Published : 11 Feb 2020 12:45 PM
Last Updated : 11 Feb 2020 12:45 PM

விசில் போடு 18: இது காதல் தர்பாரு... இனிக்கும் சர்க்காரு

கண்ணில்லாதவங்க, கையில்லாதவங்க, காலில்லாதவங்க ஊருக்குள்ள உண்டு. ஆனா, காதல் இல்லாதவங்க உலகத்துல உண்டா? தன்னைவிட மூணு மடங்கு எடை அதிக முள்ள மூளையை வெறும் முன்னூறு கிராம் எடை யுள்ள இதயம் ஜெயிக்கிற வித்தைதான் காதல்.

நம்ம பசங்களோட பிரச்சனையே காதல் பண்ண தெரிஞ்சளவு, அதை எப்படிப் பண்ணணும்னு தெரியாததுதான். காதல் செய்யுறது பெட்டிக்கடை பிசினஸ் பண்ற மாதிரி. ஆனா, காதலை எப்படிச் செய்யறதுன்னு தெரிஞ்சுக்கிட்டு காதல் செய்யறது வட்டிக்கடை பிசினஸ் பண்ற மாதிரி.

காதல் செய்வதைவிட, காதலில் செய்ய வேண்டியது என்னன்னு தெரிஞ்சுக்கிறதுதான் முக்கியம். மாசத்துக்குப் பத்தாயிரம் சம்பாதிக்கிற பசங்களா இருந்தாலும் சரி, மணிக்குப் பத்தாயிரம் செலவு பண்ற பசங்களா இருந்தாலும் சரி, காதல்ல, வெரைட்டி வெரைட்டியா பிரச்சினை வரதுக்கு முக்கிய காரணமே, நம்ம கம்யூனிட்டிக்கு குறைஞ்சுபோன கிரியேட்டிவிட்டிதான். காதல்ங் கிற விதை எல்லோருக்கும் கையில கிடைச்சாலும், அதை வளர்க்குற விதத்துலதான், வளரப்போவது முள்ளுச்செடியா இல்ல மல்லிச் செடியான்னு தெரியும்.

அந்த லுக் இருக்கே..

கடைசி வரைக்கும் முரட்டு சிங்கிளா இருட்டு வாழ்க்கை வாழ்ந்து, வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல வாழ்நாள் உறுப்பினராக வேண்டிய நமக்கும், பேச்சிலர் பாலைவனத்தைக் கடந்து போனாலும் பரவாயில்லை, இவன் அதுல நடந்து வேற போறான்னேன்னு கருணைகாட்டி காதல்ங்கிற லிப்ட் கொடுக்கிற பொண்ணுங்களுக்கு பசங்களில் எத்தனை பேரு வாரம் தவறாம கிப்ட் கொடுக்கறீங்க? கீ-செயினோ கோல்ட் செயினோ, கிரெடிட் கார்டோ கிரீட்டிங் கார்டோ, கால் காசுக்காவது கிப்ட் வாங்கி பொண்ணுங்க ஃபீல் ஆகாம பார்த்துக்கணும். கிப்ட் கிடைக்காட்டியும் இன்னொருத்தன் கைக்கு ஷிப்ட் ஆகாம பொறுமை காக்கும் பொண்ணுங்களோட நல்ல உள்ளத்தைக் கிள்ளி வைக்கிறதா, அள்ளி கொஞ்சறதான்னு நீங்களே முடிவு செஞ்சுக்குங்க.

