

ரேணுகா
இன்றைக்கு என்னதான் கார், பைக் எனப் பல வாகனங்கள் வந்துவிட்டாலும், சைக்கிள் ஓட்டும் மகிழ்ச்சி அலாதியானது. அதிலும் சைக்கிள் ஓட்டிக்கொண்டே வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்லும் மகிழ்ச்சியை அளவிடவே முடியாது.
மாறிவரும் வாழ்க்கைப் பழக்கவழக்கங்களால், உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு ஏராளமானோர் மீண்டும் சைக்கிளுக்குத் திரும்பியுள்ளனர். சிலர் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் பங்களிப்புக்காக சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக்கிவருகிறார்கள்.
இவர்களுக்கு இடையே சென்னையை மையமாக கொண்டுச் செயல்படும் ‘சைக்கிளிங் யோகிஸ்’ (Cycling Yogis) என்ற குழுவினர் கடந்த 8 ஆண்டுகளாக சென்னை, சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பாராம்பரிய இடங்களுக்கு சைக்கிளில் பயணம் செல்வதைக் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சென்னையில் முதன்முறை
இந்த முயற்சிக்கு வித்திட்டவர் கொட்டிவாக்கத்தில் வசித்துவரும் பிரெஞ்சு மொழி ஆசிரியரான ராமனுஜர் மவுலானா. இவர் சென்னையைப் பற்றி வரலாற்று ஆய்வு செய்துவரும் ஆய்வாளர். இவர் கடந்த 2010-ம் ஆண்டிலிருந்தே குழுவாக சைக்கிள் பயணம் மேற்கொண்டுவருகிறார். அதன் தொடர்ச்சியாக நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து 2012-ம் ஆண்டு ‘சைக்கிளிங் யோகிஸ்’ என்ற குழுவைத் தொடங்கினார்.
“இந்தியாவில் முதன்முறையாக சைக்கிள் குழு சென்னையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னைக்கும் சைக்கிள் பயன்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், இப்போது உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் பலர் மீண்டும் சைக்கிள் ஓட்டத் தொடங்கியுள்ளனர்.
ஆரோக்கியத்துக்காக மட்டுமல்ல, நாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்களுக்காகவும் சைக்கிள் ஓட்டலாம். இளம் தலைமுறையினர் வரலாற்று சின்னங்கள் பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம். வரலாற்று சின்னங்களைப் பார்ப்பதற்கு மற்ற வாகனங்களில் செல்வதைவிட சைக்கிளை ஓட்டிக்கொண்டு நிதானமான தேடலோடு செல்வதே தனிசுகம்” என்கிறார் ராமானுஜர்.
இக்குழு தங்களுடைய முதல் சைக்கிள் பயணத்தை மத்திய கைலாஷிலிருந்து மாமல்லபுரம் வரை மேற்கொண்டது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசுத் தினம், சென்னைத் தினம், சர்வதேச தொல்லியல் தினம், உலகப் பாரம்பரிய தினம் உள்ளிட்ட நாட்களில் குழுவாக இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ராயபுரம் ரயில் நிலையம், துறைமுகம், வட சென்னை, மெரினா கலங்கரை விளத்திலிருந்து மாமல்லபுரம் கலங்கரை விளக்கம்வரை, தட்சிணசித்ரா, திருக்கழுக்குன்றம், பழவேற்காடு பறவைகள் சரணாலயம், செஞ்சி கோட்டை, வேலூர் கோட்டை, சித்தூர் சந்திரகிரி கோட்டை, காஞ்சி கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
தூரப் பயணம்
இந்த ஆண்டு இக்குழு தங்களுடைய பயணத்தை சென்னைக்கு வெளியே மேற்கொண்டது. சென்னையிலிருந்து கோயில் நகரமான கும்பகோணத்துக்கு அண்மையில் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர். அப்பகுதியைச் சுற்றியுள்ள நவக்கிரக கோயில்களைச் சுற்றிப் பார்ப்பதுதான் இந்தப் பயணத்தின் திட்டம். இதற்காக இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்ட குழு 250 கி.மீ பயணத்தை மேற்கொண்டது.
“கார் அல்லது பஸ் கண்ணாடி வழியாக ஒரு இடத்தைப் பார்ப்பதற்கும் சைக்கிளில் சென்று பார்ப்பதற்குப் பல வித்தியாசங்கள் உள்ளன. சைக்கிளில் செல்லும்போது அப்பகுதியில் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மை, நாகரிக வளர்ச்சிப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். எங்கள் பயணத்தில் 50-60 நபர்களுக்கு மேல் இணைத்துகொள்வதில்லை. ஒவ்வோர் ஆண்டும் புதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நாங்கள் செல்லும் வழியை முன்கூட்டிய க்யூஆர் கோட் ஆக்கி குழுவில் உள்ள அனைவரும் அளித்துவிடுவோம். இதனால் வழிமாறி சென்றுவிடுவார்கள் என அச்சப்படத் தேவையில்லை” என்கிறார் ராமனுஜர்.
சைக்கிள் பயணத்தையும் பாரம்பரிய சின்னங்களோடு முடிச்சுப் போட்டு மேற்கொள்வது சற்று புதுமையான முயற்சிதான். பாரம்பரியத்தின் மீது தீராப் பற்று வைத்துள்ளவர்களுக்கு இதுபோன்ற சைக்கிள் பயணம் இன்னும் இனிமையான அனுபத்தைத் தரும் என்று நம்பலாம்.
பாரம்பரிய சின்னங்களுக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ‘சைக்கிளிங் யோகிஸ்’ குழுவினரின் https://www.facebook.com/groups/cyclingyogis/ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை அணுகலாம்.