Published : 11 Feb 2020 12:30 PM
Last Updated : 11 Feb 2020 12:30 PM

ஒரு குப்பைக் கதை!

என். கௌரி

குப்பையை மறுசுழற்சி செய்வது எளிமையான விஷயமல்ல. ஆனால், இந்தக் கடினமான விஷயத்தைப் புதுமையாக அணுகியிருக்கிறார்கள் கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் நால்வர். விஷ்ணு, காவ்யா, கார்த்திக் சேதுராமன், ஆர். கீர்த்தனா ஆகியோர் தேவையில்லாத குப்பை என்று மக்கள் தூக்கியெறியும் பொருட்களைச் சேகரித்து, அவற்றைக் கலைப் படைப்புகளாக மாற்றிவருகின்றனர்.

அண்மையில், வி.ஆர். சென்னை மாலில் நடைபெற்ற மெட்ராஸ் ஆர்ட் கில்ட் கலை விழாவின் ஒரு பகுதியாக இவர்களின் கலைப் படைப்புகளும் இடம்பெற்றன. கடந்த ஆண்டு ‘இந்தியன் கார்பேஜ் கலெக்டிவ்’ (Indian Garbage Collective) என்ற பெயரில் நான்கு பேர் கொண்ட இக்குழு இயங்கிவருகிறது. நான்கு கண்காட்சிகள், 25-க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள், ‘குளோபல் இசை ஃபெஸ்டிவல்’ மேடை வடிவமைப்பு என அனைத்தையும் தேவையில்லை எனத் தூக்கியெறியப்பட்ட பொருட்கள், குப்பைகளிலிருந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

குப்பையின் மதிப்பு

இவர்கள் குப்பையிலிருந்து தட்டான், சிலந்தி வலை, தொட்டில் எனத் தங்கள் கலைப் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார்கள். “முதலில் குப்பையிலிருந்து இவற்றை உருவாக்க ஆரம்பித்த போது, கலைப் படைப்பு என்ற மதிப்பு கிடைக்குமா என்ற கேள்வி எங்களுக்கு இருந்தது.

ஆனால், இதுவரை நாங்க உருவாக்கிய எல்லாப் படைப்புகளுக்கும் கிடைத்த பாராட்டுகள், தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. எங்கள் கலைப் படைப்புகளைப் பெரும்பாலும் குப்பையிலிருந்து உருவாக்கியிருக்கிறோம் என்று தெரியாத அளவுக்கு நேர்த்தியுடன் வடிவமைக்க முயற்சித்து வருகிறோம்” என்கிறார் விஷ்ணு.

இவர்கள் எந்த இடத்தில் கலைப் படைப்புகளை உருவாக்குகிறார்களோ, அந்த இடத்தில் கிடைக்கும் குப்பைகள், தேவையில்லாத பொருட்களை வைத்தே ஒரு கருப்பொருளில் இவர்கள் படைப்புகளை உருவாக்குகிறார்கள். அப்படித்தான் தேவையில்லாத பிவிசி பைப், பழைய கம்பிகளில் இவர்கள் படைப்புகளை உருவாக்கிவருகிறார்கள்.

ரசிக்க கற்றுகொண்டேன்

காவ்யா, விஷ்ணு, கார்த்திக் ஆகியோர் கல்லூரியில் கீர்த்தனாவின் சூப்பர் சீனியர்ஸ். “அவர்கள் மூன்று பேரும் பணியாற்றுவதைப் பார்த்துதான் எனக்கும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தோன்றியது. நானும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று சொன்னவுடன் என்னைச் சேர்த்துக்கொண்டார்கள். ஒரு குப்பையை ரசிக்க முடியுமா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. ஆனால், குப்பையை மறுசுழற்சி செய்தால், அதை ரசிக்க முடியும் என்று தெரிந்துகொண்டேன்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் கீர்த்தனா.

குப்பைகளைக் கலைப்படைப்புகளாக மாற்றும் இவர்களின் உத்தி பிடித்துப்போய், பலரும் இவர்களைத் தங்கள் நிகழ்ச்சி, மேடை வடிவமைப்புகளுக்குப் படைப்புகளை உருவாக்கித்தர அணுகியிருக்கிறார்கள். “தேவையில்லை என்று நாம் தூக்கிப்போடும் பொருட்கள்தாம் பெரும்பாலும் சுற்றுச்சூழலில் மாசுபாட்டை உருவாக்கின்றன. அதுதொடர்பான மக்களுக்குப் புரிய வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தாம் நாங்கள் செயல்படுகிறோம்.

ஒரு பொருளோட பயன்பாடு முழுசா தெரியாததனால்தான் நாம் அதைத் தூக்கிப்போடுகிறோம். ஆனால், நம்மை சுத்தியிருக்கிற இடத்தோட உண்மையாகப் பழக ஆரம்பித்தால், நம்மால் எந்த ஒரு பொருளையும் தேவையில்லை என்று குப்பையாக நினைத்து அவ்வளவு எளிதில் தூக்கிப் போடமாட்டோம்” என்று அழுத்தமாகச் சொல்கிறார் விஷ்ணு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x