டு இருந்தவங்கதானே நாம. ஆனா, இன்னைக்கு நம்ம பொறந்தநாளுல இருந்து நமக்குப் பொறந்தததோட பொறந்தநாள் வரைக்கும், அந்த ஒரு நாளுல நாம பண்ற செலவைக் கணக்குப் போட்டா, அமைச்சர் பெருமக்கள் தங்கள் வேட்டி சட்டையை வருஷம் முழுக்கச் சலவைக்குப் போட்டதைவிட அதிகமா இருக்கும். சிவப்பு நிறத்துல வெள்ளைய கரைச்சா ரோஸு; சேமிப்புல இருந்து காசைக் கரைக்கிறவன் கண்டிப்பா லூஸுன்னு போயிட முடியாது. ஏன்னா பல பேரு கைக்காசுல கொண்டாடாம, கடன் வாங்கி வேற கொண்டாடுறான்.

ஒரு காருல ஒருத்தரு

நேரம் இருந்தா பைக்ல போற தூரத்துக்கு நடந்தே போலாம். ஆனா, நாம நேரமிருந்தும், நடந்து போற தூரத்துக்கே காருலதான் போறோம். வீட்டுல வசிக்கிற ஆட்களின் எண்ணிக்கையைவிட வெளியில நிற்குற பைக்குகளின் எண்ணிக்கை அதிகமா இருக்கு. பஸ்ல போனா நம்மளைப் பதினெட்டுப் பட்டியிலேர்ந்து ஒதுக்கி வச்சிடுவாங்கங்கிற ரேஞ்சுலதான் நாம பப்ளிக் டிரான்ஸ்போர்ட்டைப் பார்க்கிறோம்.

வடைக்கு நடுவுல ஓட்டை போடுறதுல ஓர் அர்த்தம் உண்டு; குடைக்கு நடுவுல ஓட்டைய போட்டா அர்த்தமிருக்காங்கிற ரேஞ்சுதான் ஒரு ஆளைக் கூட்டி வரப்போக ஒரு காரு போறது. ஒண்ணுக்கு மேல பழம் இருந்தாதான் அது வாழைத்தாரு, ஒருத்தருக்கு மேல பயணம் செய்யதான் இருக்கு காரு. வாழ்க்கைங்கிற வண்டி ஓடணும்னா சுத்தணும் சேமிப்பென்னும் சக்கரம், இல்லன்னா நாம வண்டியோடாம எங்கையோ நிற்கறோம்னு அர்த்தம்.

சம்பாதிக்கிறதே சாப்பிடத்தான். ஆனா இன்னைக்குப் பல யுவன் யுவதிகள் சம்பாதிக்கிறதுல முக்கால்வாசி போறதே சாப்பாட்டுனாலதான். மொபைல்ல விரல் அமுத்தி ஆர்டர் போட்டா, விடிய விடிய சாப்பாடு டெலிவரி பண்றாங்கன்னு, உடல்ல இருக்கிற குடல்களை ஓய்வில்லா உரல்கள் போல் வேலை கொடுத்துக்கிட்டு இருக்கோம். வெளிய போய் 5 ரூபாய்க்கு காபி குடிக்க சங்கடப்பட்டு வீட்டுல வச்சு குடிச்சவங்களோட குழந்தைங்களான நாம, இன்னைக்கு 200 ரூபாய்க்கு காபி குடிக்க பழக்கப்பட்டுட்டோம்.

10 ரூபா பணியாரம் போக்குற அதே பசியைத்தான், பல நூறு மதிப்புள்ள பீட்சாவும் போக்குது. எந்த உணவையும் சுவைப்பது தவறே இல்ல. ஆனா, அதுதான் பந்தான்னு விலையுயர்ந்த உணவோடு வசிப்பதுதான் தவறு. இந்த ஹோட்டல்ல ரெண்டு சாம்பார் தரான், அந்த ஹோட்டல்ல 4 பொரியல் தரான்னு தேடிப் போய் சாப்பிடுறோம். உடம்புக்குள்ள இருக்கிறது ரெண்டே ரெண்டு கிட்னி, அது புரியாம எதுக்கு தோசைக்குத் தொட்டுக்க தொன்னுத்தியேழு சட்னி?

