Published : 18 Feb 2020 13:05 pm

Updated : 18 Feb 2020 13:05 pm

 

Published : 18 Feb 2020 01:05 PM
Last Updated : 18 Feb 2020 01:05 PM

ஜம்முனு ஒரு ஜிம் தம்பதி!

gym-couple

வி. சாமுவேல்

ஒரு தம்பதி ஒரே துறையில் இருப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. எனினும், ஒரே துறையில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறார்கள். இளம் கணவன்மனைவி இருவரும் ‘ஜிம்’ பயிற்சியாளராக இருப்பதுதான் இதற்குக் காரணம்! தமிழக அளவில் ஜிம் பயிற்சியாளர்களாகக் கணவன்மனைவி இருப்பது இதுவே முதன் முறையாம்!

வேளச்சேரியில் உள்ளது இந்த இளம் தம்பதியின் ஃபிட்னஸ் மையம். இங்கே திவாகரும் இவருடைய மனைவி திவ்யாவும் ஜிம் பயிற்சியாளராக இருந்துவருகிறார்கள். சிறுவயதிலிருந்தே நண்பர்களான இருவரும், கல்லூரி நாட்களில் தங்கள் நட்பு காதலாக மலர்ந்தது என்கிறார்கள். சரி, எப்படி ஜிம் வட்டத்துக்குள் இருவரும் வந்தீர்கள் என்றதும் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக மாறிவிட்டது.

நீச்சல் டூ ஜிம்

“நான் ஒரு நீச்சல் வீராங்கனை. பள்ளியிலிருந்தே நீச்சல் பயிற்சியில்தான் ஈடுபட்டு வந்தேன். தேசிய அளவில் 8 முறை பங்கெடுத்துள்ளேன். 15 ஆண்டுகளாக நீச்சல்தான் என் வாழ்க்கையாக இருந்தது. ஒரு கட்டத்தில் அதிலிருந்து வெளியேற வேண்டிய நிலை வந்தது. எங்கள் திருமணத்துக்குப் பிறகு அவரோடு சேர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கினேன். அப்படியே ஜிம்முக்குள் வந்துவிட்டேன்” என்கிறார் திவ்யா.

ஜிம்தான் வாழ்க்கையை நடத்துவதற்கான வேலை என்று எப்படி முடிவு செய்தீர்கள் என்று திவாகரிடம் கேட்டேன். “எனக்கு உடற்பயிற்சியில் எப்போதுமே தீவிர ஆர்வம். நான் ஹைதராபாத்தில் மத்திய அரசு வேலையில் இருந்தேன். ஆனால், மனைவிக்கு சரியாக வேலை அமையவில்லை.

அப்போதுதான் இருவரும் சேர்ந்து சென்னையில் ஒரு வேலையில் ஈடுபடலாம் என்று முடிவெடுத்தோம். என் உடம்பை வைத்துக்கொண்டு நீச்சல் வீரராக முடியாது என்பதால், என் வழியில் வர திவ்யா ஒப்புக்கொண்டார். அதன்பிறகே 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சேர்ந்து ஜிம் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினோம்” என்ற திவாகர், “ ஜிம் பயிற்சியில் இன்று இவ்வளவு தூரம் வருவோம் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” என்று மனநிறைவாகக் கூறுகிறார்.

உதவும் புரிதல்

இருவரும் ஒரே துறையில் இருப்பதால், தாங்கள் விரும்பியபடி வாழ்க்கையைப் பரிமாறி வாழ்ந்துவருகிறது இந்தத் தம்பதி. இருவரும் ஜிம் பயிற்சியாளர்கள் என்பதால், வீட்டு வேலைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கின்றனர். “காலையில் திவாகர் சீக்கிரம் எழுந்துவிட்டால் சமையல் வேலைகளை அவரே செய்யத் தொடங்கிவிடுவார். நான் எழுந்தால், வீட்டு வேலை செய்யும்போது அவரும் சேர்ந்துகொள்வார்.

இந்தப் புரிதல் காரணமாக நாங்கள் இருவருமே ஜிம் பயிற்சியில் ஈடுபடுவது எளிதாக உள்ளது. கணவன் – மனைவியாக ஜிம் மையத்தை நாங்கள் நடத்திவருவதால், அதை மனத்தில் கொண்டே பலரும் ஆர்வத்துடன் பயிற்சி பெற இங்கே வருகிறார்கள். இதுவே எங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இது கடைசிவரை தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்கிறார் திவ்யா.

இன்று இளைஞர்கள், இளம் பெண்கள் என்று பலரும் ஜிம் பயிற்சியில் ஈடுபட ஆர்வம் காட்டிவருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன? “ சிலர் ‘சப்ளிமெண்ட்’ என்றழைக்கப்படும் புரதச்சத்து தரும் பானங்கள் மூலம் உடல்பருமன் அதிகரிக்கும் என்று தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஜிம் பயிற்சியில் உணவு மிகவும் முக்கியம். அதைச் சரியான நேரத்தில் எடுக்க முடியாதவர்களுக்கு இந்தப் பானங்கள் கொஞ்சம் உதவும் என்பதே உண்மை.

தற்போது வரும் உணவுப் பொருட்களில் சுத்திகரிப்பு என்ற பெயரில் சத்துகள் போய்விடுகின்றன. அதனால், ஜிம் பயிற்சிக்குச் செல்லும் இளைஞர்கள் முடிந்தவரை இயற்கையாய்க் கிடைக்கும் உணவை உண்பதே நல்லது” என்று இருவரும் அழுத்தமாகச் சொல்கிறார்கள்.


ஜிம்ஜிம் தம்பதிநீச்சல்தம்பதிகணவன்மனைவிபயிற்சியாளர்ஜிம் பயிற்சிGymGym Couple

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author