பத்தே நிமிஷம் பொண்ணுங்களோட பார்வையை உத்துப் பார்த்தா, குளிர்காலத்துலகூடப் பசங்களுக்கு வியர்வை வந்திடும். அந்தளவுக்கு, கண்ணுங்க ரெண்டுல பொண்ணுங்க விடுற லுக் எல்லாம், அஞ்சு லிட்டர் ஆல்கஹால் அடிச்சாலும் கிடைக்காத கிக்கு. இதயத்துல ஊஞ்சல் கட்டி இரு கையால ஆட்ட வேண்டிய இப்படிப்பட்ட ஏஞ்சல்கள எத்தனை பேரு மொபைல் ஸ்கிரீன்ல வால்பேப்பரா வைக்கறீங்க? லவ்வர் போட்டோனாவே அதை ‘சஸ்பென்ஸ் ஃபோல்டர்’ல போட்டு டிபன்ஸ் ஷாட் தானே விளையாடுறீங்க? பொண்ணுங்க கூட பாய்பெஸ்டியோட எடுத்த போட்டோவை ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்றப்ப, பசங்களெல்லாம் லவ்வர் பேர டாட்டூவா போடா வேணாமா? டிரங் & டிரைவ்வ பிடிக்கிற டிராபிக் ஏட்டுக்குப் பயந்ததைவிட, பசங்கலாம் அவங்கவங்க வீட்டுக்குப் பயந்ததுதானே அதிகம். காதல் நிலையத்துல தஞ்சமாகணும்னா, வீடு என்னும் காவல் நிலையத்துக்கு அஞ்சக் கூடாது.

சிரிப்பு..கடுப்பு..சலிப்பு

காலிங் பெல் அடிச்சதுக்குக் கதவைத் திறக்கப் போனாலும், ரோடு மேல வச்ச புள்ளிய சுத்தி கோடு வரைஞ்சு கோலம் போடப் போனாலும், நைட்டி மேல துண்டைப் போட்டு அதை ஷாலாக்கி, பார்க்கிற பெத்தவங்க மனச கூலாக்கி போற தேவதைங்கதான் தமிழ்நாட்டுப் பொண்ணுங்க. பிரமிடுக்குள்ள படுத்துக் கிடந்த மம்மிய தூக்கிவந்து பைக் பில்லியன்ல வச்ச மாதிரி, பைக்குல பிக்கப் பண்றப்ப துப்பட்டாவால பொண்ணுங்க தலைய சுத்தி பேன்டேஜ் போட்டுட்டு பஞ்சா பறக்கறீங்களே, அப்போ அந்தப் பொண்ணுங்களை பார்க்கிறப்ப, ஐடி ரெய்டு வந்த பில்டிங்ல சீல் வச்ச பூட்டு மாதிரி இருக்குங்க.

‘கில்லி’ பட திரிஷாவா வீட்டுக்குள்ள இருந்த பொண்ணை, ரோட்டுல பில்லி சூனியம் வைக்கிற பொம்மையாட்டம் கூட்டிப்போறீங்களேய்யா. இருபதாயிரத்துக்குக் கிடைக்குது செகண்டட் ஹான்ட் டாடா நானோ, அதுல வச்சு வெயில் படாம கூட்டி போகாத நாமெல்லாம் என்ன ஆணோ?

சூரியனுக்கே சர்பத் தேவைப்படுற வெயில் காலத்துலகூட, போர்வைய மேல போர்த்திக்கிட்டு உள்ளுக்குள்ள நயாகராவா வியர்வை வழிய வழிய, ஹஸ்கி வாய்ஸ்ல தஸ்கிபுஸ்கி, நம்ம சந்தோஷத்துக்காகத் தன்னைச் சங்கடப்படுத்திக்கிட்டு குசுகுசுன்னு போன்ல பேசுற பொண்ணுக்கெல்லாம் பாரத் ரத்னா விருது மாதிரி பாவரத்னா விருது கொடுக்கணும்.

ரொம்ப கஷ்டத்துல பேசுதேன்னுகூடப் புரிஞ்சுக்காம, உங்க இஷ்டத்துக்குச் சாப்பிட்டியா? என்ன சாப்பிட்ட? இட்லியா? எத்தனை சாப்பிட்டன்னு, கரண்ட் இல்லாத வீட்டுல இருட்டுல பெயிண்ட் அடிக்கிற மாதிரி மவுத்தால மொக்கையா கொட்டுற உங்களுக்கெல்லாம் பாவிரத்னாதான் கொடுக்கணும். பொண்ணுங்களுக்குப் பேசப் பிடிக்கும், ஆனா அதுக்கு நீங்க சிரிப்பு வர மாதிரி பேசணுமே தவிர கடுப்பு வர மாதிரியோ சலிப்பு வர மாதிரியோ பேசக் கூடாது.