வாயைப் பொளந்துச்சு

வீட்டுலேர்ந்து தண்ணி பாட்டில் எடுத்துட்டுப் போறதை அசிங்கமா நினைக்கி றோம். நாம மாசத்துக்கு வாங்கின தண்ணி பாட்டில் கணக்கைப் பார்த்தா, மாநகராட்சிப் பள்ளில ஒரு குழந்தைக்கு பீஸைக் கட்டிட லாம். ‘எலாஸ்டிக்’ இல்லாத ஜட்டி இடுப்புல நிற்காது, பிளாஸ்டிக் பைல போட்ட குப்பை சீக்கிரம் மக்காதுன்னு எப்பவும் மைண்ட்ல வைங்கப்பா. வீண் செலவுகளும் மக்காத பைக்குள்ள கொட்டிய குப்பைகள்தான்.

இன்னைக்கு ஆன்லைன்ல ஆர்டர் போட்டு பொருட்கள் வாங்கி, வீட்டோட மொத்தப் பரப்பளவு முழுக்கத் தேவையற்ற பொருட்களை நிரப்பறது அதிகமாகிடுச்சு. ஆசையா பணம் போட்டு வாங்குன பொருட்கள்ல பாதியைக்கூட நாம முழுசா அனுபவிச்சதில்லை. அவங்கவங்களுக்குப் போட்டுக்கணும்னு டிரஸ் எடுத்தப்ப எல்லாம் ஒழுங்காதான் இருந்துச்சு. அடுத்தவங்க பார்க்கணும்னு ட்ரஸ் எடுக்க ஆரம்பிச்சப்புறம்தான் நம்ம பர்ஸ் தூக்குல தொங்கி வாயப் பொளந்துச்சு.

ஆள் பாதி ஆடை பாதிதான், ஆனா இன்னைக்கு பிராண்டட் ஆடை விலைய கேட்டால் ஆளே காலி. ஐநூறு ரூபா சட்டைக் காப்பாத்துற அதே மானத்தைத் தான் ஐயாயிரம் ரூபா சட்டையும் காக்குது. குழம்புல போடுற பருப்பைக்கூட அளவா அள்ளிப் போடுற நாமதான், காலுல போடுற செருப்புக்கு ரெண்டாயிரம் கொட்டுறோம்.

திடீரென வரும் செலவை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது. ஆனா தேவைக்கு மட்டும் செலவு செஞ்சிருந்தா, இந்தத் திடீர் செலவுகளைப் படீரென உடைக்கலாம். செலவழிக்கிறது மட்டும் செலவு இல்ல, சேமிச்சு வைக்க வாய்ப்பிருந்தும் சேமிக்கப்படாததும் செலவுதான். எவ்வளவு செலவு பண்றோம் என்பது எப்படி முக்கியமோ, அதைவிட முக்கியம் எதுக்காகச் செலவு பண்ணினோம் என்பதும்.

தேவைக்குச் செய்யறதுதான் செலவு என்று அறிந்து வாழ்வதே வாழ்க்கையின் நெளிவு சுளிவு. வண்டிய தினம் துடைச்சு வச்சுட்டாலோ, வகுப்புல சொல்றதைத் தினம் படிச்சு வச்சுட்டாலோ எந்தப் பிரச்னையும் இருக்காதுங்கிற மாதிரி, செலவு பண்ணனும் தோணுறப்ப ஐம்புலன்களை அடக்கி வச்சா, நிலபுலன்கள் இல்லாட்டியும் நிம்மதியா வாழலாம்.

(சத்தம் கேட்கும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x