காதலி மீது கண்

வீக் எண்டு பார்ட்டில லைட்டா போட்டாலும் சரி, ஓசியில கிடைக்குதேன்னு புல் டைட்டா போட்டாலும் சரி, மாசமான சம்பளம் தர மேனேஜரைக்கூடக் கண்டபடி ஏசலாம். பாட்டிலை எடுத்து பக்கத்துல இருக்கிறவன் மண்டைய நோக்கி வீசலாம், அட சைட் டிஷ்ஷ எடுத்து வேடிக்கை பார்க்கிறவங்க மூஞ்சிகளில்கூட பூசலாம். ஆனா, செல்போன எடுத்து லவ் பண்ணுற பெண்ணோட பேச மட்டும் கூடாது ராசா.

அப்புறம் உன் லவ் வாழ்க்கை ஆயிடும் பியூஸா. ‘டிபரெண்ட்’டான றெக்கை கொண்ட பட்டாம்பூச்சியகூட ‘டிரான்ஸ்ப்ரெண்ட்’ ரெக்கை கொண்ட தட்டாம்பூச்சியா மாத்திடும் போதை. பொண்ணுக்குப் புடிச்ச புள்ளபூச்சியா இருக்கணுமே தவிர என்னைக்கும் தொல்ல பூச்சியா நாம மாறிடக் கூடாது பாதை.

சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டு போனா பெண்ணோடா தலையில பேனை கூடப் பார்க்கலாமே தவிர, அது நயன்தாரா நடிச்சிருக்கிற சீனா இருந்தாலும் ஸ்க்ரீனை பார்க்கக் கூடாது. அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை பொண்ணுக்கு எஸ்.எம்.எஸ்ல ஸ்மைலிய போடணும், அரைமணிக்கு ஒன்டைம் வாட்சப்ல 'சுடிதார் போட்ட சேக்ஸபோனே, சேலை கட்டிய பாப்கார்னே'ன்னு கவிதையை போடணும். காலண்டர்ல இருக்கிற மகாலட்சுமியே, கால் டாக்சி ஏறி எதிர்ல வந்தாலும், டாப் கலர் டாப்ஸியை நமக்கு முன்னால நின்னாலும், நம்ம கண்ணானாது நாம காதலிக்கிற பெண் மேலதான் இருக்கனும். லைட்டா சபலமானாலும் உன் காதல் அவலமாகிடும்.

காதல் விளக்கு

ஸ்கூல் படிக்கிற சின்ன பொண்ணுங்க காலுல போட்டிருக்கிற கொலுசவிட கலகலப்பானதுய்யா, காலேஜ் படிக்கிற கன்னிப் பொண்ணுங்க மனசு. ரொம்பவே ஸ்மார்ட்டா இருக்கிற பசங்களுக்குகூடப் பொண்ணுங்க ஹார்ட்டை முழுசா புரிஞ்சுக்கத் தெரில. போகோ சேனல் பார்க்கிற பொண்ணுங்கக்கிட்ட என்ன வேண்டி கிடக்கு நமக்கு ஈகோ? காதலிங்க மனசெல்லாம் மாபெரும் தர்பாரு, அதைச் சரியா புரிஞ்சுக்கிட்டா நீங்க நடத்தலாம் காதல் சர்க்காரு.

காதலெனும் செங்கலை வச்சு, காதலிக்கும் பெண்களுக்காகக் குப்பை தொட்டி கட்டுறதும், குடிநீர் தொட்டி கட்டுறதும் அவரவர் நடத்தையில்தான் இருக்கு. அப்பவும் இப்பவும் எப்பவும் சொல்றது ஒன்னுதான், காதல் என்பது கையில கிடைச்ச விளக்கு. அதை அரிக்கேன் விளக்கா மாத்தறதோ, இல்ல, அலாவுதீன் விளக்கா மாத்தறதோ உன் கையிலதான் இருக்கு.

(சத்தம் கேட்கும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x